கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவில் சொத்தை பாதுகாக்க நடவடிக்கை:அரசின் பதில் மனுவில் ஐகோர்ட் திருப்தி

Added : ஜூன் 08, 2010
Advertisement

சென்னை:கோவில் சொத்துக்களை பாதுகாக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் சென்னை ஐகோர்ட் திருப்தியடைந்துள்ளது. இதுதொடர்பாக, வக்கீல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.சென்னை ஐகோர்ட் வக்கீல் ஞானேஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் உள்ள கோவில் சிலைகள், நகைகள், விலைமதிப்புள்ள சொத்துக்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.


மனுவுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 465 மத அமைப்புகள் உள்ளன. கோவில்களை புனரமைக்கவும், பூஜை வழிபாடுகளுக்கும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் நிதி உதவி வழங்குவதற்கு பல்வேறு நலத் திட்டங்களை அரசு வகுத்துள்ளது.


கோவில் சிலைகள், நகைகள் மற்றும் விலைமதிப்புடைய சொத்துக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சொத்துக்களை பாதுகாக்க, தமிழகம் முழுவதும் 17 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரம் போலீசார், 3,000 முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய கோவில் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது.வருமானம் வரும் கோவில்களில் இருந்து நிதி பெற்று, ஐந்து கோடி ரூபாய்க்கு நிதியம் உருவாக்கப்பட்டு, அதில் இருந்து கிடைக்கும் வட்டிப் பணத்தில், குறைந்த வருவாய் உள்ள கோவில்களில் எச்சரிக்கை கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


போதிய நிதி உள்ள பெரிய கோவில்களில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு "டிவி' , எச்சரிக்கை கருவிகள், பாதுகாப்பு பெட்டக வசதி என, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த, போலீசாருடன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசித்து வருகின்றனர்.உண்டியல்கள், அசைக்க முடியாமல் நிரந்தரமாக இருக்கும் வகையில் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவில் நகைகள், சொத்துக்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வருமானத்தைப் பெருக்க வணிக கட்டடங்களை கட்டுவதற்கு நிதி உதவியும் வழங்கப்படுகிறது.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.


இம்மனுவை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில், "இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நாங்கள் திருப்தியடைகிறோம். கோவில்களில் பாதுகாப்பு சாதனங்கள் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி, பதில் மனுவில் விளக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X