விருத்தாசலம் : நெல் அறுவடைக்குப் பின் நேர்த்தி தொழில் நுட்பங்களை செய்து அதிக லாபம் பெறலாம் என வேளாண்மை துணை இயக்குனர் தனவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடைக்குத் தயாராக உள்ளதால் விவசாயிகள் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில் நுட்பங்களை கடைபிடித்து கூடுதல் வருவாய் பெறலாம். நெல் ரகங்களின் வயதிற்கேற்றவாறு பயிரின் அறுவடையை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும். நெல் கதிர் மணிகள் 80 சதம் மஞ்சள் நிறமாக மாறி இருந்தாலே அறுவடையை மேற்கொள்ளலாம். இதனால் மணிகள் உதிர்வதை தவிர்க்கலாம். அறுவடையின் போது 19 முதல் 23 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். அறுவடை செய்த நெல்லை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதிக சூரிய வெப்பத்தில் காயவைக்கக் கூடாது. காயவைத்த நெல்லின் ஈரப்பதம் 12 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்.
சுத்தமான நெல்லை கோணிப்பைகளில் நிரப்பி தரையின் மேல் மரச்சட்டங்கள் அல்லது காய்ந்த வைக்கோல் பரப்பி அதன் மேல் மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும். பூச்சிகள், பூஞ்சாணங்கள், தாக்கப்பட்ட நெல் மற்றும் ஈரப்பதத்தால் கெட்டுப்போன நெல்லை தனியாக பிரித்து விட வேண்டும். விளைபொருட்களுக்கு விவசாயிகள் எதிர்பார்க்கும் விலை கிடைக்காத போது அவற்றினை இருப்பு வைக்க ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கிடங்கி வசதி உள்ளது. இருப்பு வைக்கும் பட்சத்தில் உடனடி பணத் தேவைக்குப் பொருளீட்டு கடன் பெற வசதி உள்ளது. நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்து பயனடையலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.