ராமநாதபுரம் : மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த ராமநாதபுரம் பெண் ஆதிலாபானு கொலை வழக்கில், அவர் மலேசிய குடியுரிமை பெற்றிருப்பதால், குற்றவாளிகளை கைது செய்ய அந்நாட்டு போலீசார் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் குப்பன்வலசையை சேர்ந்த முத்துச்சாமியை, சாத்தான்குளத்தை சேர்ந்த ஆதிலாபானு(24) காதலித்து திருமணம் செய்தார். மதம் மாறிய முத்துச்சாமி தனது பெயரை அகமது என மாற்றிக்கொண்டார். வேலைக்காக மலேசியா சென்ற முத்துச்சாமி, தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் அழைத்து சென்றார். தாய் ஹம்சத் நிஷாவை பார்ப்பதற்காக ஆதிலாபானு அடிக்கடி இந்தியா வந்து சென்றார். ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள வீட்டிலிருந்த இவர், கடந்த நவ., 8ல் குழந்தைகளுடன் மாயமான நிலையில், மதுரை வாடிப்பட்டி அருகே கால்வாயில் உடல்கள் கிடந்தது.
இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவர் மூலம் கொலையாளிகள் குறித்து தகவல் கிடைத்தது. சாத்தான்குளத்தை சேர்ந்த சாகுல் என்பவர் இந்த சம்பவத்தில் தலைமையேற்றதும்,இவருக்கு உதவியாக ஜெயக்குமாரின் உறவினர் முனியசாமி, முகமது ஹர்ஷத், மணிகண்டன் ஈடுபட்டதும் தெரியவந்தது. குற்றவாளிகள் போலி பெயரில் மலேசியா தப்பிச்சென்றதும் உறுதிசெய்யப்பட்டது. இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குற்றவாளிகளை பிடிக்கும் நடவடிக்கையில் வாடிப்பட்டி, ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் களமிறங்கினர். கொலை செய்யப்பட்ட மூவரும் மலேசிய குடியுரிமை பெற்றிருப்பதால், மலேசிய போலீசார் சாகுலை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக போலீசார் தெரிவித்தனர். முனியசாமி சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால், தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.