இயேசு பிறந்த பூமி அன்றும் இன்றும் | | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இயேசு பிறந்த பூமி அன்றும் இன்றும்

Updated : டிச 24, 2010 | Added : டிச 24, 2010 | கருத்துகள் (32)
Share
இஸ்ரேல் - முத்திரை பதித்தவர்களாக பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கும் அபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு முதலிய முதுபெரும் தந்தையர்களும் மோயீசன், ஆரோன் போன்ற பேரரசர்களும், இசையாஸ், எமிரேயாஸ் போன்ற இறைவாக்கினர்களும், கிறிஸ்துவர்கள் தெய்வமாக வழிபடும் இயேசு கிறிஸ்துவும், பிறந்து, வாழ்ந்து, மறைந்த அன்றைய பகுதிகள் தான் 8018 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட இன்றைய

இஸ்ரேல் - முத்திரை பதித்தவர்களாக பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கும் அபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு முதலிய முதுபெரும் தந்தையர்களும் மோயீசன், ஆரோன் போன்ற பேரரசர்களும், இசையாஸ், எமிரேயாஸ் போன்ற இறைவாக்கினர்களும், கிறிஸ்துவர்கள் தெய்வமாக வழிபடும் இயேசு கிறிஸ்துவும், பிறந்து, வாழ்ந்து, மறைந்த அன்றைய பகுதிகள் தான் 8018 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட இன்றைய இஸ்ரேல்நாடு.


பேரரசர்கள் ஆண்ட காலத்தில், பாபிலோனியர்களாலும், பிசாந்தீனியர்களாலும், கிரேக்கர்களாலும், உரோமையர்களாலும் ஐரோப்பாவிலிருந்து வந்த சிலுவை வீரர்களாலும் பின், முகமதியர்களாலும் படிப்படியாக சின்னாபின்னப்படுத்தப்பட்டு வந்த இஸ்ரேல், 1984 மே 14ல் பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து தனி நாடாக அறிவிக்கப்பட்டது. தற்போது யூதர்களும், அரேபியரும், டுரூஸ் இனத்தவரும் வாழும் கலவை நாடாக காட்சியளிக்கிறது.


ஆப்பிள், ஆரஞ்சு தோட்டங்கள்: நாசரேத்தை நெருங்கும் சாலையின் இருமருங்கிலும், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சைத் தோட்டங்கள், ஷாரன் சமவெளி வழியாகச் செல்லும் சாலைகளின் இருபுறங்களிலும் ஜாபா ஆரஞ்சு மரங்கள். மண் வளம் அதிகமென்றாலும் நீர்வளம் குறைவு என்பதால் நீர்த் தெளிப்பான்கள் வழியாக பாசன வசதி. "கிப்புட்ஸ்' எனப்படுகிற கூட்டுறவு குடியிருப்புகளை அங்கே காண முடிகிறது. நம்மூரில் பண்ணை வீடு என்கிறோமே, அதன் பெயர் இஸ்ரேலில் "மு÷ஷாகள்' என்கின்றனர். நெடிதுயர்ந்த கேதுரு மரங்களையும், வெண்ணிற தட்டையான கூரைகள் கொண்ட வீடுகளையும், பயண மிருகங்களாகப் பயன்படும் கழுதைகளையும் காண முடிகிற நாசரேத் மட்டுமே, இயேசு வாழ்ந்த காலத்தை இன்னும் அப்படியே கண் முன் கொண்டு வருகிறது. கூடாரங்களில் தங்கிக் கொண்டும், ஆடுகள், கழுதைகள், மாடுகளை வளர்த்துக் கொண்டும், வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டிருக்கிற பெடுயீன் இனத்தவரும் ஆதிகாலத்தை ஞாபகப்படுத்துகின்றனர்.


முக்கிய தொழில்: இஸ்ரேலின் முக்கிய தொழில் வைரக்கல் தீட்டுதல். இந்த தொழிலுக்கு அடுத்தபடியாக நாட்டுக்கு நல்ல வருமானம் தருவது, அயல்நாட்டுப் பயணிகளின் சுற்றுலா, மூன்றாவது அதிக வருமானம் அளிப்பது ஆரஞ்சு பழங்களின் ஏற்றுமதி. இஸ்ரேலில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் கடற்கரை நகரம் 'டெல் அவிவ்.' இங்குள்ள விமானத் தளத்தில் இறங்கித்தான் இயேசு பிறந்த புண்ணிய பூமிக்கு நுழைய முடியும்.


பெத்லகேம்: ஜெருசலேமிலிருந்து இயேசு பிறந்த பெத்லகேம் செல்லும் வழியில் ராக்கேலின் கல்லறை எதிர்படுகிறது. பழைய ஏற்பாட்டின் நாயகரான யாக்கோபின் மனைவி ராக்கேல், தன் மகன் பெஞ்சமினைப் பெற்றெடுக்கும்போது மரணமடைந்து இந்த இடத்தில் புதைக்கப்பட்டாளாம். குழந்தைப் பேறு விரும்புவோர், நீளமான சிவப்பு நூலைக் கட்டி வழிபடும் பழக்கம் இப்போதும் இந்த கல்லறையில் உள்ளது.


இயேசு பிறந்த குகை: இயேசுநாதர் பிறந்த குகையை மையமாக வைத்து ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. அதன் எதிரே ஒரு மசூதி. ஆலயத்துள் நுழைய விரும்புவோர் குனிந்தபடியே தான் உள்ளே செல்ல முடியும். அவ்வளவு குறுகிய வாசல். பழங்காலத்தில் கோவில்களைக் கொள்ளையடிக்க வரும் குதிரை வீரர்களைத் தடுப்பதற்காகவே, குறுகலான வாசலை அமைத்திருந்தனராம். ஆலயத்தை பல்வேறு கிறிஸ்துவ அமைப்பினரும் தனித்தனியாக வழிபடுவதற்கு வசதியாக கத்தோலிக்கப் பகுதி, கிரேக்க ஆர்த்தொடாக்ஸ் பகுதி, ஆர்மீனியன் பகுதி என்று பிரித்தே வைத்திருக்கின்றனர். இயேசு பிறந்த குகைப் பகுதி சிறு பள்ளமான இடத்தில் உள்ளது. குறுகலான படிகளின் வழியே இறங்கிச் சென்றால் சிறிய பீடம் ஒன்று அனைவரையும் வரவேற்கிறது. தரையில் ஒரு வெள்ளி நட்சத்திரம்.
இங்குதான் கன்னிமேரி இயேசுவை ஈன்றெடுத்தாள் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பால்குகை பீடம் ஒன்று அமைத்திருக்கின்றனர். அன்னை மேரி குழந்தை இயேசுவுக்கு பாலூட்டும்போது சில துளிகள் கீழே விழுந்தனவாம். அந்த இடம் வெண்மையான பாறையாக இன்றும் காட்சி தருகிறது. இயேசுவின் தந்தையான சூசைப்பர் பேரிலும், மாசில்லாக் குழந்தைகள் பேரிலும் தனித்தனியே பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இயேசு பிறந்தபோது சாமக்காவல் காத்துக் கிடந்த இடையர்கள் தங்கியிருந்த புல்வெளிப் பகுதிகள், இன்று கட்டடங்கள் முளைத்து நகர் பகுதியாகிவிட்டன.


தபோர் மலை: மொத்தம் 1600 அடி உயரத்தில் பூரி ஒன்றை செய்து தரையில் வைத்தது போல வட்ட வடிவில் நிற்கிறது தபோர் மலை. மலையின் அடிவாரத்தைச் சுற்றிலும் கிராமங்களும், வயல்வெளிகளும் பரவிக் கிடக்கின்றன. யாகப்பர், ராயப்பர், அருளப்பர் ஆகிய மூன்று சீடர்களும் இயேசு உருமாறியதைக் கண்டது இந்த மலையில் தான். உருமாறிய நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக மலை மீது ஆலயம் ஒன்றை எழுப்பியுள்ளனர். தபோர் மலையில் இருந்து 5 கி.மீ., தொலைவில் இன்னொரு மலை. இதன் பெயர் "இயேசு தாண்டிய மலை' என்கின்றனர். நாசரேத் மக்கள், இயேசுவை ஊருக்கு வெளியே தள்ளி, மலையிலிருந்து அவரை உருட்டிவிட முயற்சித்தபோது, இந்த மலையிலிருந்துதான் தபோர் மலைக்குத் தாண்டிச் சென்றார் என, வழி வழியாக ஒரு பேச்சு.


அழகான மலர்: நாசரேத் என்றால் ""அழகான மலர்'' என்று பொருள். இயேசு 30 ஆண்டுகள் வளர்ந்து, வாழ்ந்து உழைத்த இடம் தான் நாசரேத். 2 ஆயிரம் ஆண்டுகளாகியும் நாசரேத் வளர்சி அடைந்ததாகத் தெரியவில்லை. நகரில் தொன்மை வாய்ந்த ஜெபக்கூடம் ஒன்று உள்ளது. விளக்கம் கேட்டவர்களின் கண்கள் வியப்பில் விரிய இயேசு, இங்கு தான் இறைவாக்கினர் இசையாசின் வசனங்களை வாசித்து, மறையுரை ஆற்றினாராம். பழங்காலத்தவைதான் அது என்பதை உணர்த்தும் வகையில், அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பலகை இருக்கைகள் ஜெபக்கூடத்தில் உள்ளன.


மங்கள வார்த்தை பேராலயம்: மூன்று சாலைகள் சந்திக்கும் ஓர் இடத்தில் அந்தக் கிணறு. அந்த கிணற்றில் தான் அன்னை மேரி தண்ணீர் எடுத்துச் செல்வாளாம். அக்கிணறு "மரியாளின் கிணறு' என்று அழைக்கப்படுகிறது. கிணற்றிலிருந்து சிறிய தூரம் தள்ளி சின்னஞ்சிறு குடிசை. மேல்தளம் இல்லாத சுண்ணாம்பு மண்ணினால் எழுப்பப்பட்ட சுவர்கள். அதன் மீது கான்கிரீட் தூண்கள் உயர்த்தி 155 அடி உயரக் கோபுரம் கட்டியிருக்கின்றனர். "மங்கள வார்த்தை பேராலயம்' என்ற பெயரால் அழைக்கப்படும் இந்த இடமே மரியாள் வாழ்ந்த வீடாம். "அருள் நிறைந்தவளே வாழி' என்று கடவுளின் தூதர் மரியாளைப் பார்த்து வாழ்த்திய இடமும் இதுவே. சூசையப்பர் தச்சுப்பட்டறை வைத்து, இயேசு தன் தந்தைக்கு உதவி புரிந்த இடத்தில் புனித சூசைப்பர் ஆலயம் கம்பீரமாக நிற்கிறது.


யோர்தான் நதி: பத்தாயிரம் அடிக்கும் குறையாத ஹெர்மேன் மலை உச்சியில் பனிக்கட்டி உருகி, சிற்றாறாகப் பெருக்கெடுத்து, ஹிலே ஏரியில் வீழ்ந்து, பின்னர் கலிலேயாக் கடலில் பாய்ந்து அங்கிருந்து வழிந்து 200 மைல் நீளத்துக்கு வளைந்து நெளிந்து சென்று, சாக்கடலில் சங்கமமாகிறது யோர்தான் நதி. இந்த நதியில் தான் ஸ்நாபக அருளப்பரின் கரங்களால் இயேசு நாதர் ஞானஸ்தானம் பெற்றார். இன்று உலகின் பெரிய பணக்காரர்கள் பலரும் திருமுழுக்கு என்னும் திருச்சடங்கை முடித்துக் கொண்டு திரும்புவதும் இந்த நதியில்தான்.


மூன்றாம் நூற்றாண்டு ஜெபக் கூடம்: காப்பர் என்ற சொல்லோடுதான் இஸ்ரேலில் உள்ள கிராமங்களின் பெயர்கள் தொடங்குகின்றன. காப்பர் என்றால் கிராமம் என்று அர்த்தமாம். யாயீரும், பெரும்பாடுள்ள பெண்ணும் வரம் பெற்றதும், நூற்றுவர் தலைவனின் பணியாள், ராயப்பரின் மாமியார், சூம்பியகையன், திமிர்வாதக்காரன், குருடர், முடவர் ஆகியோர் குணம் பெற்றதும் கப்பர்நகும் என்னும் கிராமத்தில் தான். இயேசு, கப்பர்நகுமைப் பார்த்து வானளாவ உயர்வாயோ? பாதாளம் வரை தாழ்ந்திடுவாய். ஏனெனில் உன்னிடம் செய்த புதுமைகள் சோதோமில் செய்யப்பட்டிருப்பின், இந்நாள் வரை அது நிலைத்திருக்கும் என வருந்திச் சபித்தார். இயேசுவின் சாபம் பெற்றதாலோ என்னவோ கப்பர்நகும், இன்றும் கூட பாழடைந்த நிலையிலேயே கிடக்கிறது. கப்பர்நகுமில் இயேசு அமர்ந்து பேசிய ஜெபக் கூடத்தின் மீது மூன்றாம் நூற்றாண்டில் ஒரு ஜெபக் கூடம் எழுப்பினர். அதுவும் கூட சிதைந்து விட்ட நிலையிலேயே காணப்படுகிறது.


அன்பும், ஒற்றுமையும் வளர வேண்டும்: கப்பர்நகும் மட்டுமல்ல, இன்று ஒட்டுமொத்த இஸ்ரேலே பாழடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது. அன்பைப் போதிக்க வந்த இயேசு வாழ்ந்த புண்ணிய பூமியில் அணுகுண்டு வெடிக்கும் அளவுக்கு, கலவர பூமி ஆகிவிடுமோ என்ற கலக்கமும் ஏற்படுகிறது.
யாசர் அராபத்தின் இறப்பிற்குப் பின்பாவது இஸ்ரேலியர், பாலஸ்தீனியர்களிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும். அதற்குப் பிறக்கப் போகும் பாலன் இயேசுதான் அருள்புரிய வேண்டும்.


கிறிஸ்துமஸ் மரம் எப்போது வந்தது?


கிறிஸ்துமஸ் மரம் :ஸ்கான்டினேவியர் கிறிஸ்து பிறப்பு விழாவினை இன்றும் "யூல்' என்றே அழைக்கின்றனர். யூல் என்ற வார்த்தை, 900 ஆண்டு முதல் ஆங்கிலத்தில் கிறிஸ்துமஸ் என்பதற்கு ஒத்த கருத்துள்ள சொல்லாக கருதப்படுகிறது. கிறிஸ்து பிறப்பு விழாவில், முக்கிய பங்கு வகிப்பது கிறிஸ்துமஸ் மரம்.கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு முந்தைய நாட்களில், இம்மரம் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, கிறிஸ்துவர்களின் வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும். 1,000 ஆண்டுகளுக்கு முன், புனித போனிபாஸ் என்பவர், ஜெர்மனியில் மதப்போதகம் செய்து கொண்டிருந்த போது, அங்குள்ள "ஓக்' மரம் ஒன்றை மக்கள் வழிபடுவதை கண்டு கோபமடைந்து, அதை வெட்டி வீழ்த்த செய்தார். அதனடியிலிருந்து உடனடியாக ஒரு கிறிஸ்துமரம் முளைத்து வளர்ந்ததாக கூறப்படுகிறது. அந்த மரம் முளைத்த செயலை, இயேசுவின் உயிர்ப்போடு தொடர்புபடுத்தி, தன்னுடைய கிறிஸ்துமஸ் போதனையை, செய்தியாக கூறினார். 1521ல் பிரான்ஸ் இளவரசி ஹெலினா, தனது திருமணத்திற்கு பின், ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை பாரீஸ் நகருக்கு கொண்டு வந்து, விழா கொண்டாடியதே, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்துமரம் நுழைந்ததன் முதல் நிகழ்வாக வரலாறு கூறுகிறது.


கிறிஸ்துமஸ் தாத்தா: கிறிஸ்துமஸ் நாட்களில் நாம் நினைவு கூரும் கிறிஸ்துமஸ் தாத்தா, "நிக்கோலஸ்' எனும் துருக்கியிலுள்ள "மீரா' என்ற நகரின் ஆயர். இவர், ஏழை ஒருவனின் மூன்று பெண்களுக்கு, மூன்று பைகள் நிறைய தங்கங்களை அளித்து, திருமணம் நடைபெற செய்தார்.இந்த உதவி யாருக்கும் தெரியாமல், இரவில் ஜன்னல் வழியாக போடப்பட்டு, அதை கொண்டு அந்த ஏழை மகிழ்ந்து, தம் பெண்களுக்கு நல்வாழ்வு வழங்கினான் என கூறப்படுகிறது. மேல்நாடுகளில் இவரை "சாண்டாகிளாஸ்' என்று அழைப்பர். இதை நினைவு கூரும் வகையில் தான், கிறிஸ்துமஸ் நாளில் பரிசு பொருட்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதும், ஏழை எளியோருக்கு உதவி செய்வதும் நடைமுறையில் உள்ளது.நம்மிடம் இருப்பதை கொடை சிந்தனையுடன் இல்லாதவருடன் பகிர்ந்தளித்தல் வேண்டும். அந்நாளில் நாம் மகிழ்ந்திருப்பது போல், இல்லாதவரும் மகிழ்ந்திருக்க நாம் உதவி செய்யலாம். இதுவே, உண்மையான கிறிஸ்துமஸ். எளிய இடத்தில், எளியவருடன், எளியவர் அன்பில், மகிழ்வில் இயேசு பிறந்ததை நமது செயல்கள் மூலம் வெளிப்படுத்தி மகிழ்வதே, அர்த்தமுள்ள கிறிஸ்து பிறப்பு.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X