பந்தல்குடி : அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி ஒன்றிய துவக்க பள்ளிகளில், மாணவர்களிடம், "பைபிள்' வழங்குவதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தெற்கு, வடக்கு பள்ளிகளில் 550 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த நவ.16ல், தூத்துக்குடியிலிருந்து வந்த கிறிஸ்தவ "மிஷினரி'யினர், மாணவர்களிடம், பைபிள் புத்தகம் வழங்கினர். இதை படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்று பிரசாரம் செய்தனர். புத்தகத்தின் கடைசியில் இருக்கும் உறுதிமொழி படிவத்தில் மாணவர்களை கையெழுத்திட கூறினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் கூறியவை:
சிவலிங்கம்: மூன்று ஆண்டுகளாக, மத புத்தகங்களை கட்டாய படுத்தி கொடுக்கின்றனர். மதம் மாற்ற முற்படுகின்றனர். இது குறித்து கேட்டால், "இனி தரமாட்டோம்' என்கின்றனர்.
கருப்பசாமி: சில ஆசிரியர் களால் இந்த தவறு நடக்கிறது. தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கேட்டபோது "புத்தகங்களை எடுத்து செல்லுங்கள், பிரச்னை செய்யாதீர்கள்' எனக்கூறினார்.
ராகவன், (தலைமை ஆசிரியர், தெற்கு பள்ளி): மதம் பற்றிய புத்தகங்களை கொடுத்தது தவறு தான். அனைவருக்கும் கல்வி இயக்க மற்றும் கற்றல் வழி புத்தகங்களை இலவசமாக தர வருவர். அது போல என நினைத்து பார்க்காமல் விட்டு விட்டேன். "பைபிள்' என தெரிந்ததும் அவற்றை வாங்கி வைத்து விட்டேன். இனிமேல் இதுபோல நடக்காது.
நாகலட்சுமி, (தலைமை ஆசிரியை, வடக்கு பள்ளி): மத சம்பந்தமான புத்தகங்களை கொடுக்க அனுமதிக்க கூடாது என்று எனக்கு தெரியாது. பெற்றோர் கூறிய பிறகு அவற்றை வாங்கி திருப்பி கொடுத்து விட்டோம். பெற்றோரிடமும் மன்னிப்பும் கேட்டோம்.
அருப்புக்கோட்டை கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் நாகராஜன்: தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில், உயரதிகாரிடம் தெரிவித்த பின் செய்யுங்கள் என்று பலமுறை கூறி வருகிறோம். மத புத்தகம் வழங்கல் பற்றி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். அதிகாரி விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE