பொது செய்தி

தமிழ்நாடு

தங்கத்தின் விலையில் தக்காளி... வெள்ளி விலையில் வெங்காயம்!

Updated : ஜன 16, 2011 | Added : ஜன 15, 2011 | கருத்துகள் (11)
Share
Advertisement

காய்கறிகள், பூ வகைகளில் துவங்கி மளிகை, எண்ணெய் வரை என அனைத்து பொருட்களின் விலையும், "மெட்ரோ ரயில்' வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது. ஆனால், அரசியல்கட்சிகள் இதைப்பற்றி கவலைப்படாமல், கூட்டணி சேர்ப்பதிலும், குறை கூறுவதிலும் ஈடுபட்டுள்ளது பொதுமக்களை எரிச்சலடைய வைத்துள்ளது.

"தங்கத்தை கூட வாங்கலாம்... தக்காளியை வாங்க முடியாது! வெள்ளி விலை கூட பரவாயில்லை... வெங்காய விலை நம்மை கண்கலங்க வைக்கிறது' இப்படி அடுக்கடுக்கான வசனங்கள் கடந்த ஒரு மாதமாக கடைவீதிகளில் எதிரொலித்து வருகிறது. காய்கறிகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் கூறினாலும், காய்கறிகள் வாங்குவது வீட்டின் மாத பட்ஜெட்டுக்கு கெடுதல் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. தினமும் ஒரு விலை விற்பதால் காய்கறிகளை வாங்க, வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, சில்லறை கடை வியாபாரிகளும் தயக்கம் காட்டுகின்றனர்.


வெங்காயத்தின் விலை, வரலாறு காணாத அளவில் கிலோ 100 ரூபாய் வரை உயர்ந்ததால், நாடே கொந்தளித்து போனது. மத்திய பிரதேச முதல்வர் அசோக் சிங் சவுகானின் மனைவி, வெங்காயம் வாங்குவதற்காக, வங்கியில் லோன் கேட்டு விண்ணப்பித்து கிண்டல் செய்யும் அளவுக்கு, வெங்காயத்தின் விலை எகிறியுள்ளது. "வெங்காயம் விலை ஏறியது என்றால், ஈ.வெ.ரா.,விடம் போய் கேளுங்கள்' என்று முதல்வர், "கூலாக' பதில் சொல்கிறார். ஆனால், கடந்த காலங்களில் இந்த, "வெங்காய விவகாரம்' டில்லியில், பா.ஜ., ஆட்சியையே பலிவாங்கியது முந்தைய "ப்ளாஷ்பேக்.' இதேபோல், தக்காளி விலையும் கிலோவுக்கு 80 ரூபாய் வரை விற்று, தற்போது 60க்கும், 80க்கும் இடையே ஆடிக்கொண்டிருக்கிறது. கேரட் வாங்கலாம் என்றால்... அதுவும் கிலோ 50 ரூபாயை விட்டு இறங்காமல் இருக்கிறது. மல்லிகைப்பூ கிலோ 100 ரூபாயிலிருந்து, 1,200ஐ எட்டியதால், மல்லிகையை முகர்ந்து விட்டு ஒதுங்கிக் கொள்ளலாம் என்ற நிலைக்கு பெண்கள் வந்து விட்டனர்.


இந்த வரலாறு காணாத விலை ஏற்றத்திற்கு, சமீபத்தில் வடமாநிலங்களில் பெய்த மழையே காரணம் என்கின்றனர். ஒவ்வொரு முறையும் போராடுவதற்கு மக்கள் பிரச்னை கிடைக்காதா என ஏங்கும் தமிழக அரசியல் கட்சிகள், இந்த விஷயத்தில் இன்னும் நீண்ட மவுனத்தை காத்திருக்கின்றன. அரசியல்கட்சிகள் தங்களது அரசியல் வெற்றிக்காக, தற்போது யார், யாரை கவிழ்க்கலாம் என்ற கணக்கில்தான் செயல்படுகின்றன. போராட்டத்திற்கு பிரச்னை கிடைக்காவிட்டால், மக்கள் பிரச்னைகளை எடுப்பார்கள். இப்போது, ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள பல முன்னேற்றங்களையும், அதிரடி மாற்றங்களையும் கவனிக்கும் தமிழக கட்சிகள், மக்களை நேரடியாக பாதித்த விலைவாசி உயர்வு விஷயத்தை கையில் எடுக்க வில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ., நடவடிக்கை, பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை கோரிக்கை, பார்லிமென்ட் பொது கணக்குக் குழு ஆய்வு என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், காங்., - பா.ஜ., - கம்யூ., கட்சிகள் தேசிய அளவிலான அரசியலை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் சிக்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜாவை, தி.மு.க., என்ன செய்யப் போகிறது என எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளன.


இதுகுறித்து அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் விவகாரம் மிகப்பெரிய பிரச்னை என்பதால், அதன் அசைவுகளை பார்த்து வருகிறோம். தமிழகத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், கூட்டணி மாற்றங்களை மக்களும் எதிர்பார்க்கிறார்கள்; கட்சிகளும் எதிர்பார்க்கின்றன. அதனால், தற்போது விலைவாசி உயர்வு, மழை சேதம் போன்ற பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்தினால், மிகப்பெரிய முறைகேடு விவகாரம் திசை திருப்பப்பட்டு, உண்மை குற்றவாளிகளை மக்களுக்கு அடையாளம் காட்ட முடியாத நிலை ஏற்படும். ஆனாலும் விலைவாசி உயர்வை மக்களும், கட்சிகளும் கவனித்து கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு உரிய பதிலை அவர்களே வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார். விலைவாசி, "வில்லனை' வீட்டுக்குள் வந்தபோது, கண்டுகொள்ளாத கட்சிகளுக்கு, தேர்தல் நேரத்தில் பாடம் புகட்ட பொதுமக்களும் தயாராக இருக்கின்றனர் என்பதை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்வது அவர்களது வெற்றிக்கு உதவியாய் இருக்கும்.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.maria alphonse pandian - mettur,இந்தியா
16-ஜன-201120:41:53 IST Report Abuse
s.maria alphonse pandian எதேக்கெடுத்தாலும் கலைஞரை குறை சொல்லுவது என்ன நியாயம்? இந்த வெங்காயம்,தக்காளி விலை உயர்வு தமிழ்நாட்டில் மட்டுமில்லை. கேரளா,மேற்கு வங்கம், டெல்லி பாம்பே என எல்லா இடத்திலுமே உள்ளது.நாட்டின் பணவீக்கமே காரணம்.
Rate this:
Share this comment
Cancel
jeevithan25 jesuraj - villupuram,இந்தியா
16-ஜன-201119:36:33 IST Report Abuse
jeevithan25 jesuraj வருமானம் ஏற ஏற விலைவாசி ஏறத்தான் செய்யும்? பொன்முடியின் பொன்மொழி.
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
16-ஜன-201113:16:29 IST Report Abuse
christ மொத்தத்தில் நம் அரசியல்வாதிகள் சரி இல்லை. அவர்கள் ஆட்சிய பிடிக்க குறியாக உள்ளார்கள் தவற மக்கள் பிரச்சனைகள் ஒரு கண்துடைப்பு நாடகமாக ஆக நடதுகீரர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X