எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதித்தது அரசியல் சட்டப்படி சரியா?

Added : ஜன 24, 2011 | கருத்துகள் (19)
Share
Advertisement
எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதித்தது அரசியல் சட்டப்படி சரியா?

கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் அசோக் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர, வக்கீல்கள் இருவருக்கு அம்மாநில கவர்னர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் அனுமதி கொடுத்திருப்பது, மாநிலத்தை ஆளும் பா.ஜ.,வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கட்சி தொண்டர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த சனிக்கிழமை பல இடங்களில் வன்முறைகளும் நிகழ்ந்துள்ளன. கவர்னரின் இந்த அனுமதியை எதிர்த்து சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராட பாரதிய ஜனதா கட்சி மேலிடமும் தயாராகி வருகிறது.அரசியல் சட்டப்படி, கவர்னரின் அனுமதி அளிக்கும் அதிகாரத்தை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது. ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 19ன் கீழ், முதல்வருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான அனுமதி வழங்க கவர்னருக்கு அதிகாரம் உண்டு.அத்துடன் முதல்வருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கொடுக்கக் கூடாது என்ற, கர்நாடக மாநில அமைச்சரவையின் ஆலோசனையை புறக்கணிக்கவும் கவர்னரால் முடியும்.


அந்த ஆலோசனை அவரை கட்டுப்படுத்தாது. இந்த விஷயத்தில் அரசியல் சட்ட உரிமைகளுக்கு உட்பட்டே கவர்னர் தன் அனுமதியை வழங்கியுள்ளார் என, சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.கடந்த 1980ம் ஆண்டுகளில் மகாராஷ்டிரா முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏ.ஆர்.அந்துலே இருந்த போது, சிமென்ட் ஊழல் தொடர்பாக அவருக்கு எதிராக வழக்கு தொடர, அப்போதைய கவர்னர் அனுமதி வழங்கினார். இந்த வழக்கில் அவர் குற்றவாளி என, 1982ல், மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது.இதனால், அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக நேரிட்டது. அதேநேரத்தில், ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 20 வருடங்களுக்குப் பின், சிமென்ட் ஊழல் வழக்கில் இருந்து அவர் சுப்ரீம் கோர்ட்டால் விடுவிக்கப்பட்டார்.


இதேபோல், மத்திய பிரதேசத்தை சேர்ந்த இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடர, அம்மாநில கவர்னர் அனுமதி அளித்ததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில், 2004ம் ஆண்டில் அரசியல் சட்ட பெஞ்ச் தீர்ப்பளித்தது. அதிலும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கொடுப்பதில், கவர்னர் தன் அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அமைச்சர்கள் இருவரும் இந்தூர் மேம்பாட்டு ஆணையத்தால் கையகப்படுத்தப்பட்ட 7.5 ஏக்கர் நிலத்தை, அதன் முந்தைய உரிமையாளர்களே வழங்கினர் என்பதே குற்றச்சாட்டு. இந்தப் பிரச்னை பற்றி விசாரணை நடத்திய மத்திய பிரதேச லோக் அயுக்தாவும், அமைச்சர்கள் மீது வழக்கு தொடர போதிய ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவித்தது.


அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடர கவர்னர் அனுமதி அளித்ததை, அம்மாநிலத்தின் அப்போதைய அமைச்சரவை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், கவர்னர் அதை மீறி அனுமதி வழங்கினார். இதன் பின்னரே அவர்கள் இருவரும் கோர்ட்டை நாடினர். இருந்தாலும், இதுபோன்ற விவகாரங்களில் வழக்கு தொடர அனுமதி கொடுக்கும் போது, பிரபலமான நபர்களுக்கு எதிரான அந்தப் புகார்கள் பொய்யாகாமல் இருக்க, ஆரம்ப கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் பின்னரே கவர்னர் அனுமதி வழங்க வேண்டியது அவசியம்.ஆனால், முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதி கொடுத்த விவகாரத்தில், கவர்னர் பரத்வாஜ் அவசரம் காட்டியுள்ளார் என்பதே தெளிவாகிறது. ஏனெனில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுடன் அவர் தொடர்ந்து மோதி வருகிறார்.


அதனால் தான், கர்நாடக சட்டசபையில் எடியூரப்பாவின் அரசு, முதல் நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்த போது, நிகழ்ந்த குழப்பங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என, 2010 அக்டோர் 11ல் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார். பின்னர் சர்ச்சை எழுந்ததையடுத்து, இரண்டாவது முறையாக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோரும்படி முதல்வர் எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டார்.முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை லோக் அயுக்தா ஏற்றுக் கொண்டுள்ளது.


அத்துடன் கர்நாடகாவில் தொடர்ச்சியாக பதவியில் இருந்த முதல்வர்கள் காலத்தில் நிகழ்ந்த நில ஊழல்கள் குறித்து விசாரிக்க நீதிபதி பத்மராஜ் தலைமையில் கமிஷன் ஒன்றை, அம்மாநில அரசு நியமித்துள்ளது. அந்த கமிஷனின் விசாரணை முடிவடையும் முன்னர், கவர்னர் பரத்வாஜ் இந்த முடிவை எடுத்துள்ளதால், அவர் வேண்டுமென்றே அவசரம் காட்டியுள்ளார் என்பதே குற்றச்சாட்டு."கர்நாடக கவர்னர் பரத்வாஜ், காங்கிரஸ் கட்சியின் ஏஜன்டாக செயல்படுகிறார்' என, பாரதிய ஜனதா கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அந்தக் குற்றச்சாட்டை உண்மை என நிரூபிக்கும் வகையில், கவர்னர் தற்போது செயல்பட்டுள்ளார்.இதிலிருந்தே, எந்த ஒரு நபர் ஆராயாமல், விசாரிக்காமல் முதல்வருக்கு எதிராக ஊழல் புகார் கொடுத்தாலும், முதல்வருக்கு சிக்கல் ஏற்படுத்த நினைத்தால், கவர்னர் இதுபோன்ற அனுமதியை வழங்கலாம் என்பது தெளிவாகிறது.


காங்கிரஸ் ஏஜன்டா?கவர்னர் ஆவேசம் : ""முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளித்ததில், நான் பாரபட்சமாக செயல்படவில்லை. அப்படி கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. 500 கோடி ரூபாய் அளவுக்கு நடந்த மோசடியை, நான் கவனியாதது போல பாசாங்கு செய்ய முடியாது,'' என, கர்நாடக கவர்னர் பரத்வாஜ் கூறியுள்ளார்.


அவர் மேலும் கூறியதாவது:சட்ட விதிகளில் விலக்கு அளித்து, முதல்வர் எடியூரப்பா தன் உறவினர்களுக்கு சலுகை காட்டிய விவகாரம், கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது பற்றிய விவரங்களை தரும்படி, நான் மாநில அரசை பல முறை கேட்டும், அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை.முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி அளித்ததில், அரசியல் சட்ட ரீதியான மற்றும் சட்ட ரீதியான நிலை என்ன என்பதை நான் நன்கு அறிவேன். இதற்கு முன்னர் நடந்த நிகழ்வுகளையும் நான் கவனத்தில் கொண்டுள்ளேன். இந்த விவகாரத்தில் சட்டம் தெளிவாக உள்ளது. நான் செய்தவது தவறு என, பா.ஜ., தேசிய தலைவர்கள் யாரும் சொல்லவில்லை.நான் மூன்று மாறுபட்ட அரசுகளில் மத்திய சட்ட அமைச்சராக 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி இருக்கிறேன். அந்தக் கால கட்டத்தில் யாரும் எனக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கூட கூறியதில்லை. அப்படிப்பட்ட நிலையில், என்னை எப்படி காங்கிரசின் ஏஜன்ட் என, பா.ஜ.,வினர் கூற முடியும். அப்படி சொன்னால், அது தவறு.இவ்வாறு பரத்வாஜ் கூறினார்.


- எஸ்.பிச்சைமணி -


Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Masthankhan Jamaludheen - Nagercoil,இந்தியா
26-ஜன-201100:18:33 IST Report Abuse
Masthankhan Jamaludheen முதலமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர்வது இது முதல் தடவைஅல்ல. எடியூரப்பா உண்மையிலே நிரபராதி என்றால் நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். பந்த், போராட்டம் அது இது என்பது மக்களின் கவனத்தை திசை திருப்புவதாகும்.
Rate this:
Cancel
Arun, Chennai. - chennai,இந்தியா
25-ஜன-201115:21:32 IST Report Abuse
Arun, Chennai. யாரு தப்பு பண்ணுனாலும் தப்பு தப்புதான்.. பரத்வாஜ் காங்கிரஸ் ஆளா இல்லையாங்கிறது அடுத்த விஷயம்.. அட அப்படியே இருக்கட்டும்.. ஆனா யாராவது எட்டியுரப்பா ஊழல் பண்ணலன்னு சொல்லமுடியுமா? அதான் நெலத திருப்பி கொடுதாசுனு சொல்லி அவங்களே ஒதுக்குட்டான்களே.. இது மாதிரி தப்பு பண்ண மத்த ஸ்டேட் முதலமைச்சர் எல்லாம் யோசிக்கணும்.. முதலமைச்சர் மேல கேஸ் போட அனுமதிச்சதுல தப்பே இல்ல..
Rate this:
Cancel
V. Mani - chennai ,இந்தியா
25-ஜன-201114:33:23 IST Report Abuse
V. Mani பாரத்வாஜ் மதிய சட்ட மந்திரியாக இருந்தபோது நியமிக்க சிபாரிசு செய்த பன்னிரண்டு உயர் , உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மேல் படுமோசமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. யாரோ சம்பாதிக்க உதவ பரத்வாஜ் இலவசமாக சிபாரிசு செய்திருப்பாரா/ முதலில் அவர் பதவி விலகட்டும்!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X