இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்கும்படி, அந்நாட்டு பார்லிமென்ட்டில் எம்.பி.,க்கள் கோரியுள்ளனர்.பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், 82 வயதான லக்மி சந்த் என்ற இந்து ஆன்மிக தலைவரை, கடத்தல்காரர்கள் கடத்திச் சென்று கணிசமான பணம் வசூலித்தனர். 66 வயதான பாகிஸ்தானிய இந்து எம்.எல்.ஏ.,ராம்சிங் சோதோ என்பவர் அங்குள்ள சமூக விரோதிகளின் மிரட்டலுக்கு பயந்து சமீபத்தில் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அதுமட்டுமல்லாது பலுசிஸ்தானில் உள்ள 27 இந்து குடும்பங்கள், அங்குள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்க முடியாமல், இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து, பாகிஸ்தான் பார்லிமென்ட்டில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் விவாதித்தனர்."பாகிஸ்தானில் வசிக்கும் மைனாரிட்டி மக்களுக்கு சமத்துவம் அளிக்கப்படும், என்ற 73ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் ஒழுங்காக பின்பற்றப்படுவதில்லை. பணத்துக்காக இந்துக்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்' என, ஆளும் கட்சி எம்.பி.,க்கள் பல்வாஷா கான், நவாஸ் யூசூப் உள்ளிட்டோர் வற்புறுத்தினர்.