ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, டில்லியிலும், தமிழகத்திலும் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி முடித்துள்ள நிலையில், முதல்வர் கருணாநிதி நேற்று ராஜாவை சென்னைக்கு அழைத்து விளக்கம் கேட்டார். "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது, சி.பி.ஐ., ரெய்டில் நடந்தது என்ன?' என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, முதல்வர் விரிவாக விசாரணை நடத்தினார்.
ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் காரணமாக, 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியதை அடுத்து, சி.பி.ஐ., களத்தில் இறங்கியது. கடந்த 8ம் தேதி, முன்னாள் அமைச்சர் ராஜா, அவரது முன்னாள் உதவியாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரது வீடுகளிலும், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். டில்லி, சென்னை, பெரம்பலூர் என 14 இடங்களில் நடந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்களையும், பண பரிமாற்றம் தொடர்பான ராஜாவின் முக்கிய டைரி ஒன்றையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைப்பற்றினர். சி.பி.ஐ., நடவடிக்கையால், முதல்வர் கருணாநிதி கடும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், ராஜாவை அழைத்து முதல்வர் விரிவாக விசாரணை நடத்தினார்.
சி.ஐ.டி., காலனியில் உள்ள இல்லத்தில் முதல்வர் கருணாநிதியை, நேற்று காலை ராஜா சந்தித்தார். சந்திப்பின் போது, ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியும், சி.பி.ஐ., ரெய்டு குறித்தும், அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், முதல்வர் விளக்கம் கேட்டறிந்தார். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், அடுத்த கட்டமாக ராஜாவை அழைத்து விசாரணை நடத்தி, அவர் தரும் பதில்களின் அடிப்படையிலும், சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ராஜாவை விசாரணைக்கு அழைத்தால், அடுத்து என்னென்ன விளைவுகள் ஏற்படும், அதனால் யார், யார் சிக்குவார்கள், டைரியில் யார், யாருடைய பெயர்கள் எல்லாம் இருக்கின்றன, விசாரணையை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும், முதல்வர் விரிவாக விவாதித்ததாக தெரிகிறது. சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் மக்கள் மத்தியில் ஆளுங்கட்சிக்கு பெரிய இழப்பு ஏற்படுமோ என்று, தி.மு.க., தலைமை அஞ்சுகிறது. இதனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தடுத்து பெரிய நெருக்கடி ஏற்பட்டால், கட்சியில் ராஜா வகித்து வரும் கொள்கை பரப்பு செயலர் பதவிக்கும் ஆபத்து வரலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைக்கு தயார்: நேற்று முன்தினம் இரவு 12.10 மணிக்கு, டில்லியில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் ராஜா, சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் பேட்டியளிக்கும்போது,"ஸ்பெக்ட்ரம் புகார் குறித்த சி.பி.ஐ., விசாரணை என்பது வழக்கமான நடைமுறை. சி.பி.ஐ.,யின் இந்த நடவடிக்கைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்து, குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்' என்றார்.