புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தால், எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளான மத்திய அமைச்சர் ராஜா, நீண்ட இழுபறிக்குப் பின், தன் பதவியை நேற்றிரவு ராஜினாமா செய்தார். பார்லிமென்ட் இன்று கூடவுள்ள நிலையில், மத்திய அரசுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படுவதை தடுக்கவும், மத்திய அரசுடன் சுமுகமான உறவு நீடிக்கவும் கருணாநிதி இந்த முடிவை எடுத்தார்.கருணாநிதியின் உத்தரவையடுத்து, நேற்றிரவு டில்லி சென்ற அமைச்சர் ராஜா, பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
"2ஜி ஸ்பெக்ட்ரம்' அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ராஜா மீது, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் குற்றம் சாட்டியது. கடந்த வாரம் பார்லிமென்டில் இப்பிரச்னை கிளப்பிய பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், பார்லி., கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.அதேநேரத்தில், "இந்த விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டால், ஆதரவு அளிக்க தயார்' என, அ.தி.முக., பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்ததும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், மத்திய அமைச்சர் ராஜா, தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். "எனக்கு முன் அமைச்சராக இருந்தவர்கள் பின்பற்றிய நடைமுறையத் தான், நானும் பின்பற்றினேன். எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை' என, திட்டவட்டமாக கூறினார். தி.மு.க., மேலிடமும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது. இந்நிலையில், பார்லிமென்ட் கூட்டத் தொடர் இன்று மீண்டும் கூடவுள்ள நிலையில், "அமைச்சர் ராஜாவை பதவி நீக்கம் செய்யாதவரை, கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த அனுமதிக்க மாட்டோம்' என, பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் தெரிவித்தன. பா.ஜ., -மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இதில் தீவிரமாக இருந்தன.
மேலும், "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே நடந்த விசாரணையின்போது சி.பி.ஐ.,யின் நடவடிக்கைகளை சுப்ரீம் கோர்ட் கண்டித்தது. இதனால், இன்றைய விசாரணையிலும், மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் கடுமையான கருத்துக்களை தெரிவிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் டி.எஸ்.மாத்தூரும், அமைச்சர் ராஜாவுக்கு எதிராக நேற்று புகார்களை தெரிவித்தார். அது மத்திய அரசுக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.இதனால், பிரச்னைகளை சமாளிப்பதற்கான முயற்சியில் காங்கிரஸ் மேலிடம் நேற்று தீவிரம் காட்டியது. ராஜா விவகாரம் குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் டில்லியில் அவசர ஆலோசனை நடத்தினர். பின்னர் தி.மு.க.,விடமும் அவசர ஆலோசனை நடத்தினர்.
சென்னையில் முதல்வர் கருணாநிதியை நேற்று இருமுறை சந்தித்த அமைச்சர் ராஜா, மாலையில் டில்லி சென்றார். சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர், "வழக்கமாக தலைவரை சந்திப்பது போலத்தான் இன்றைய சந்திப்பு நடந்தது. நான் ராஜினாமா செய்யத் தேவையில்லை' என்று கூறிவிட்டு புறப்பட்டார். உடனிருந்த முன்னாள் அமைச்சர் டி. ஆர்.பாலு, "பொறுத்திருந்து பாருங்கள்' என்றார்.அதே சமயம், டில்லிக்கு தமிழக அரசின் பிரதிநிதியாக அனுப்பப்பட்ட அமைச்சர் துரைமுருகன், திடீரென சென்னை திரும்ப மேலிடம் உத்தரவிட்டது. தி.மு.க.,வில் முக்கிய முடிவை எடுக்கும் உயர்மட்டக்குழு நேற்று மாலை வரை கூடவில்லை என்றாலும், அரசியல் பரபரப்பு நீடித்தது. டில்லி சென்ற ராஜா, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க அவரது இல்லம் சென்றார். அவர் பிரதமர் வீட்டிற்கு செல்கிறார் என்றதுமே டில்லியில் பரபரப்பு கூடியது. அவர் ராஜினாமா செய்யப்போகிறார் என்று செய்தி வெளியானது. பல தரப்பிலும் எதிர்பார்த்தபடி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராஜா கூறுகையில்,""எனது கட்சி தலைவர் கருணாநிதி ஆலோசனையின் பேரில் பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளேன். என் மீது குற்றம் இல்லை என்பதை, பார்லிமென்ட்டிலும், நீதிமன்றத்திலும் நிருபிப்பேன் என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். பார்லிமென்ட்டில் எதிர்க்கட்சிகள் கிளப்பும் கேள்விகளுக்கு தக்க பதிலளிப்பேன். எனது பதவிக்காலத்தில் தொலை தொடர்புத் துறை மிகுந்த மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளது' என்றார்.
ராஜாவின் ராஜினமாவை ஏற்றுக்கொண்ட பிரதமர், தொலைதொடர்பு துறை இலாகாவை தன் வசமே வைத்துக்கொண்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
ராஜா ராஜினாமாவை தொடர்பாக தி.மு.க., தலைமை கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், "" பார்லிமென்ட்டின் ஜனநாயக நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறவும், நாட்டு மக்களுக்கு தேவையான பிரச்னைகள் விவாதித்து முடிவெடுக்கப்பட வழிவகுத்திடும் வகையில், ராஜா அமைசசர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமென்று தி.மு.க., முடிவெடுத்து அவருக்கு அறிவுறுத்தியுள்ளது,'' என, தெரிவிக்கப்பட்டது.
ராஜாவின் ராஜினாமாவை அடுத்து, கடந்த இரண்டு நாட்களாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது. ராஜா ராஜினாமா செய்துவிட்டாலும், ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து, பார்லிமென்ட் கூட்டு குழு விசாரணை தேவை என்ற கோரிக்கையில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி ஒப்புதல் : ராஜாவின் ராஜினாமாவை பிரதமர் மன்மோகன் சிங்கின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ஏற்று கொண்டார்.
"2ஜி ஸ்பெக்ட்ரம்' : வளர்ந்த கதை :
2007 மே 18 : தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவி ஏற்றார்.
ஆகஸ்ட் 28 : டிராய் (மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான சந்தை விலை நிர்ணயம் உள்ளிட்ட பரிந்துரைகளை தொலைத்தொடர்பு அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பியது.
ஆகஸ்ட் 28 : ராஜா தலைமையிலான மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் டிராயின் பரிந்துரைகளை அடியோடு நிராகரித்தது. மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட அதே நடைமுறையை பின்பற்ற முடிவு செய்தது. அதாவது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் சந்தை விலையாக ஜூன் 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை நிர்ணயம் செய்வதோடு, முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிப்பது என்ற நடைமுறையை பின்பற்ற முடிவு செய்தது. 2001ம் ஆண்டில் 40 லட்சம் மொபைல்போன் சந்தாதாரர்கள் இருந்தனர். ஆனால் 2007 முதல் 2008ம் ஆண்டு வரையிலான காலத்தில், மொபைல் போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 35 கோடியாக உயர்ந்திருந்தது. இதனால் 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை வசூலித்ததால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில்தனியார் நிறுவனங்கள் பெருமளவில் பயனடைந்து அரசுக்கு வரவேண்டிய நிதி வராமல் பெரும் நஷ்டம் ஏற்பட காரணமாக இந்த முடிவு அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
செப்டம்பர் 20-25 : "யூனிடெக்', "லூப்', "டாடாகாம்' மற்றும் "ஸ்வான்' ஆகிய நிறுவனங்கள், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமத்தை பெற்றன. இதில் "யூனிடெக்' மற்றும் "ஸ்வான்' ஆகிய இரு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத நிறுவனங்கள். இவை அமைச்சர் ராஜாவுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
2007 டிசம்பர்: இவ்விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சக அதிகாரி ராஜினாமா செய்தார், அப்போது, தொலைத்தொடர்புத்துறை அமைச்சக செயலாளர் ஓய்வு பெற்றுவிட்டார். "ஸ்வான்' நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரு அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டனர். இதன்மூலம் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு எளிதாக நிறைவேறியது.
2008 ஜனவரி 1-10: அமைச்சர் ராஜா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது முன்னாள் செயலாளராக பணியாற்றிய"சித்தார்த்தா பெகுராவை', தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் செயலாளராக நியமித்தார். பின்னர் தொலைத்தொடர்பு அமைச்சகம் 10 நாட்களில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கான ஒன்பது லைசென்ஸ் உரிமங்களை வழங்கியது. மேலே குறிப்பிடப்பட்ட நான்கு நிறுவனங்களும் ஒதுக்கீடு பெற்றன.
செப்டம்பர்-அக்டோபர்: "ஸ்வான்' நிறுவனம் தனது 45 சதவீத பங்குகளை "எட்டிசேலட்' என்ற ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த நிறுவனத்துக்கு ஏறத்தாழ 4,200 கோடி ரூபாய்க்கு விற்றது. யூனிடெக் நிறுவனம் தனது 60 சதவீத பங்குகளை டெலினார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்துக்கு 6,200 கோடி ரூபாய்க்கு விற்றது. தொலைதொடர்புத் துறை லைசென்சை 1,661 கோடி ரூபாய் மட்டுமே செலவழித்து "யூனிடெக்' நிறுவனம் வாங்கியிருந்தது. டாடா டெலிசர்வீசஸ் தனது 26 சதவீத பங்குகளை டோகோமோ என்ற ஜப்பான் நிறுவனத்துக்கு 13, 230 கோடி ரூபாய்க்கு விற்றது.
இந்த பங்குகளை யூனிடெக், ஸ்வான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 70,022.42 கோடி ரூபாய்க்கு விற்று பயனடைந்தன. ஆனால் தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு 10,772.68 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டது. இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்பது "2ஜி' உரிமத்தில் மட்டும் 60,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் ஜனவரி, 2008ம் ஆண்டு வரையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மொத்தமாக 2001ம் ஆண்டு விலை நிர்ணயத்தின்படி 122 லைசன்ஸ் வழங்கி உள்ளது.
நவம்பர் 15 : மத்திய தலைமை விஜிலென்ஸ் கமிஷன் அமைச்சர் ராஜாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இது தொடர்பான தனது விரிவான அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியது.
2009 அக்டோபர் 21 : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இந்த முறைகேடு தொடர்பாக நவம்பர் 29, 2008 , அக்டோபர் 31, 2009 , மார்ச் 8, 2010 , மார்ச் 13, 2010 ஆகிய தேதிகளில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி கடிதங்களை எழுதி உள்ளார்.
2010 ஏப்ரல் 12 : சுப்ரமணிய சுவாமி டில்லி ஐகோர்ட்டில் "ரிட்' மனு தாக்கல்.
அக்டோபர் 29 : மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.,க்கு "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில், மந்தமாக செயல்படுவதாக கூறி சுப்ரீம்கோர்ட் தனது கண்டனத்தை தெரிவித்தது. "இதேபோன்ற நடைமுறையை தான் அனைத்து வழக்கிலும் கடைப்பிடிப்பீர்களா', என்று சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியது.
நவம்பர் 10: மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம், மத்திய நிதி அமைச்சகத்திடம் இதுதொடர்பான அறிக்கை ஒன்றை சமர்பித்தது. அந்த அறிக்கையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகள் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதனால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 11: மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்தவித முறைகேடும் நடைபெற வில்லை எனவே இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை என்று தெரிவித்தது.
நவம்பர் 14: ராஜா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜா: வாழ்க்கைக் குறிப்பு :
பெயர்: ஆ. ராஜா
பிறந்த இடம்: பெரம்பலூர்
தந்தை: எஸ்.கே.ஆண்டிமுத்து
தாயார் : சின்னப்பிள்ளை
பிறந்ததேதி: 1963 அக்டோபர் 5.
கல்வி தகுதி: பி.எஸ்.சி., மற்றும் எம்.எல்.,
மனைவி : எம்.ஏ.பரமேஸ்வரி
குழந்தைகள்: மகள் மயூரி
கட்சி: தி.மு.க.,
தொகுதி: நீலகிரி
வகித்த பதவிகள்: 1996ல் பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி., ஆனார். 1999 லோக்சபா தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சரானார். பின்னர் குடும்ப நலம் மற்றும் சுகாதார அமைச்சராக பதவி வகித்தார்.
2004 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று ( 2004 மே 23 - 2007 மே 17,) மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரானார். பின்னர் 2007 மே 18ல் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக பொறுப்பேற்றார். கடந்த 2009 மே 31ல் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இரண்டாவது முறையாக மீண்டும் பொறுப்பேற்றார்.
கட்சித் தலைமையிடத்தில் அவருக்கு இருந்த செல்வாக்கால், வட்டார அளவில் செல்வாக்குப் பெற்றிருந்த அவர், மத்திய அமைச்சராகும் அளவுக்கான தகுதியை குறுகிய காலத்தில் பெற்றார். இலக்கியத்தில் ராஜாவுக்கு இருந்த திறமைதான் கட்சித் தலைவர் கருணாநிதியிடம் அவர் நெருக்கமாகக் காரணமாக அமைந்தது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளில் அவருக்கு நெருக்கடி இருந்த போதிலும், கட்சித் தலைமையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.