பொது செய்தி

தமிழ்நாடு

இயேசுவின் சீடர் புனித தோமையார் வாழ்ந்த சின்ன மலை குகை

Added : டிச 24, 2010
Share
Advertisement
இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார், திருமறையை பரப்புவதற்காக, கி.பி., 52ல் இந்தியாவிற்கு வந்தார். கேரள மாநிலத்தில் திருமறையை போதித்து பல சர்ச்சுகளை கட்டினார். பின், சென்னை மயிலாப்பூருக்கு வந்த தோமையார், இங்கு ஏழு ஆண்டுகள் இறைப்பணியில் ஈடுப்பட்டார். அவரின் புதுமைகள் பற்றி அறிந்த சிலர், தோமையாரைக் கொலை செய்ய வழிதேடினர். அவர்களிடமிருந்து தப்பித்து,

இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார், திருமறையை பரப்புவதற்காக, கி.பி., 52ல் இந்தியாவிற்கு வந்தார். கேரள மாநிலத்தில் திருமறையை போதித்து பல சர்ச்சுகளை கட்டினார். பின், சென்னை மயிலாப்பூருக்கு வந்த தோமையார், இங்கு ஏழு ஆண்டுகள் இறைப்பணியில் ஈடுப்பட்டார்.


அவரின் புதுமைகள் பற்றி அறிந்த சிலர், தோமையாரைக் கொலை செய்ய வழிதேடினர். அவர்களிடமிருந்து தப்பித்து, சைதாப்பேட்டை சின்னமலை குன்றிலுள்ள குகையில் மறைந்து, இறை பணியில் ஈடுப்பட்டு வந்தார். அங்கும் எதிரிகள் தொடர்ந்ததால் பரங்கிமலை (தாமஸ் மலை) சென்றார். கி.பி.72ல் தன்கையால் செய்த கற்சிலுவையின் முன் தோமையார் ஜெபம் செய்து கொண்டிருந்த போது, ஈட்டியால் குத்தப்பட்டு மரித்தார். அவரது உடல் சாந்தோம் சர்ச்சில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 39 ஆண்டுகள், தோமையார் தனது அற்புதங்களால் இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை வேரூன்றினார்.


சைதாப்பேட்டை சின்னமலை: சின்னமலை ஆரோக்கிய அன்னை ஆலயத்தில், தோமையார் எதிரிகளிடமிருந்து மறைந்து வாழ்ந்த குகை உள்ளது. இந்த குகையின் உள் சுவற்றில், தோமையாரின் ரத்தக் கறையும், அவரின் கை மற்றும் கால் தடமும் தெளிவாக காணப்படுகிறது. இந்த தடங்கள் நூற்றாண்டுகள் கடந்தும் அழியாமல் அப்படியே இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், மற்றொரு குகையில், நீர் சுனை ஒன்றும் உள்ளது. பிரசங்கம் கேட்க வந்த மக்கள், தாகத்தால் அவதிப்பட்டபோது, தோமையார் மண்டியிட்டு தம் கைத்தடியினால் தரையை தட்டியபோது, பாறையைப் பிளந்து கொண்டு நீருற்று கிளம்பியுள்ளது. இக்குகை இன்றும் இயற்கைத்தன்மை குறையாமல் காட்சியளிக்கிறது. 15.5 அடி நீளம், 14 அடி அகலம், 7 அடி உயரம் கொண்ட இக்குகையின் நுழைவாயிலில் 1.5 அடி அகல இடைவெளிப் பாறைக்குள் புகுந்து செல்ல முடியும். குகை வாயிலுக்கு எதிர்ப்புறம் ஜன்னல் போன்றதொரு அற்புத திறப்பு இருக்கிறது. இதன் வழியாகத்தான் எதிரிகளிடமிருந்து தோமையார் தப்பி சென்றார்.


தோமையாரால் செதுக்கப்பட்ட கற்சிலுவை: அவரது கைவிரல் பதிந்த பாறையும் அந்த ஜன்னல் அருகே உள்ளது. 16ம் நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட மாதா சர்ச்சும் இக்குகைக்கு மேல் அமைந்துள்ளது. சர்ச்சின் பின்னால் உள்ள பெரிய குன்றின் மீது தோமையாரால் செதுக்கப்பட்ட கற்சிலுவை உள்ளது. அதன் அருகே தோமையாரின் கால் பாதம் பதிந்த பாறை ஒன்று, உயிர்த்த ஆண்டவரின் உயரமான கோபுரத்திற்கு அடியில் உள்ளது. கி.பி. 1551ல் புதுப்பிக்கப்பட்ட இந்த சர்ச்சில் போர்த்துகீசியரால் கொண்டு வரப்பட்ட ஆரோக்கிய மாதாவின் அற்புத சிலை பார்ப்பவரின் மனதை கவரும் வகையில் உள்ளது. ஆரோக்கிய மாதாவின் திருவிழா ஆண்டு தோறும் ஈஸ்டர் பண்டிகையின் போது ஐந்தாம் ஞாயிறு வெகு சிறப்பாக நடந்து வருகிறது.


இது குறித்து, சர்ச்சின் உதவி பங்குத்தந்தை ஆரோக்கிய எட்வர்ட் கூறியதாவது: சின்னமலை சர்ச் பழமையும், புகழும் வாய்ந்தது. சர்ச்சின் வெளிப்புறத்தில் உள்ள கெபியில் வீற்றியிருக்கும் ஆரோக்கியமாதாவிடம் விண்ணப்பிக்கும் வேண்டுதல் நிறைவேறி வருவதாக விசுவாசிகள் கூறுகின்றனர். அற்புத நீருற்றிலிருந்து தண்ணீர் கேட்டு வரும் பக்தர்கள் அதிகமாக உள்ளனர். இந்த சர்ச்சின் சிறப்பம்சமாக இரண்டு பாதுகாவலர்கள் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், பீடத்தின் வலதுபக்கம் ஆரோக்கியமாதா சிலையும், இடது பக்கம் தோமையார் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. சின்னமலையிலிருந்து பரங்கிமலை வரை சுரங்கப்பாதையும் இருந்துள்ளது. அந்த வழியாகத்தான் தோமையார் பரங்கிமலை சென்று தங்கியுள்ளார். நாளடைவில் அந்த சுரங்கபாதை மறைந்து விட்டது. இவ்வாறு எட்வர்ட் கூறினார்.


பழமை மாறாமல் பசுமையுடன் காட்சியளிக்கிறது ஆர்மேனியன் சர்ச்


பரபரப்பு மிக்க சென்னை பாரிமுனையில் பழமையைத் தாங்கி, அமைதியாக நிற்கிறது அர்மேனியன் சர்ச். உயர்ந்த மரக்கதவுகளைத் தாண்டி, எட்டிப் பார்த்தால் பசுமையான மரங்களுக்கு மத்தியில் விழும் சூரிய ஒளியுடன், பரவசப்படுத்தும் புல்வெளிகளுக்கு இடையே நிற்கிறது கன்னி மேரி தேவாலயம். மூன்று நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரமாக நிற்கும் அர்மேனியன் சர்ச்சின் பின்னணியில், ஆச்சர்யமான தகவல்கள் புதைந்து கிடக்கின்றன.


சோவியத் ரஷ்யா யூனியன் உடைந்தபோது, சுதந்திர நாடாக மாறியதுதான் அர்மேனியா. கிழக்கு ஐரோப்பியரான இவர்கள், பல நாடுகளில் பூர்வீகமாக வாழும், பல சமூகத்தை சேர்ந்தவர்கள். 16ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்து பல ஊர்களில் தங்கினர். சென்னைக்கு கப்பலில் வந்தவர்கள் உயர்தர துணிகள், வைரக்கற்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். "சவுத் ப்ளாக் டவுன்' எனப்பட்டு, பின் ஜார்ஜ் டவுனாக மாறிய பாரிமுனையில், 1712ல் கன்னிமேரி சர்ச் கட்டப்பட்டது. கல்லறை வளாகத்தின் ஒரு பகுதியில் இந்த சர்ச் கட்டப்பட்டு, பின் 1772ல் புதுப்பிக்கப்பட்டது. வெள்ளை மாளிகையாய் காட்சியளிக்கும் இங்கு பிரார்த்தனை அறை மேடையில், கன்னி மேரி, குழந்தை இயேசுவுடன் இருக்கும் ஆளுயர புகைப்படம் உள்ளது. அர்மேனியர்களுக்கு சிலை வழிபாட்டில் நம்பிக்கை கிடையாது. ஆனால் புகைப்படங்களை மட்டுமே வைத்து வழிபடுகின்றனர்.


சர்ச்சுக்கு வெளியே, சென்னையில் வாழ்ந்து இறந்த அர்மேனியர்கள் 350 பேரின் கல்லறைகள் உள்ளன. இவர்கள் தங்கள் கல்லறைகளை பூமிக்கு மேல் உயர்த்த மாட்டார்கள். ஆனால், ஒரே ஒரு கல்லறை மட்டும் உயர்த்தப்பட்டு, அதில், சில குறிப்புகள் கல்வெட்டுகளாக உள்ளன. அது உலகின் முதல் அர்மேனியப் பத்திரிகையாளர் ரெவரன்ட் ஹரோடியன் ஷ்மவோனியனின் கல்லறை. இவர் உலகின் முதல் அர்மேனியப் பத்திரிகை "அஸ்தரார்' ஐ, சென்னையில் அச்சிட்டு, கப்பலில் அர்மேனியாவுக்கு அனுப்பி வெளியிட்டார். சுதந்திர அர்மேனியாவின் அரசியல் சாசன வரைவு அறிக்கையை, சென்னை வாழ் அர்மேனியர்கள் தயாரித்து அளித்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. இங்குள்ள மணிகூண்டும், ஆறு ராட்சத மணிகளும் கூடுதல் சிறப்பு. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணிக்கு, சர்ச்சின் காப்பாளர் ட்ரெவர் அலெக்சாண்டர் மணிகளின் ஆறு கயிற்றையும் அசைத்து ஒலிக்க செய்வார். ஒவ்வொரு மணியும் 21 முதல் 26 அங்குலமும், 150 முதல் 200 கிலோ எடையும் கொண்டது. 1754ல் ஒரு மணியும், 1778ல் மற்றொரு மணியும் அமைக்கப்பட்டது. கூடுதலாக இரண்டு மணிகள் சென்னையில் வாழ்ந்த அர்மேனிய வணிகர் "அகா ஷாமியர் சூதனுமியனின்' இளைய மகன் "எலியாசர் ஷாமியரின்' நினைவாக சர்ச்சுக்கு வழங்கப்பட்டது. இன்னும் இரண்டு மணிகள் லண்டன் பார்லிமென்டுக்கு மணி செய்து கொடுத்து, உலகப்புகழ் பெற்ற தாமஸ் மியர்ஸ் நிறுவனத்தால் 1837ல் வழங்கப்பட்டது.


பச்சைப்பசேல் புல்வெளிகளும், அமைதியை ரசித்து உலாவர, அரிய வகை செங்கற்களாலான நடைபாதைகளும், மா, பாதாம், கொய்யா போன்ற மரங்களும், அதில் சிறகடிக்கும் பறவைகளுமாக மனதிற்கு அமைதியைத் தருவதாக உள்ளது. சர்ச் வராண்டாக்களில் பென்சிலால் வரையப்பட்ட ஓவியங்கள் அர்மேனிய கலையைக் காட்டுவதாக உள்ளது. வராண்டா சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள ஏஞ்சல்களின் உருவங்கள் மீது பூசப்பட்ட பச்சை, சிவப்பு மற்றும் ரோஸ் வண்ணங்கள் மூன்று நூற்றாண்டுகளைக் கடந்தும் புதுப்பொலிவுடன் இருப்பது அர்மேனியக் கட்டடக்கலை சிறப்பை காட்டுவதாக உள்ளது. இங்கு கூட்டுப் பிரார்த்தனை நடப்பதில்லை. தனியாக அமர்ந்து பிரார்த்தனை செய்ய மட்டும் அனுமதிக்கப்படுகிறது. சென்னையை சேர்ந்த ஆங்கிலோ-இந்தியரான "ட்ரெவர் அலெக்சாண்டர்' குடும்பத்துடன் தங்கியிருந்து "சர்ச்'சை கவனித்துக் கொள்கிறார். அர்மேனியன் தெரு என்ற பெயரைத் தாங்கும் அளவுக்கு சிறப்புகள் வாய்ந்த சர்ச், உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ளது. இந்த சர்ச்சை கட்டிய அர்மேனியர்கள் ஒருவர் கூட சென்னையில் இல்லை என்பதும் வியப்பை அளிக்கிறது.


அர்மேனியர்கள் யார்? இந்தியாவிற்கு வந்த அர்மேனியர்கள் பெர்ஷியா (ஈரான்), மெசபடோமியா(ஈராக்) மற்றும் அர்மேனியாவிலிருந்து வந்தவர்கள். 4ம் நூற்றாண்டில் உலகில் முதன் முதலாக கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொண்ட முதல் நாடு அர்மேனியாதான். பாரசீக, சிரிய, கிரேக்க மற்றும் ரஷ்ய கலாசாரத்தை பின்பற்றுகின்றனர்.


மூன்றாம் நூற்றாண்டு நிறைவு விழா: அர்மேனியன் சர்ச்சின் காப்பாளர் ட்ரெவர் அலெக்சாண்டர் கூறியதாவது: கோல்கட்டாவில் மூன்று, மும்பையில் இரண்டு மற்றும் புதுடில்லி, சென்னையில் தலா ஒன்று என இந்தியாவில் மொத்தம் ஏழு அர்மேனியன் சர்ச்சுகள் உள்ளன. இவற்றை கோல்கட்டா அர்மேனியன் சர்ச் கமிட்டியினர் பராமரிக்கின்றனர். அங்கு 300 அர்மேனியன்கள் வசிக்கின்றனர். தினமும் காலை 9.30 முதல் 2 மணி வரை பார்வையாளர்கள் மற்றும் டூரிஸ்ட்களை அனுமதிக்கிறோம். ஆனால், இரவு வரை எப்போது வேண்டுமானாலும் பிரார்த்தனைக்கு அனுமதி உண்டு. 2012ம் ஆண்டில், 300 ஆண்டு நிறைவு விழாவில், அர்மேனிய ஆர்தோடக்ஸ் கிறிஸ்தவ போப் "கரேகின்-2' பங்கேற்கும் பிரமாண்ட விழா நடைபெற உள்ளது. இவ்வாறு அலெக்சாண்டர் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X