தஞ்சாவூர்:தஞ்சை மாவட்டம், திருவையாறில், சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் 164வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனைகள் இன்று காலை இசைக்கப்படுகிறது.திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின், 164வது ஆராதனை விழாவை, கடந்த 21ம் தேதி மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து 20 முதல் 30 நிமிடங்கள் கொண்ட நிகழ்ச்சி இரு மேடைகளில் நடந்து வருகிறது. தினமும் காலை 9 முதல் இரவு 11 மணி வரை கலைஞர்கள் வாய்ப்பாட்டு, நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், கதம், மோர்சிங், புல்லாங்குழல், வீணை, கஞ்சிரா, கிளாரினெட், மாண்டலின் என, பல்வேறு வகையில் இசையஞ்சலி செலுத்துகின்றனர்.நேற்று மாலை 6.20 மணிக்கு திருப்பாம்புரம் சகோதரர்கள் டி.கே.எஸ்.சுவாமிநாதன், மீனாட்சிசுந்தரம் நாதஸ்வரம், 6.40க்கு மதுரை எம்.பி.என்.பொன்னுச்சாமி நாதஸ்வரம், 7.40க்கு சீர்காழி சிவசிதம்பரம் வாய்ப்பாட்டு, 8.40க்கு மகதி வாய்ப்பாட்டுடன் இசையஞ்சலி செலுத்தினர்.
விழாவின் முக்கிய நாளான இன்று ஆராதனை விழா நடக்கிறது. காலை 8.30 மணிக்கு மங்கள இசையுடன், சமாதியில் உள்ள தியாகராஜ சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. அப்போது, தியாகராஜர் சிலையுடன் உஞ்சவிருத்தி பஜனை நடக்கிறது. உஞ்சவிருத்திக்குப் பின், காலை 9 மணிக்கு ஒரே பந்தலில் எதிர் எதிரே அமர்ந்து நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் ஒருசேர தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைத்து இசையஞ்சலி செலுத்துவர்.
பின், காலை 11.30க்கு பெங்களூரு சவுமியா வாய்ப்பாட்டு, மதியம் 2 மணிக்கு சரஸ்வதி ராமநாதனின் ஹரிகதா, 3.15க்கு இஞ்சிக்குடி வைத்தியநாதன் நாதஸ்வரம், மாலை 5 மணிக்கு ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பி.பாலமுருகன் வயலின், இரவு 8 மணிக்கு புல்லாங்குழல் என்.ரமணியின் புல்லாங்குழல், 8.40 மணிக்கு கதரி கோபால்நாத் சாக்ஸபோன், 9 மணிக்கு சுதா ரகுநாதனின் வாய்ப்பாட்டுடன் இசையஞ்சலி நடக்கிறது.நாளை காலை 9 மணிக்கு கோவில்வெண்ணி கணேஷ் நாதஸ்வரத்துடன் துவங்கி, மாலை 6.40க்கு மெஹபூப்சுபாஹனி நாதஸ்வரம், 7.40க்கு ரவிக்கிரனின் சித்திரவீணை, 8 மணிக்கு ஓ.எஸ்.அருண் வாய்ப்பாட்டு, 8.20க்கு சிவராமகிருஷ்ணாராவ் சித்தார்.
இரவு 9.40க்கு மாண்டலின் யூ.சீனிவாசன், யூ.ராஜேஷ் மாண்டலின், ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் தவில், ஜாகீர்உசேன் தபேலாவுடன் இசையஞ்சலி செலுத்துகின்றனர். இரவு 11 மணிக்கு மேல் ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.ஏற்பாடுகளை ஸ்ரீதியாகபிரம்ம மகோத்சவ சபா தலைவர் ரெங்கசாமி மூப்பனார், செயலர் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், பொருளாளர் கணேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.