ஊழல் தடுப்பில் எங்களைப் போல செயல்படுங்கள்: சோனியா "அட்வைஸ்| Dinamalar

ஊழல் தடுப்பில் எங்களைப் போல செயல்படுங்கள்: சோனியா "அட்வைஸ்'

Added : நவ 25, 2010 | கருத்துகள் (115)
ஊழல் தடுப்பில் எங்களைப் போல செயல்படுங்கள்: சோனியா "அட்வைஸ்'

அலகாபாத் : ""ஊழல் தடுப்பு நடவடிக்கையில் எங்களைப் போல செயல்படுங்கள்,'' என, எதிர்க்கட்சிகளுக்கு சோனியா அறிவுறுத்தியுள்ளார்.


உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழாவையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் சோனியா பேசியதாவது: மன்மோகன் சிங் அரசின் நடவடிக்கைகள் ஒளிவு மறைவில்லாதவை. பாமரர்களின் நலனுக்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பாடுபடுகிறது. ஊழலற்ற நிலையை ஏற்படுத்த அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் தடையாக இருக்கக்கூடாது என்பதில் மிகவும் அக்கறை கொண்டிருக்கிறோம். ஊழல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசு, ஊழல் செய்வதாக கூறும் எதிர்க்கட்சிகள், தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் நடக்கும் ஊழல்களை கண்டு கொள்வதில்லை. அவர்கள் கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றன. எனவே, இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடிமகனின் வாழ்வும் வளம் பெற வேண்டும், என்பது தான் எங்களின் விருப்பம்.


உத்தரபிரதேசத்தில் எந்தவித பாகுபாடும் இன்றி பல நலத்திட்டங்களுக்காக 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடித்தட்டு மக்கள் உயரவேண்டும், என்பது தான் எங்கள் நோக்கம். மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி உரிய முறையில் மக்களுக்கு சென்று சேர வேண்டும். ஆனால், உ.பி.,யில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. மேல் மட்டத்திலிருந்து அடி மட்டம் வரை ஊழல் மயமாக உள்ளது. இவ்வாறு சோனியா பேசினார்.


இது குறித்து, உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி குறிப்பிடுகையில், "இந்த மாநிலத்தை 40 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தது காங்கிரஸ் தான். அடிப்படை வசதியில்லாமல் போனதற்கு காங்கிரஸ் கட்சி தான் பொறுப்பு. அரசியலமைப்பின்படி மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியைத்தான் மத்திய அரசு ஒதுக்கி வருகிறது. தனிப்பட்ட முறையில் இந்த மாநிலத்துக்கு காங்கிரஸ் அரசு எதுவும் செய்து விடவில்லை. உத்தரபிரதேசத்துக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்க வேண்டும். ஆனால், இதுவரை 16 ஆயிரம் கோடி ரூபாய் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.


பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கர் குறிப்பிடுகையில், "2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை தடுக்கத் தவறிய பிரதமர் குற்றம் செய்தவராவார். இந்த விஷயத்தில் அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த லோக்சபா தேர்தலில் எங்களை குறை கூறிய காங்கிரஸ் கட்சி, தற்போது பீகாரில் மண்ணை கவ்வியுள்ளது. கர்நாடகா விவகாரத்தில் எங்களை குறை கூறும் சோனியா, ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை செய்ய பார்லிமென்ட் கூட்டுக் குழுவை அமைக்க தயங்குவது ஏன்?' என்றார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X