பொது செய்தி

தமிழ்நாடு

நெல், பயறு வகை பயிர்களில்அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்:வேளாண் அதிகாரி விளக்கம்

Added : ஜூன் 09, 2010
Advertisement

தென்காசி:நெல், பயறு வகை பயிர்களில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் பற்றி தென்காசி வேளாண்மை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.தென்காசி வட்டாரத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்கிடும் வகையில் நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், வேளாண்மை துணை இயக்குநர் தேவசகாயம், துரைப்பாண்டியன் வழிகாட்டுதலின் படி 100 சதம் விதை நேர்த்தி மற்றும் மண் பரிசோதனை, செம்மை நெல் சாகுபடி, பயறு வகைகளின் உற்பத்தி பெருக்கம் பற்றி கிராமம் தோறும் பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.


இத்திட்டத்தின் படி காசிமேஜர்புரத்தில் நடந்த முப்பெரும் பயிற்சி முகாமில் தென்காசி வேளாண்மை அலுவலர் உதய குமார் பேசும் போது, விதைகள் மூலம் பரவும் நோய்கள் வராமல் தடுக்கவும், ஊட்டச்சத்துகள் பயிருக்கு கிடைப்பதை எளிதாக்கவும் விதை நேர்த்தி செய்வது அவசியம். டிரைகோடெர்மா விரிடி மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் அல்லது சூடோமோனாஸ் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் பயன்படுத்துவதால் விதை மூலம் பரவும் நோயை கட்டுப்படுத்தலாம். நெல் விதைகளை இம்மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்வதால் நட்ட 40 நாட்கள் வரை குலை நோயிலிருந்து பயிரை பாதுகாக்கலாம்.இதனை பயன்படுத்துவதால் நோய்களுக்கு மருந்தடிக்கும் செலவு மிச்சமாகிறது. பயறு வகை பயிர்களில் இமிடாகுளோபிரிட் மருந்து ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்வதால் தண்டு ஈ தாக்குதலிலிருந்து பயிர்கள் பாதுகாக்கப்படும்.


நெல் விதைகளுடன் அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா தலா 2 பாக்கெட் கலந்து விதைப்பதால் வளி மண்டல தழைச்சத்து பயிருக்கு கிரகித்து கிடைக்க செய்வதோடல்லாமல், கரையாத நிலையிலுள்ள மணிச்சத்து பயிருக்கு கிடைக்க கூடிய நிலைக்கு மாறுகிறது. பயறு வகை பயிருக்கு ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா தலா ஒரு பாக்கெட் கலந்து விதை நேர்த்தி செய்வதாலும் இதே பயன் கிடைக்கும்.மண்ணில் உள்ள கார முமில நிலையறியவும், உப்பின் அளவை கண்டறியவும் பயிருக்கு டைக்கும் நிலையில் உள்ள தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தின் அளவை அறிந்து கொண்டு அதன் படி உரமிடவும் மண் பரிசோதனை செய்வது அவசியம். நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் அரை அடி ஆழத்தில் "வி' வடிவத்தில் தோண்டி மண் மாதிரி சேகரித்து மாதிரி ஒன்றுக்கு கட்டணமாக 5 ரூபாய் செலுத்தினால் மண் பரிசோதனை செய்யப்பட்டு மண் வள அட்டைகள் வழங்கப்படும். இந்த மண் வள அட்டைகளிலுள்ள பரிந்துரைப்படி மூன்று ஆண்டுகள் வரை உரமிடலாம்.


செம்மை நெல் சாகுபடியில் முதன்மை பெற்று விளங்கும் நெல்லை மாவட்டத்தில் அதிக பட்சமாக ஹெக்டேர் ஒன்றுக்கு 15 ஆயிரம் கிலோ மகசூல் பெற்று கடையநல்லூர் விவசாயி சாதனை புரிந்துள்ளார். நெல் சாகுபடியை சம்மை செல் சாகுபடி முறையில் மேற்கொள்ளும் விவசாயிகள் இது போன்ற அதிக மகசூலை பெற முடியும். ஒரு ஏக்கருக்கு 3 கிலோ விதை, பாய் நாற்றாங்கால், 14 வயதுடைய இள நாற்றுகள் நடவு, ஒன்றை நாற்று 25 செ.மீ. இடைவெளியில் சதுர முறை நடவு, கோனோவீடர் கொண்டு நட்ட 10,20,30 மற்றும் 40ம் நாட்களில் களையெடுப்பு, நீர் மறைய நீர் கட்டும் பாசன முறை, இலை வண்ண அட்டை கொண்டு தழைச்சத்து நிர்வாகம் போன்றவை செம்மை நெல் சாகுபடியின் முக்கிய கூறுகளாகும்.


பயறு வகைகளின் உற்பத்தியை பெருக்க தமிழக அரசின் வேளாமைத்துறை நடப்பாண்டில் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தவுள்ளது. பயறு வகைகளின் உற்பத்தியை பெருக்குவதில் பெரும் முட்டு கட்டையாக உள்ள மஞ்சள் தேமல் நோயை நிர்வாகம் செய்ய இந்நோய் எதிர்ப்புடைய ரகங்களான வம்பன் 3, வம்பன் 4, வம்பன் 5 போன்றவற்றை சாகுபடி செய்ய வேண்டும். நஞ்சை தரிசில் சாகுபடி செய்ய ஆடுதுறை 3, ஆடுதுறை 4 ரகங்கள் ஏற்றவை. 2 சத டி.ஏ.பி.கரைசல் தெளிப்பதால் திரட்சியான பயறு கிடைக்கும். கந்தக சத்து அதிகம் தேவைப்படும் பயறு வகைகளுக்கு ஏக்கருக்கு 44 கிலோ ஜிப்சம் இட்டு அதிக மகசூல் கிடைக்கும் என்றார்.திரளான விவசாயிகள் பயிற்சி பெற்றனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் அன்சர் அலி, நாகராஜன், பரமசிவன் செய்திருந்தனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X