சென்னை : "நான் திடீரென சென்ற காரணத்தால், செம்மொழிப் பூங்காவை காண வந்த மக்கள் கூட்டம் என்னை மொய்த்துக் கொண்டது' என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது கேள்வி-பதில் அறிக்கை:
மாற்றுத் திறனாளிளுக்கு 3 சதவீத வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், வாரியக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்றும் ஒரு சில தலைவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்களே?
இதுவரை நலவாரியக் கூட்டங்கள் ஒன்பது முறை நடைபெற்றுள்ளது. மொத்தம் 4,904 பேருக்கு நலவாரியத்தின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ், 261 லட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள் ளன.மாற்றுத் திறனாளிகளை நான் ஏமாற்றுவதாக எத்தனை பேர் அறிக்கை கொடுத்தாலும், அதை எந்த மாற்றுத் திறனாளியும் நம்புவதற்கு தயாராக இல்லை.
தாங்கள் சேலத்தில் குடியிருந்ததைப் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். கோவையில் குடியிருந்ததைப் பற்றிச் சொல்லவில்லையே?
புதுவையில் கட்சி பிரசாரக் கூட்டத்திற்கு சென்ற நான், ஒருசிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, இறந்து விட்டதாகக் கருதி அவர்கள் சாலையோரத்தில் தூக்கிப் போட்டு விட்டுச் சென்று விட்டனர். அந்த நேரத்தில் ஈ.வெ.ரா., எனக்கு ஆறுதல் கூறி என்னை அவருடன் ஈரோட்டிற்கு அழைத்துச் சென்று, குடியரசு வார இதழுக்கு துணை ஆசிரியனாக இரு என்று பணித்தார்.அப்போது அதற்காக எனக்காக மாதம் 40 ரூபாய் சம்பளம். மதியம் சாப்பிடுவதற்காக 20 ரூபாய், காலைச் சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் ஆகிவிடும். இதர செலவுக்காக ஐந்து ரூபாயை வைத்துக் கொண்டு, மீதம் ஐந்து ரூபாயை திருவாரூரில் இருந்த என் மனைவி பத்மாவிற்கு மாதந்தோறும் மணியார்டர் செய்வேன்.திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியமைக்காக அப்போது 20 ஆயிரம் ரூபாய் ஊதியமாகக் கிடைத்த போது, அந்தத் தொகையைக் கொண்டு திருவாரூருக்குப் பக்கத்தில் உள்ள காட்டூர் கிராமத்தில், அந்த இளம் வயதிலேயே நன்செய் நிலம் ஒன்று வாங்கி குத்தகைக்குக் கொடுத்திருந்தேன். பின், நான் முதல்வராக இருந்த போது லண்டன் சென்றிருந்தேன்.அப்போது பெர்குசன் கம்பெனியின் சார்பில், நண்பர் சிவசைலம் எனக்கு லண்டனில் ஒரு டிராக்டர் அன்பளிப்பாகக் கொடுத்தார். அதை நான் அப்போதே கோவையில் உள்ள விவசாயப் பல்கலைக் கழகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டேன். ஆனால், அந்த டிராக்டரை நான் காட்டூர் வயலுக்காக எடுத்துச் சென்று விட்டதாக பெரிய அளவில் குற்றம்சாட்டி புகார் மனு கொடுத்தனர்.
திடீரென சென்னையிலே புதிதாக திறக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவிற்கு மக்களோடு மக்களாக நீங்களும் வருகை தந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து விட்டீர்களே?
கடந்த 24ம் தேதி திறந்து வைத்தோமே எவ்வாறு உள்ளது. மக்கள் வருகிறார்களா? என கண்டு வரலாம் என்றெண்ணி, முன்கூட்டியே யாருக்கும் தெரிவிக்காமல் திடீரென செம்மொழிப் பூங்காவிற்குச் சென்றேன். முன்கூட்டியே தெரிவித்திருந்தால், காவல் துறையினர், முதல்வர் வருகிறார் என்பதற்காக பொதுவாக வருகின்ற மக்களைத் தடுத்து நிறுத்தி இருப்பார்கள். அதற்கு வாய்ப்பளிக்காமல் நான் திடீரென சென்றதால், செம்மொழிப் பூங்காவைக் காண வந்த மக்கள் கூட்டம் என்னை மொய்த்துக் கொண்டது.மலர்களையும், கொடிகளையும், செடிகளையும் காணச் சென்ற என்னைச் சுற்றி மழலைகளும், அவர்களது பெற்றோர்களும், வயதானவர்கள் கூடிக் கொண்டு அளித்த வரவேற்பு இருக்கிறதே, அது மறக்க முடியாத ஒன்று.சாதாரண மக்கள் நம்மிடம் எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை பரிபூரணமாக அப்போது காண முடிந்தது. மல்லிகை, ரோஜாக்களைப் பூங்காவில் கண்டேன். அந்த மலர்ந்த பூக்களை அங்கேயிருந்த மக்களின் முகத்திலும் கண்டேன்.அந்த மழலைச் செல்வங்கள் "தாத்தா, தாத்தா' என என்னை சூழ்ந்து கொண்டு கைகொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். என் கை வலிக்க, வலிக்க அந்த குழந்தைகள் தங்களின் சிறு கரங்களால் குலுக்கினர்.அந்த வரிசையில் ஒன்றரை வயது குழந்தை திடீரென தன் கையை இழுத்துக் கொண்டது. "ஏன் நீ கை கொடுக்கவில்லை' என ஆச்சரியத்தோடு நான் கேட்ட போது, "தாத்தா, நான் ஐஸ்கிரீம் சாப்பிட்டேன். கை டர்டியாக உள்ளது. உங்கள் கை கெட்டுவிடும் அல்லவா?' என்றுரைத்தது.இன்னொரு சிறுமி, "தாத்தா, எனக்கு ஓட்டு இல்லா விட்டால் என்ன, நான் உங்களுக்காக கேன்வாஸ் செய்வேன் அல்லவா?' என்றது. வயதிலே மூத்தவர்கள் எல்லாம், "அய்யா நல்லா இருக்கீங்களா? முதல்வராக இருந்துட்டு இப்படியெல்லாம் கூட்டத்திற்குள் வரலாமா?' என்றும், "தலைவரே, நாங்கள் ஆயிரம்விளக்கு தொகுதி தான். எங்க குடும்பமே உங்களுக்குத் தான் சொந்தம்' என உரிமை கொண்டாடினர்.உள்ளத்தில் எந்தவிதமான களங்கமும் இல்லாத அந்தக் குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மத்தியில் அரை மணி நேரம் தான் இருந்திருப்பேன். அன்றிரவு முழுவதும், "இந்த மக்கள் தான் இந்த வயதில் நம்மிடம் எந்த அளவிற்கு பாசமாக இருக்கிறார்கள்' என்பதை நினைத்து, தூங்காமல் அதையே எண்ணிக் கொண்டிருந்தேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE