சென்னையில் பிரதான சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு : அமெரிக்க தூதரக அலுவலகத்தில் தாக்குதல் ஒத்திகை

Added : டிச 03, 2010 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் நடத்தினால், அதை முறியடிப்பது எப்படி, என்பது தொடர்பாக சென்னை போலீஸ் நடத்திய பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியால், முக்கிய சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். சென்னை அண்ணாசாலையில், ஜெமினி மேம்பாலம் அருகில் பிற்பகல் 2 மணியளவில் திடீரென அதிகளவில் போலீசார்
சென்னையில் பிரதான சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு : அமெரிக்க தூதரக அலுவலகத்தில் தாக்குதல் ஒத்திகை

சென்னை : பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் நடத்தினால், அதை முறியடிப்பது எப்படி, என்பது தொடர்பாக சென்னை போலீஸ் நடத்திய பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியால், முக்கிய சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.


சென்னை அண்ணாசாலையில், ஜெமினி மேம்பாலம் அருகில் பிற்பகல் 2 மணியளவில் திடீரென அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்பகுதியை சுற்றிலும் உள்ள, கதீட்ரல் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள், அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அண்ணா சாலை முழுவதும் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. என்ன நடக்கிறது என்பதே தெரியாத நிலை ஏற்பட்டது. இடையில், முதல்வரின் உடல்நிலை உட்பட பல்வேறு வதந்திகளும் பரவின. வெகு நேரத்திற்குப் பின், அமெரிக்க தூதரக அலுவலகத்தில், பயங்கரவாதிகள் நுழைந்து விட்டால், அவர்களை தடுப்பது எப்படி, என்பது தொடர்பான போலீசாரின் ஒத்திகை நிகழ்ச்சியால் ஏற்பட்ட களேபரம் என்பது தெரியவந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடந்த இந்த ஒத்திகையால் நேற்று சென்னை நகர மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர்.


ஒத்திகை நிகழ்ச்சி குறித்து, சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினால் அதை தடுப்பது எப்படி என்பது குறித்த பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு சென்னை மாநகர் போலீசை, அமெரிக்க தூதரக அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதன்படி, அமெரிக்க தூதகரகத்தின் கதீட்ரல் சாலை வாயில் வழியாக ஆறு பயங்கரவாதிகள் நுழைந்து விட்டதாகவும், அவர்கள் வாசலில் வெடிகுண்டை வெடிக்கச் செய்து, பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் தூதரக அலுவலகத்தில் இருப்பதாகவும் போலீசிற்கு பிற்பகல் 2 மணிக்கு தகவல் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு கமாண்டோ போலீஸ் படையில் இருந்து 50 பேர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வரவழைக்கப்பட்டனர்.


தூதரக அலுவலகத்தின் அருகில் உள்ள சர்ச்சில்,"இன்சிடன்ட் கமாண்டிங் சென்டர்' நிறுவப்பட்டது. அதற்கு கமாண்டிங் அதிகாரியாக கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர் செயல்பட்டார். கமாண்டோ போலீஸ் பிரிவில் இருந்து எட்டு வீரர்கள், சர்ச் வளாகத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து தூதரக அலுவலகதிற்கு சென்று, அங்கு பயங்கரவாதிகள் போல் பதுங்கியிருந்த ஆறு பேரையும் பிடித்து, அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், வெடிபொருட்களை கைப்பற்றினர். அவர்களுக்கு உதவியாக, சென்னை போலீசின் அதிரடிப் படை போலீசார், போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். வெற்றிகரமாக முடிக்கப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சி, 45 நிமிடங்கள் நடந்தது. ஒத்திகை முடிந்ததும், எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து விவாதித்தோம். இதை எப்படி இன்னும் சிறப்பாக நடத்தலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்ந்து, இந்த ஒத்திகை நிகழ்ச்சியை பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு நடத்தலாமே? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, கமிஷனர் ராஜேந்திரன்,""அசம்பாவிதங்கள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். மக்கள் கஷ்டப்பட்டுதான் ஆக வேண்டும். உண்மையாகவே தாக்குதல் சம்பவம் நடந்தால், 16 லிருந்து 20 மணிநேரம் வரை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும்; இப்போது இரண்டு மணி நேரம் தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தவிர்க்க முடியாத ஒன்று,'' என்று பதிலளித்தார். ஆனால், பகல் 2 மணிக்கு துவங்கி இரவு 8 மணி வரை, அண்ணாசாலை, கதீட்ரல் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கிரீம்ஸ் சாலை, எத்திராஜ் கல்லூரி சாலை உள்ளிட்ட சென்னை நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வாகன நெரிசலால் திணறிப் போயின. போக்குவரத்து அதிகம் இல்லாத, ஞாயிறு அன்று இந்த ஒத்திகையை நடத்தி போலீசார் சோதித்து பார்த்து இருக்கலாமே என பொதுமக்கள் புலம்பினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முத்துக்குமார் - பெங்களூர்,இந்தியா
04-டிச-201007:08:51 IST Report Abuse
முத்துக்குமார் எதிர்பாராத அசம்பாவிதங்களுக்கு (தீவிரவாத செயல்) இந்த மாதிரி ஒத்திகைகள் அவசியம். இந்த ஒத்திகை ஒரு நல்ல முன்னேற்பாடு. இந்த ஒத்திகையில், போக்குவரத்தையும் உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும். இதுவும் ஒத்திகையின் ஒரு பகுதியே. இந்த முறை நடந்த ஒத்திகையில் காவல்துறை, போக்குவரத்து மாற்றத்தை சரியாக கையாளவில்லை என்பதை ஒத்துக்கொண்டு அதை சரி செய்வதற்கு உண்டான ஆக்கபூர்வமான கலந்துரையாலை நடத்தவேண்டும். அதைவிடுத்து கமிஷனர் ராஜேந்திரன், "அசம்பாவிதங்கள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். மக்கள் கஷ்டப்பட்டுதான் ஆக வேண்டும். உண்மையாகவே தாக்குதல் சம்பவம் நடந்தால், 16 லிருந்து 20 மணிநேரம் வரை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும்; இப்போது இரண்டு மணி நேரம் தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தவிர்க்க முடியாத ஒன்று,'' என்று பதிலளித்திருப்பது emergency யின் போது போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது என்பது காவல்துறையின் கடமையல்ல என்பது போல உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X