சென்னை : ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சுதர்சன நாச்சியப்பன், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று மனு தாக்கல் செய்தார். இன்று நடக்கும் மனு பரிசீலனையில், நான்கு சுயேச்சைகளின் மனுக்கள் நிராகரிக்கப்படும் என்பதால், அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் ஆறு பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அந்த இடங்களை நிரப்ப தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மனு தாக்கல், கடந்த 31ம் தேதி துவங்கியது. தி.மு.க., சார்பில், தங்கவேலு, செல்வகணபதி, கே.பி.ராமலிங்கம் ஆகிய மூவரும், அ.தி.மு.க., சார்பில் பால் மனோஜ் பாண்டியன், கே.வி.ராமலிங்கம் ஆகிய இருவரும், சுயேச்சைகள் நான்கு பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சுதர்சன நாச்சியப்பன் நேற்று மதியம் 12:05 மணிக்கு, முதல்வர் கருணாநிதி முன்னிலையில், தேர்தல் அதிகாரி செல்வராஜிடம் மனு தாக்கல் செய்தார். அப்போது துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் சட்டசபை தலைவர் சுதர்சனம், முன்னாள் மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், திருநாவுக்கரசர், எம்.பி., ஆரூண், எம்.எல்.ஏ.,க்கள் பீட்டர் அல்போன்ஸ், காயத்ரிதேவி உள்ளிட்ட பலர் இருந்தனர்.
சுதர்சன நாச்சியப்பன் தாக்கல் செய்த சொத்து விவரம்:சுதர்சன நாச்சியப்பன், மனைவி பெயரில் 25 ஆயிரம் ரூபாய் கையிருப்பும், பல்வேறு வங்கிகளில் இரண்டு லட்சத்து 52 ஆயிரத்து 290 ரூபாய் பணமும் உள்ளது. ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு பத்திரங்கள், கடன் பத்திரங்கள் உள்ளன. மேலும், 25 லட்சம் ரூபாய் முதிர்வு தொகைக்கான எல்.ஐ.சி., பத்திரம், 50 ஆயிரம் ரூபாக்கான பிராவிடன்ட் பண்ட் பத்திரம் உள்ளது.ஏழு லட்சத்து 31 ஆயிரத்து 197 ரூபாய் மதிப்பில் மூன்று கார்கள், இரண்டு லட்சத்து 37 ஆயிரத்து 864 ரூபாய் மதிப்புள்ள 136 கிராம் தங்க நகை உள்ளது. இரண்டு லட்சத்து 34 ஆயிரத்து 565 ரூபாக்கு கம்ப்யூட்டர் மற்றும் பர்னிச்சர்கள் உள்ளன. சிவகங்கையில் மூன்று லட்சம் ரூபாய்க்கு 1.46 எக்டேர் விவசாய நிலம், 95 ஆயிரம் ரூபாய்க்கு 95 சென்ட் விவசாயம் அல்லாத நிலம் உள்ளது.டில்லி, சிவகங்கை மற்றும் சென்னையில், சுதர்சன நாச்சியப்பன் மற்றும் மனைவி பெயரில், ஒரு கோடியே 16 லட்சத்து 58 ஆயிரத்து 242 ரூபாய் மதிப்பில் ஐந்து வீடுகள் உள்ளன. மேலும், ஐ.ஓ.பி., வங்கியில் 54 ஆயிரத்து 531 ரூபாய் கார் கடன், கனரா வங்கியில் 48 லட்சத்து 75 ஆயிரத்து 860 ரூபாய் வீட்டுக் கடன் உள்ளது.
சட்டசபை செயலர் செல்வராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:ராஜ்யசபாவிற்கு ஆறு எம்.பி.,க்களை தேர்ந்தெடுப்பதற்கான மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்று (நேற்று) மாலை 3 மணியுடன் முடிந்தது. தி.மு.க., சார்பில் மூவர், அ.தி.மு.க., சார்பில் இருவர், காங்கிரஸ் சார்பில் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதுதவிர, சுயேச்சைகள் நான்கு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 10 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று காலை 11 மணிக்கு, மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதில் தகுதியான மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மற்றவை தள்ளுபடி செயப்படும்.மனுவை 10 எம்.எல்.ஏ.,க்கள் முன்மொழிய வேண்டும். சுயேச்சைகளின் மனுவை யாரும் முன்மொழியவில்லை. மனுக்களை வரும் 10ம் தேதி மாலை 3 மணிக்குள் திரும்பப் பெறலாம்.ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு ஆறு பேருக்கு மேல் பேட்டியிட்டால் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் நடக்குமா என்பது மனுக்களை ஆய்வு செய்த பிறகு தான் சொல்ல முடியும்.ஆறு பேர் மட்டும் போட்டியிட்டால், அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அன்றே வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். அவர்கள் டில்லி சென்று ராஜ்யசபா செயலரை சந்தித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பர்.இவ்வாறு செல்வராஜ் கூறினார்.
சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் இன்று நடக்கும் பரிசீலனையின் போது நிராகரிக்கப்பட்டுவிடும். ராஜ்யசபாவிற்கு தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆறு இடங்களுக்கு, ஆறு பேர் மட்டுமே களத்தில் உள்ளதால், அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவர்.வரும் 17ம் தேதி ராஜ்யசபா எம்.பி., பதவிக்கான தேர்தல் நடக்காது. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான 10ம் தேதி மாலை தான் வெற்றி பெற்றவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவர்.