திருச்சி : திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர் சூசை மர்மமான முறையில் நேற்று இறந்து கிடந்தார். ஏற்கனவே, கன்னியாஸ்திரி கற்பழிப்பு சர்ச்சையில் இக்கல்லூரியின் முதல்வர் சிக்கியுள்ள நிலையில், அதிபரின் மர்ம மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மைக்கேல்புரத்தைச் சேர்ந்த பாதிரியார் சூசை(52). சென்னை லயோலா கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவராக இருந்த இவர், கடந்த ஓராண்டுக்கு முன், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபராக (ரெக்டர்) நியமிக்கப்பட்டார்.
கல்லூரியில் உள்ள ரெக்டர் இல்லத்தில் தங்கியிருந்தார். கடந்த 17ம் தேதி இரவு, அவரது அறைக்கு தூங்கச் சென்றார். நேற்று முன்தினம் முழுவதும் அறையை விட்டு வெளியே வரவில்லை. நேற்று காலை 10 மணிக்கு, உதவியாளர் திரவியநாதன் அவரது மொபைல் போனை தொடர்பு கொண்ட போது, அறையில் இருந்து போன் அழைக்கும் சத்தம் கேட்டது. ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. சந்தேகமடைந்த திரவியநாதன் அவரது அறையின் ஜன்னலை திறந்து பார்த்தார். அப்போது, பின் மண்டை உடைந்து, மூக்கில் ரத்தம் வழிந்து, கைலி கட்டிய நிலையில், தரையில் சூசை பிணமாகக் கிடந்தார்.
இது குறித்து திரவியநாதன், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மாநகர போலீஸ் துணை கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா, கோட்டை உதவி கமிஷனர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், "நள்ளிரவில் படுத்த அவர், அதிகாலை சிறுநீர் கழிக்க எழுந்து, செருப்பு அணிய சென்றபோது, திடீரென நெஞ்சு வலி வந்து, கீழே விழுந்து இறந்திருக்கலாம்' என்று தெரிய வந்தது. இதற்கிடையே, தூக்கிட்டோ, விஷம் குடித்தோ சூசை தற்கொலை செய்து கொண்டதாக கல்லூரி வளாகம் முழுவதும் தகவல் பரவியது. ரெக்டர் இல்லம் முன் ஏராளமான மாணவரும், பேராசிரியரும் திரண்டனர்.
சம்பவம் குறித்து துணை கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா கூறுகையில், ""அதிபர் சூசையின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் எப்போது, எதனால் இறந்தார் என்பது பரிசோதனை முடிவில் தெரிந்து விடும்,'' என்றார். திருச்சி கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மர்ம முடிச்சுகள்: கடந்த 17ம் தேதி இரவு தூங்கச் சென்ற சூசை, நள்ளிரவு வரை ஏதோ எழுதிக் கொண்டே இருந்திருக்கிறார். அவர் என்ன எழுதினார் என்பது இனி நடக்கும் போலீஸ் விசாரணையில் தான் தெரிய வரும்.
நேற்று முன்தினம் ஒருநாள் முழுவதும் அவரை யாருமே தேடவில்லை என்பது நெருடலான விஷயமாக இருக்கிறது. சூசைக்கு அடிக்கடி நெஞ்சு வலி வரும் என்றும், ஆரோக்கியமாகத்தான் இருந்தார் என்றும் இரு வேறு கருத்துகள் உள்ளன.
கல்லூரி அதிபர் மரணம் முதல்வர் விளக்கம் : திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் செபாஸ்டின் வெளியிட்ட அறிக்கை: கல்லூரி அதிபர் சூசை, தன்னுடைய 54 வயதில், 34 ஆண்டுகள் ஏசுச்சபையில் சேவையாற்றி உள்ளார். 1990ம் ஆண்டு தன்னை குருவாக அர்ப்பணித்துக் கொண்டவர். நேற்று காலை நடந்த திருப்பலிக்கு, சூசை அடிகளார் வரவில்லை.
அதனால் சந்தேகமடைந்து, கல்லூரி முதல்வர் செபாஸ்டின், செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் குழந்தைராஜ், இல்ல நிர்வாகி ஆரோக்கியராஜ் மற்றும் போலீஸ் ஏ.சி., சீனிவாசன் அவரது அறைக்குச் சென்று பார்த்தனர்.
பூட்டியிருந்த அவரது அறை கதவை உடைத்து உள்ளே சென்ற போது, படுக்கையில் உயிரற்ற நிலையில் சூசை இறந்திருந்தார். அவரது மரணம் இயற்கையானதே. பல்வேறு வதந்திகள் பரவுவதை போல அல்லாமல், தீவிரமான மாரடைப்பு காரணமாகவே அவர் இறந்தார்.
அவருக்கு பிரேத பரிசோதனையும் செய்து முடித்துள்ளோம். அவருக்கு கடவுள் நிரந்தர அமைதியை அளிக்க வேண்டும். அவரை இழந்து வருந்தும் ஏசுச்சபையினர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களும், ஜெபங்களும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இறுதிச் சடங்கு இன்று காலை 10 மணியளவில் ஜோசப் கல்லூரியில் நடக்கும். இவ்வாறு செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE