தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் திரள வேண்டும் : தே.மு.தி.க., மாநாட்டில் தீர்மானம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் திரள வேண்டும் : தே.மு.தி.க., மாநாட்டில் தீர்மானம்

Added : ஜன 10, 2011 | கருத்துகள் (9)
Share
சேலம்: "தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சியும் ஒன்று சேர்ந்து, சர்வாதிகார ஆட்சிக்கு சாவு மணி அடிக்க வேண்டும்' என தே.மு.தி.க., மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடந்த தே.மு.தி.க., மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்: நாடு முழுவது அரிசி, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய
தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் திரள வேண்டும் : தே.மு.தி.க., மாநாட்டில் தீர்மானம்

சேலம்: "தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சியும் ஒன்று சேர்ந்து, சர்வாதிகார ஆட்சிக்கு சாவு மணி அடிக்க வேண்டும்' என தே.மு.தி.க., மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடந்த தே.மு.தி.க., மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்: நாடு முழுவது அரிசி, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால், அனைத்து தொழில்களும் மந்தமடைந்துள்ளது. அதனால், பொதுமக்கள் இருபக்கமும் அடிவாங்கும் மத்தளம் போல சிக்கி தவிக்கின்றனர். இதை தே.மு.தி.க., வன்மையாக கண்டிக்கிறது.

நூல் விலையேற்றத்தால் நாட்டில் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில்கள் முடிங்கியுள்ளது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நூல் விலையை கட்டுப்படுத்தி, கைத்தறி மற்றும் விசைச்தறித் தொழில் மேம்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாய பொருட்கள் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதால், இடைத்தரகள் அதிக லாபம் அடைகின்றனர். ஆனால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இப்பிரச்னையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. போலீஸ் ஆளும் கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறது. குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதற்கு முட்டுக்கட்டையாக உள்ள இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். தமிழகத்தில் மழையால் பாதித்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசின் சமச்சீர் கல்வி திட்டத்தில், தமிழக முதல்வரின் வேஷத்தை களைய வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் சமச்சீர் கல்வி கிடைக்க ஆவன செய்யவேண்டும்.

பன்னாட்டு கம்பெனிகளுக்கு மின்சாரத்தை வழங்கிவிட்டு, சிறிய அளவிலான தொழிற்சாலைகள் மற்றும் விவசாயிகளுக்கு மின் விநியோகத்தை தடை செய்வதை கண்டனத்துக்கு உரியது. கட்சத்தீவு பகுதியை இலங்கைக்கு தாரை வார்த்ததை கண்டிக்கிறோம். இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்ஷே இந்திய வந்த போது, சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கிய மத்திய அரசையும், தமிழக அரசையும் தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

ஆக்டோபஸ் போல் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் கருணாநிதி குடும்பம் ஆட்கொள்வதை கண்டித்து மக்களை கூட்டி போராட்டம் நடத்தப்படும். தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சியும் ஒன்று சேர்ந்து, சர்வாதிகார ஆட்சிக்கு சாவு மணி அடிக்க வேண்டும். காவிரி பிரச்னை, பாலாறு பிரச்னை, ஒகேனக்கல் உள்பட மக்கள் பிரச்னைகளை தி.மு.க., நிறைவேற்றாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. யார் தலையீடு இன்றியும் விசாரித்து 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர்களுக்கு தண்டனையை பெற்றுத்தரவேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மொழியையும், ஆட்சி மொழியாக அங்கீகாரம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தே.மு.தி.க., மாநாட்டு துளிகள் : சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வாகனங்கள் எறும்பு போல ஊர்ந்து விழா மேடைக்கு அருகில் வந்து சேர்ந்தது.

சென்னை, கோவை, பாண்டிச்சேரி, விருதாச்சலம் ஆகிய பகுதிகளில் இருந்து சேலத்துக்கு 1200 கி.மீ., தூரத்துக்கு தே.மு.தி.க., வினர் விஜயகாந்த்தின் கட்-அவுட்டை வைத்திருந்தனர். இத்தகவல் மாநாட்டு மேடையில் தெரிவிக்கப்பட்டது.

சாலையில் ஏற்பட்ட டிராஃபிக்ஜாம் மற்றும் மாநாட்டு திரளை தொண்டர்கள் தங்கள் மொபைல்ஃபோனில் ஆர்வமுடன் படம் பிடித்தனர்.

தே.மு.தி.க., சார்பில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பத்திரிக்கை நிருபர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை காட்டிய பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். சில நிர்வாகிகள் கெடுபிடி செய்ததால் தொண்டர் படையினர் அவர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டனர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலை 4 மணிக்கு திரளான தொண்டர்கள் விழா மேடைக்கு வந்தனர்.

கட்சி நிர்வாகிகளுக்கு சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் வழங்கப்பட்டது. கட்சி தொண்டர்களுக்கு தயிர்சாதம் வழங்கப்பட்டது.

தே.மு.தி.க., பெண் தொண்டர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

விழாவில் திரளான அரவாணிகள் பங்கேற்றனர்.

பத்திரிக்கை நிருபர்கள் செய்திகளை அனுப்புவதற்கு வசதியாக "நெட்' வசதி செய்யப்பட்டிருந்தது.

மாநில கலை இலக்கிய அணி சார்பில் ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெரும்பாலான தொண்டர்கள் மேள, தாளத்துடன் ஆர்ப்பரித்தவாறு வாகனங்களில் வந்தனர்.

மாநாட்டுக்கு ஆறு வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக மாநாட்டு திடலுக்கு வெளியில் இருந்து மாநாட்டு மேடைக்கு விஜயகாந்த் இரவு 7.25 மணிக்கு நடந்து வந்தார். அவருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பளிக்கப்பட்டது.

மாநாட்டில் 10 நிமிடம் லேசர் லைட் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநாடு துவங்கிய அரை மணி நேரத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்த தே.மு.தி.க., தொண்டர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு, கற்களையும், பாட்டில்களையும் தூக்கி வீசி கொண்டிருந்தனர்.

ஜெயா டிவி காமிரா மேன் ரியாசுதீன் மற்றும் கட்சி தொண்டர் இருவர் உள்பட மூன்று பேரின் மண்டை உடைந்தது. இந்த சம்பவத்துக்கு நிருபர்கள் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கல்வீசிய ஒரு ஆசாமி பிடிபட்டான். ஆனால், கல்வீச்சு சம்பவம் நின்றபாடில்லை.

மாநாட்டில் தொண்டர் படையை சேர்ந்த அனைவருக்கும் வாக்கி-டாக்கி வழங்கப்பட்டிருந்தது.

தொண்டர்கள் பார்வையிடுவதற்காக இரண்டு மெகா சைஸ் ஸ்கிரீன் வைக்கப்பட்டிருந்தது.

மாநாட்டு திடலின் மூன்று இடங்களில் தேர்தல் நன்கொடை உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.

மாநாட்டுக்கு ஆறு வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தது.

குறைவான அளவு போலீஸாரே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

திருவள்ளுர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் தேர்தல் நிதியாக 51 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

விஜயகாந்துக்கு வெள்ளி செங்கோல், தங்க நிற செங்கோல், வீரவாள், முரசு சின்னம் உள்ளிட்டவை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X