ரொட்டியின் வீடு என்று பொருள்படும் பெத்லஹேம் என்ற குக்கிராமத்தில் 2010 ஆண்டுகளுக்கு முன், பாவம் தவிர எல்லாவற்றிலும் சாதாரண மனிதரைப் போல பிறந்து, மனிதராகவே வாழ்ந்த இயேசுவின் பிறப்பை நினைவு கூரும் புனித காலம்.
கிறிஸ்துமஸ், அன்பு பிறந்த நாள். அன்பான கடவுள், தன் ஒரே மகனையே உலகிற்கு அனுப்பும் அளவுக்கு, நம் மேல் வைத்த அன்பை உலகம் கண்கூடாக பார்த்த நாள். ஒரே ஒரு கிறிஸ்துவ பிறப்பு பெருவிழா தான் ஒவ்வொரு டிசம்பர் 25ம் ஆண்டு விழா மட்டுமே. மனித குலத்திற்கு இறைவன் தந்துள்ள உயரிய கொடை இந்த குழந்தை இயேசு. கடவுளும், மனிதனும் பரஸ்பரமாக பரிமாறிக் கொள்ளும் அனுபவம் தான் கிறிஸ்து பிறப்பு விழா. தன் மகனை கொடையாக மனிதருக்கு கடவுள் தந்தார். மனிதர் கடவுளுக்கு கொடுக்க வேண்டிய கொடை எதுவென்றால் நம்மையே அந்த கடவுளுக்கு கொடையாக்குவதாகும். இந்த அன்பு, மனிதர் மத்தியில் அன்றாட வாழ்வானால், எல்லா மனிதரும் உடன் வாழும் மனிதரை ஜாதி, மதம், இனம், நிறம், மொழி, வசதி என்ற அடிப்படையில் கூறுபோட்டு பார்க்காமல், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் கருணை சக மனிதர் மேல் பொழியப்படுமேயானால், இந்த உலகம் எப்படி இருக்கும்? முல்லைக்கு தேர் தந்த பாரி, அவ்வைக்கு கனி தந்த அதியமான், மயிலுக்கு போர்வை தந்த பேகன் என்று கருணைக்கும், அன்புக்கும் கை முளைத்தால், கால் முளைத்தால் அன்பும், வாழ்வும், அமைதியும், மகிழ்வும் என்ற ஆனந்தத்தில் உலகம் திக்கு முக்காடிப்போகும்.
கிறிஸ்துமஸ் என்றால் அன்பு. கிறிஸ்துமஸ் என்றால் எளிமை. கிறிஸ்துமஸ் என்றால் சேவை. எல்லாம் வல்ல கடவுள் மனிதராய் மாட்டு குடிலில், படைப்பின் மடியில் படைத்தவர் குழந்தையாய், ஆடுமாடுகள், கந்தைத் துணி என்று கசங்கிய கந்தையில் கடவுள் தவழ்ந்தார். அதே குழந்தை இயேசுவை, கசங்கிய நம் இதயத்தில் தூக்கி வைத்துக் கொண்டால் பச்சைக் குழந்தையும் பாடம் சொல்லித் தரும். கடவுள் கொடுத்த இந்தக் கொடையை ஒரு போதும் நமக்கு மட்டுமே வைத்துக் கொள்ள முடியாது. அடுத்தவருக்கு கொடுத்தால் தான் நிம்மதி. ஆடம்பர உலகில் எளிமையாய் வாழ்வது. சுயநல உலகில் பிறர் நலம் தேடுவது. அடுத்தவரை சிரிக்க வைத்துப் பார்ப்பது, வாழ வைத்துப்பார்ப்பது தான் இயேசுவின் பிறப்பு நமக்கு தரும் சவால். அன்பு செய்பவர் கடவுளிடம் இருந்து பிறந்துள்ளார் என்கிறார் யோவான்.
புதிய ஆண்டு, கடவுளின் அன்பின் மற்றொரு வெளிப்பாடு வாழும் நாட்கள் அன்பின் நாட்களாகட்டும். அடுத்தவரை வாழ வைத்துப் பார்த்தால், நமது வாழ்வு கொண்டாட்டமாகும். கடந்ததை நினைத்து வருந்தாதே. நடந்ததை மறந்து விடு. கடவுள் புதியன செய்திடுவார் என்ற இறைவார்த்தை நம்பிக்கை தரட்டும்.
இயேசு அந்தோணி (பங்குத்தந்தை, பாலவாக்கம் கடற்கரை புனித அந்தோணியார் சர்ச்)
மனிதரோடு உறவாட விரும்பும் கடவுள்
கிறிஸ்து பிறப்பு என்றவுடன் எங்கும் மகிழ்ச்சி, புத்தாடைகள், விடுமுறைகள், பரிசு பொருட்கள், சிறந்த விருந்து, இன்னும் எத்தனையோ மகிழ்ச்சியின் ஆரவாரங்கள். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் கூட, "ஹேப்பி கிறிஸ்துமஸ் ஸ்டார்' தொங்கவிட்டு மகிழ்கின்றனர்.
ஆலயங்களிலும், வீடுகளிலும் கிறிஸ்தவர்கள், "கிறிஸ்துமஸ் குடில்' அமைத்து, குழந்தை இயேசுவை நினைவு கூர்கின்றனர். குடிலுக்குள்ளே குழந்தை இயேசுவை, தாய் மரியாளின் மடியில் பார்க்க, அருகாமையில் புனித யோசேப் நிற்பதையும் சித்தரித்திருப்பதை காணலாம். அது மட்டுமல்ல, அருகாமையில் ஆடு, மாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் போன்ற பிராணிகளையும், அவைகளை பராமரிக்கும் ஆயர்களும் சித்தரிக்கப்பட்டிருப்பர். அதோடு, கீழ்திசை ஞானிகள் மூவர். அவர்கள் தங்கள் கைகளில் பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும், குழந்தை இயேசுவுக்கு காணிக்கையாக ஏந்தி கொண்டு நிற்பர். குடிலுக்கு மேலாக அசரீரிகளான தேவதூதர்கள், பறந்த மேனியில் செய்தி ஒன்று சொல்வர்: "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!' இந்த கிறிஸ்துமஸ் செய்தி, கடவுளுக்கும், மனித குலத்துக்கும் உள்ள நெருங்கிய உறவையும், அதனால் ஏற்படும் நன்மைகளையும் நமக்கு சொல்லி காட்டுகிறது. கடவுள், மனிதரை மனித உருவிலேயே சந்திக்கிறார். மனிதர்கள் அதை உணர்ந்து கடவுளோடு வாழும் போது, நிறைவும், மகிழ்ச்சியும் அடைகின்றனர். கடவுள் தொடக்கத்திலிருந்தே பல வகைகளில் மனிதரோடு பேசி, உறவாடி கொண்டு தான் இருக்கிறார்.
இயற்கையின் வனப்புகள் எத்தனை எத்தனை! அவைகள் ஆண்டவரின் புகழ் பாடுகின்றன. நமது மூதாதையர்கள், ஞானிகள், இறைவாக்கினார்கள் வழியாக ஆண்டவர், மனிதரோடு பேசி உறவாடி வந்துள்ளார். ஆனால், இப்போது, "கிறிஸ்து பிறப்பு' என்று நினைக்கும் போது, மனித கற்பனைக்கும், சிந்தனைக்கும் அப்பாற்பட்ட விதத்தில், "கடவுளால் மட்டுமே இது முடியும்' என்ற அதிசயமான விதத்தில், கடவுள் மனிதரோடு உறவாடுகிறார் என்பதாகும். "கடவுளாகவே இருந்த நித்தியவாக்கு' மனித சதையாக புலப்படும் வடிவம் எடுத்து, மனிதருக்கு தரிசனம் தருகிறார். இதுதான் இந்த "குழந்தை இயேசு!'
கடவுள் மனிதரோடு தங்கி, மனித சதையாக, மனிதரோடு வாழவே இறங்கி வந்துள்ளார். இது கிறிஸ்தவர்களின் விசுவாசம். தாய் மரியாள், தூய ஆவியானவரின் வல்லமையால், வார்த்தையை கருத்தாங்கி பெற்றெடுத்தாள். "பிள்ளையை துணிகளில் பொதிந்து தீவன தொட்டியில் கிடத்தினர்' என, பைபிள் சொல்கிறது. இந்த பூமியின் காற்றை சுவாசித்து வாழும் மனிதருக்கு அவரே உயிராக, சுவாசக் காற்றாக வந்துள்ளார். கண்களுக்கு புலப்படாத கடவுள், புலப்படும் வடிவம் எடுத்தார். மனிதரோடு தங்கி உறவாடுகிறார். மனிதர்களின் ஏக்கத்தையும், தாகத்தையும் போக்கி, அவர்களுக்கு மீட்பும், ஏற்றமும் தருகிறார். அவரோடு உறவாட மனிதரை அழைக்கின்றனர். கடவுளாயிருந்தும், தமது கடவுள் தன்மையை துறந்து, எளிமையில் குழந்தையானார். மனிதர்களும் தங்கள் மன கர்வத்தையும், கடின மனத்தையும் விட்டு விட்டு, எளிமையிலும், தூய்மையிலும் அவரை தரிசிக்க அழைப்பு பெறுகின்றனர். அவரோடு உறவாடும் மாந்தர் உள்ளத்தில் அமைதி பெருகட்டும்.
குழந்தை இயேசுவை தரிசிக்க வந்த மூன்று ஞானிகள் கொடுத்த காணிக்கைகள்: பொன், சாம்பிராணி, வெள்ளைப் போளம் என்று சொல்வர். பொன் கிறிஸ்து அரசர் என்பதையும், சாம்பிராணி அவர் கடவுள் என்பதையும், வெள்ளைப் போளம் அவர் சதையான மனிதர் என்பதையும் குறிக்கும். இயேசு அரசராக இந்த பூமிக்கு வந்தார். ஞானிகள், யூதர்களின் அரசராக பிறந்திருக்கிறார். அவர் எங்கே என்று கேட்டு, இயேசுவை தேடி வந்தனர். கடைசி நாட்களில் அவருக்கு மரண தண்டனை கொடுத்து சிலுவையில் அறையும் போது, "இவன் யூதரின் அரசனாகிய இயேசு' என்று எழுதி வைத்தனர். அவருக்கு மரண தண்டனை கொடுத்த பிலாத்து திரும்ப திரும்ப, "நீ யூதரின் அரசனா?' என்று கேட்டான். பிலாத்துக்கும் இயேசு பதில் சொல்லி வைத்தார். "என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல... உண்மையை சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்கு செவி சாய்க்கின்றனர்' என்றார். எனவே, வான தூதர்கள் கூறியது போல், அவருக்கு உரியவர்கள் மீது அவர் ஆட்சி செலுத்த, அவர்கள் உள்ளத்தில் சமாதானம் நிலவும். சாம்பிராணி என்பது இயேசுவின் தெய்வீக தன்மையை உணர்த்துகிறது. இதையே, தேவகுமாரன் அல்லது இறைமகன் என்று அவரை அழைப்பர். தூய ஆவியினால் கன்னித்தாய் அவரை கருத்தாங்கினார்.
"கடவுளால் இயலாதது ஒன்றும் இல்லை' என்ற வான தூதரின் வார்த்தையை உள்வாங்கி, கன்னித்தாய் மரியாள், "நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்று அந்த வாக்கை நம்பி ஏற்றுக் கொண்டாள். மனிதரோடு உறவாடும் கடவுளுக்கு இதுவே ஏற்ற பலி. மனித புத்திக்கு எட்டாத கடவுளின் செயல்களையும், வார்த்தையையும், மனிதர் ஆய்வுக்கூடத்தில் போட்டு, அலசி பார்க்க தேவை இல்லை. அது முடியாது. கடவுளோடு பேசும் ஒரு விசுவாசிக்கு, கன்னித்தாய் ஒரு இலக்கணம். ஞானிகளும் அப்படியே, தாய் மடியில் இறைமகன் இயேசுவை கண்டனர். வெள்ளைப் போளம் ஒரு வாசனை பொருள். அது இயேசுவின் மனிதத்தன்மையை எடுத்து இயம்பும் அடையாளம். இயேசு கடவுளாய் இருந்தும், கடவுள் தன்மையை துறந்து, மனித தன்மையை பூண்டார். மனித தன்மையில் தன் உடலை கடவுளுக்கு தியாக பலியாக கல்வாரி சிலுவையில் ஒப்புக் கொடுத்தார். மனித உடம்பில் தான் அவர் தன்னையே தியாகம் செய்த குருக்களுக்கெல்லாம் குருவாக இந்த மனுக்குலத்தையே கடவுளுக்கு காணிக்கையாக்கினார் என்பது கிறிஸ்தவ பாரம்பரியம். இதனால் தான், மூன்று ஞானிகளின் உருவங்கள், இயேசு கிறிஸ்துவின் இயல்பின் மூன்று அம்சங்களை சுட்டி காட்டுகின்றன. அவர் அரசர், விண்ணுக்கும், மண்ணுக்கும் அதிபதியானவர். அவர் கடவுள். கடவுளோடு நித்தியமாய் ஒன்றித்திருக்கும் வார்த்தையானவர். இவர் வழியாகவே எல்லாம் உண்டாக்கப்பட்டன என்று யோவான் எழுதி வைத்துள்ளார்.
"அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை' (யோவான் 1:3) அவர் ஒரு குரு. கடவுளுக்கு மனிதர்களின் பாவப்பரிகாரமாக தம் உடலையே பலியாக கொடுத்தவர். எனவே தான், "என் சதையை உண்டு என் ரத்தத்தை குடிப்பவர் நிலை வாழ்வை கொண்டுள்ளார்' (யோவான் 6:54) என்று சொல்லி மக்களை அழைத்தார். இயேசுவின் பிறப்பும், அவருடைய வாழ்வும், அவருடைய தியாகமும் மனிதர்கள் நமக்கு கடவுள் தரும் ஒரு அழைப்பாகும். "தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்' என்ற தீர்க்கதரிசியின் சொற்கள் (எசாயா 55:1) இறைமகன் இயேசு மனித குலத்திற்கு கொடுக்கும் அழைப்பாகும்.
- தந்தை வி.இக்னேஷியஸ், சே.ச., (அருள் தந்தை வி.இக்னேஷியஸ், சே.ச., சென்னை, திருவான்மியூரில் அமைந்துள்ள சத்திய நிலையம், திரு இருதய கல்லூரியில் குரு மாணவர்களுக்கு பேராசிரியார். வண்டலூர் அருகே உள்ள கீழக்கோட்டையூர் கிராமத்தில் அமைந்துள்ள "Queen of Angels' என்ற மையத்தின் இயக்குனர்.)
மனிதனோடு மனிதனாக அவதரித்த இறைக்குழந்தை இயேசு
கிறிஸ்துமஸ் விழா உலகமெங்கும் அனைத்துப் பிரிவு கிறிஸ்துவர்களின் மனமகிழ்ச்சி விழா. உலகளவில் நடைபெறும் எல்லா விழாக்களிலும் முதன்மையான விழா.
நம்மை படைத்த ஆண்டவர் அவதரித்த விழா. ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் சமயங்களையெல்லாம் கடந்த விழாவாக டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. "டென்னிஸ் தி லிட்டில் மங்க்' என்கிற ரோம் வரலாற்று ஆசிரியரின் கணிப்புப்படி 747ம் ஆண்டு கிறிஸ்து பிறந்தார். அகுஸ்து சீசர் ரோமப் பேரரசராக இருந்த போது, 746ம் ஆண்டு ரோம் பேரரசுக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் தொகை கணக்கு பட்டியலில் பதிவு செய்யுமாறு ஆணை பிறப்பித்தார். இதுவே, உலகில் நடந்த முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.
அக்காலத்தில் தான் கிறிஸ்து பிறந்தார் என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. கிறிஸ்டோல் என்ற கிரேக்க சொல்லுக்கு காப்பாற்ற வந்தவர் என்று பொருள். முன்பு வழக்கத்தில் இருந்த மாஸ் என்கிற ஆங்கில வார்த்தைக்கு, பண்டிகை அல்லது கொண்டாட்டம் என்ற பொருள் உண்டு. கிறிஸ்துவ என்கிற வார்த்தையின் சுருக்கமாக கிரேக்கர்கள் ஓ என்ற எழுத்தை பயன்படுத்தினர். இதுவே நாளடைவில் ஓ-ஆயள என்று மாறி இன்று வரை புழக்கத்தில் உள்ளது. இவையின்றி, கிறிஸ்துவின் பிரார்த்தனை கூட்டம் என்ற சொல் மருவி கிறிஸ்துமஸ் ஆனது என கூறுவோரும் உள்ளனர். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டே என்கிற பெண்மணி கிறிஸ்துமஸ் என்ற பெயரை சூட்டினார். இதற்கு கிறிஸ்துவின் ஆராதனை என்று பொருள். அற்புதமான ஆடம்பர வழிகளில் ஆண்டவர் வருவார் என்று மனிதன் வானத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத எளிய வழியில் சாதாரண மாட்டுத் தொழுவத்தில், கடவுள் மனிதனோடு மனிதனாக இறை குழந்தை இயேசு வடிவில் பிறந்தார். நாம் எளிதில் மிக நெருங்கி செல்லக் கூடிய இறைவன் எப்போதும் உதவக்கூடியவர். நம்மோடு ஒருங்கிணைந்து செயல்படக்கூடியவர் என்பது இப்பிறப்பின் மூலம் மெய்பிக்கப்படுகிறது. மார்கழி திங்கள் காரிருள், கடுங்குளிர் காலத்தில் நமக்காக இயேசு வடிவில் இறைவன் அவதரித்து ஆதிமனிதனுக்கும், தந்தையாகிய இறைவனுக்கும் இடையே அறுப்பட்ட உறவு பாலமாக இணைக்கப்பட்ட நாள்.
மனிதனின் பாவத்திற்கு மன்னிப்பு வழங்கப்பட்டு, விண்ணுலகை பெற வழி பிறந்தநாள். மானுட உள்ளங்களில் தோன்றிய தீய எண்ணங்கள் ஒழிக்கப்பட்டு அமைதியும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழவும், மனிதர்களிடையே மகத்தான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற பண்புகளும் உருக் கொண்ட நாள் கிறிஸ்துமஸ் பிறப்பு பெருவிழா. நன்றாக ஒளிவிடும் ரத்தினக் கல்லாலோ அல்லது சூரியனாலோ அல்லது நெருப்பினாலோ விரோதம் என்கிற இருள் விலகாது. சமாதானம், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் போதுதான் விரோதம் என்கிற இருள் விலகும். எனவே, நாம் ஒருவருக்கொருவர் சமாதானம் செய்து கெண்டு வாழ வேண்டும். இன்றைய போட்டி, பொறாமை, பயங்கரவாதச் செயல்கள் நிறைந்த காலக்கட்டத்தில் வாழுகின்ற நாம் கிறிஸ்து பிறப்பின் உண்மையான நோக்கத்தை அறிந்து கொண்டு, இயேசு ஒரு பிரிவினருக்கு மட்டுமே சொந்தம் என்று கருதாமல் அவருடைய போதனைகளும், இயேசு பிறப்பின் நோக்கமும் அறிந்து வாழ வேண்டும். அப்போது நம்மிடையே உள்ள அனைத்து தீய, பாவ செயல்களும் விலகி அன்பும், பாசமும், மன்னிப்பும், பகிர்வும் நிறைந்த அமைதியான உலகத்தை நாம் உருவாக்க முடியும். வருங்கால சந்ததிகளுக்கு காணிக்கையாக செலுத்த முற்பட இந்த கிறிஸ்துமஸ் விழாவை அனைவரும் பயன்படுத்துவோம்.
- இனிகோ இருதயராஜ், (தலைவர், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்)
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE