ராமநாதபுரம் : மதுரை வாடிபட்டி அருகே கொலையான ஆதிலாபானு வழக்கில், முக்கிய குற்றவாளிகள் மலேசியாவிற்கு தப்பி ஓடிவிட்டதாக தனிப்படை போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஆதிலாபானு(24) தனது இரண்டு குழந்தைகளுடன் நவ., 8ல் மதுரை வாடிபட்டி அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலை குற்றவாளிகளை பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், மூன்று தனிப்படைகள் வெவ்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றன.
ராமநாதபுரத்தில் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான தனிப்படை விசாரணையில், ஆதிலாபானுவை கொலை செய்ததற்கான நோக்கம் குறித்து உறுதிபடுத்த முடியாத நிலையில், வழக்கில் சந்தேகமான முக்கிய நபர்கள் மலேசியாவிற்கு தப்பி ஓடிவிட்டது தெரியவந்துள்ளது. மேலும் ஆதிலாபானுவின் தாயாரிடம் நடத்திய விசாரணையில், கிடைத்த தகவல்களை உறுதி செய்வதற்கான சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாததால், குற்றவாளிகளின் கொலை நோக்கத்தை உறுதிபடுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர். இந்நிலையில், மலேசியாவிற்கு தப்பி சென்ற நபர்களை வரவழைப்பதற்கான முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். "கொலை குற்றவாளிகளை ஓரிரு தினங்களில் பிடித்து, உண்மையான காரணங்களை கண்டுபிடித்துவிடுவோம்' என, தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.