மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் 14 ஆண்டுகளுக்கு முன் மூன்று மாத குழந்தை மாயமான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, பைசல் செய்தது. குழந்தையை அடையாளம் தெரிந்து கண்டுபிடிக்க இயலாது எனவும் கருத்து தெரிவித்தது. நாகபட்டினத்தை சேர்ந்த விஜயா தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு: எனக்கு ஒரு பெண், மூன்று மாத ஆண் குழந்தை இருந்தது. என் தாயாருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ஒரு மனநல காப்பகத்தில் சிகிச்சை மேற்கொண்டார். அவருக்கு உதவியாக நான், குழந்தைகளுடன் அங்கு தங்கியிருந்தேன். 1996 செப்., 20ம் தேதி அங்கு படுத்திருந்த போது, என் ஆண் குழந்தையை காணவில்லை. அங்கு பணிபுரிந்த ஜஹாங்கீர் உட்பட சிலர் கடத்தியிருக்கலாம். ஏர்வாடி போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. என் குழந்தையை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மனு நீதிபதிகள் எம்.சொக்கலிங்கம், ஏ.ஆறுமுகச்சாமி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் அழகுமணி, அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் டேனியல் மனோகரன் ஆஜராயினர். நீதிபதிகள், மூன்று மாத குழந்தை காணாமல் போயுள்ளது. அப்போது, அக்குழந்தையின் ஒரு போட்டோவை கூட மனுதாரர் போலீசாரிடம் வழங்கவில்லை. தற்போது 14 ஆண்டுகள் ஆகி விட்டன. குழந்தையை அடையாளம் காண்பது இயலாத காரியம். மனுவை நிலுவையில் வைத்திருக்க வேண்டியதில்லை. மனு பைசல் செய்யப்படுகிறது, என உத்தரவிட்டனர்.