சென்னை : ""மத்திய அமைச்சர் அழகிரி பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எதுவும் அளிக்கவில்லை,'' என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு பின் முதல்வர் அளித்த பேட்டி:
சட்டசபையில் கவர்னர் உரையின் போது ஒரே பிரச்னையாக இருந்ததே?
ஒரே பிரச்னை தானே - ஒரேயொரு பிரச்னை -ஆளுநர் உரை.
கவர்னர் உரையை கூட்டணிக் கட்சிகள் வரவேற்றும், எதிர்க்கட்சிகள் எதிர்த்தும் உள்ளனவே?
எதிர்க்கட்சிகள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்.
"ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் சுப்ரமணியசாமியின் மனுவை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளதே? ராஜா மீது சுப்ரமணியசாமி தொடுத்துள்ள வழக்கு பற்றி உங்கள் கருத்து?
கோர்ட்டில் உள்ள வழக்கு பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை.
தி.மு.க.,வில் ராஜா தொடர்ந்து நீடிப்பது, சில நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக செய்திகள் வருகின்றனவே?
அதை பெரிய நெருக்கடியாக நான் கருதவில்லை. நான் இது பற்றி ஏற்கனவே கூறியுள்ளேன். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்சியின் செயற்குழு கூடி விவாதித்து நடவடிக்கை எடுக்கும்.
அழகிரி அமைச்சர் பதவியையும், கட்சிப் பதவியையும் ராஜினாமா செய்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளதே?
செய்தி, செய்தியாகவே உள்ளது.
அது போன்ற கடிதம் ஏதும் வந்ததா?
அது போன்ற கடிதம் ஏதும் வரவில்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க.,வை எதிர்த்து இந்த தேர்தல் ஒரு போர் என சொல்லி இருக்கிறாரே?
"போரா?' (சண்டை) "போரா?'(வெறுப்பு)
"ஸ்பெக்ட்ரம்' பிரச்னையை பூதாகரமாக்க வேண்டும் என்று ஜெயலலிதா சொல்வதைப் பற்றி?
நீங்களே பூதாகரமாக்க என சொல்லி விட்டீர்கள். அதாவது சின்ன விஷயத்தை பெரிதுபடுத்துவதாக சொல்லி இருக்கிறார்கள். செய்யட்டும். நான் எதுவும் சொல்வதற்கில்லை.
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளதாக பிரதமர் கூறியிருக்கிறாரே?
அதுதான் உண்மை. அதையேதான் சோனியாவும் கூறியுள்ளார்.
கூட்டணியில் காங்கிரஸ் அதிக இடம் கேட்பதாக கூறப்படுகிறதே? கூட்டணி பேச்சு வார்த்தை எப்போது?
கூட்டணி பற்றியும், இடங்கள் குறித்தும் பொங்கலுக்கு பின் முடிவெடுக்கப்படும்.
தேதி முடிவாகிவிட்டதா? பொங்கலுக்கு தேதி என்ன?பா.ம.க., உங்கள் கூட்டணியில் இடம் பெறுவதற்கான சமிக்ஞைகளை அனுப்பியுள்ளதே?
நாங்களும் அவர்களுக்கு சமிக்ஞைகள் அனுப்பியுள்ளோம். அவர்களுடன் எப்போது பேசப் போகிறோம் என்பதற்கான தேதி முடிவாகவில்லை.இவ்வாறு முதல்வர் கூறினார்.
அழகிரி, கட்சிப் பதவியையும், மத்திய அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டதாகவும், அது பற்றி அக்கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் விவாதித்ததாகவும் கடந்த சில நாட்களாக பரபரப்பாக செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில், அழகிரியின் ராஜினாமா விவகாரத்தை முதல்வர் மறுத்திருப்பதன் மூலம் அந்த பிரச்னைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் கருணாநிதியும், மத்திய அமைச்சர் அழகிரியும் தொலைபேசியில் பேசியதாகவும், அதில் அவர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டுள்ளதாகவும் தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.