சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டு வெடித்து இறந்தவன் கூலிப்படை கொலைகாரனா?தனிப்படை போலீசார் விசாரணை

Added : நவ 05, 2010
Advertisement

திருப்பூர்: திருப்பூரில் குண்டு வெடித்து இறந்தவனின் அறையில் சிக்கிய சிம் கார்டுகளை வைத்து, அவனது தொடர்புகளை அறிய போலீசார் முயற்சித்து வருகின்றனர். துப்பாக்கிகள் கைபற்றப்பட்டதால், அவன் கூலிப்படை கொலைகாரனாக இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பிச்சம்பாளையம் ஸ்ரீநகர் நான்காவது வீதியில் வசித்தவன், ஜோசப் மகன் பாஸ்கரன் (41). தங்கியிருந்த அறையில், கடந்த 2ம் தேதி நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது, குண்டு வெடித்து உயிரிழந்தான். அவன் அறையில் போலீசார் நடத்திய தேடுதலில், இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 54 தோட்டாக்கள் சிக்கின. அத்துடன், ஐந்து சிம்கார்டுகளும் போலீசாருக்கு கிடைத்துள்ளன. கைப்பற்றப்பட்ட அவனது டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட சில ஆவணங்களில் சரியான தகவல்களே உள்ளன; குடும்பம் சார்ந்தவர்களிடம் மேற்கொண்ட விசாரணையிலும், பின்னணியில் தீவிரவாத இயக்கம் சார்ந்தவனாக இருக்க வாய்ப்பில்லை என போலீசார் உறுதியாக கூறுகின்றனர். அதேநேரத்தில், பட்டன், ஜிப், ஊசி போன்றவை விற்கும் சிறுதொழில் வியாபாரியாக இருந்த பாஸ்கரன், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தீவிரவாத இயக்கம் சாராதவனாக உள்ள பட்சத்தில், துப்பாக்கிகள் வைத்திருப்பதால் ரவுடி கும்பலை சேர்ந்தவனாகவோ, கூலிப்படை கொலைகாரனாகவோ இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். யார் மூலமாக அவனுக்கு துப்பாக்கிகள் கிடைத்தன; எப்போது அவன் அத்துப்பாக்கிகளை வாங்கினான்; அத்துப்பாக்கிகளை பயன்படுத்தி, யாராவது கொலை செய்யப்பட்டார்களா என்ற விவரங்களை கண்டறியும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அவனது அறையில் கிடைத்த ஐந்து சிம்கார்டுகளையும் வைத்து, அவனது தொடர்புகள் குறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இதுவரை அவனது தொடர்பில் இருப்பவர்கள் யார், எந்தெந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அவர்களின் பின்னணி என்ன என்பது குறித்து அறியும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். பாஸ்கரன் அறையில் சில தங்க நகைகளும் கிடைத்துள்ளதால் வழிப்பறி, செயின்பறிப்பு போன்ற குற்றங்களில் அவன் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. தலையில் வழுக்கை உள்ள அவன், "விக்' அணிந்தபடியும், சில நேரங்களில் "விக்' அணியாமலும் சென்று வருவதை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பார்த்துள்ளனர். எனவே, மற்றவர்களுக்கு தெளிவாக அடையாளம் தெரியாதபடி தன் தோற்றத்தை அவன் அடிக்கடி மாற்றிக் கொண்டதும் தெரியவந்துள்ளது. ஓராண்டாக, ஸ்ரீநகரில் வாடகை அறையில் தங்கியிருந்த பாஸ்கரனை சந்திக்க, நண்பர்களோ உறவினர்களோ யாரும் வந்ததில்லை என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது; தனது இருப்பிடத்தை வெளிப்படுத்தாத வகையில், பாஸ்கரன் ரகசியமாக தங்கியிருந்ததாகவே போலீசார் கருதுகின்றனர். இதனால், தமிழகத்தின் பிற பகுதிகளில் நடந்த குற்றச்சம்பங்களில் அவனுக்கு தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும், இதற்கென அமைக்கப்பட்டுள்ள இரு தனிப்படை பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X