தமிழ்நாடு

கோவில் கட்ட எதிர்ப்பு : இரு தரப்பு பிரச்னையால் பதட்டம் நீடிப்பு

Added : பிப் 03, 2011
Advertisement

கும்மிடிப்பூண்டி : கோவில் கட்டுவதில் வலுத்து வரும் பிரச்னையின் ஒரு கட்டமாக, கிறிஸ்துவ அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களின் செயல்பாட்டினை கண்டிக்கும் விதமாக, இந்து அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இரு தரப்பினரின் செயல்பாடுகளால் ஆரம்பாக்கத்தில் பதட்டம் நீடிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில், பெந்தெகோஸ்தே என்ற கிறிஸ்துவ அமைப்பு இயங்கி வருகிறது. அப்பகுதியை சுற்றியுள்ள நொச்சிக்குப்பம், பாட்டைகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் அந்த கிறிஸ்துவ சபையில் வழிபட்டு வருகின்றனர். அந்த சபைக்கு சற்று எதிரே, வெங்கய்யா சாமி கோவிலை அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நிறுவி வருகிறார். தங்கள் சபைக்கு எதிரே இந்து கோவில் அமைந்தால், இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கிறுஸ்துவ அமைப்பினர் கருதினர். இதையடுத்து, கிறிஸ்துவ சபையினர் கடந்த ஆண்டு கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் ஏற்பட்ட பதட்டம் காரணமாக கோவில் கட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆர்.டி.ஓ., தலைமையிலான அமைதி பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது.
இருப்பினும், கோவில் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறி, அதனை கண்டிக்கும் விதமாக கிறிஸ்துவ அமைப்பினர் சில தினங்களுக்கு முன், ஆரம்பாக்கம் - நாயுடுகுப்பம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அதன் பின் நடந்த பேச்சுவார்த்தையில், பிரச்னையின் நிலையை அறிந்து இந்த மாதம் 4ம் தேதி மீண்டும் ஆர்.டி.ஓ., தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கும்மிடிப்பூண்டி தாசில்தார் முனியசாமி தெரிவித்திருந்தார். இந்து கோவில் கட்ட தடையாக செயல்பட்டு வரும், கிறிஸ்துவ அமைப்பினரின் செயல்பாட்டினை கண்டித்து, இந்து அமைப்பினர் நேற்று ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவில் எதிரே உண்ணாவிர போராட்டம் மேற்கொண்டனர். வெங்கய்யா கோவில் நிறுவனர் ராஜேந்திரன், அகில இந்திய சிவசக்தி தர்ம சமிதி நிறுவன தலைவர் பாலாஜி, ஆரம்பாக்கம் வியாபாரிகள் சங்க துணை தலைவர் முருகன் உள்ளிட்ட பலரின் முன்னிலையில், 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அசம்பாவிதம் ஏற்படாதபடி, பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரு தரப்பினரிடையே வலுத்து வரும் பிரச்னை காரணமாக, ஆரம்பாக்கம் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அமைதி பேச்சுவார்த்தையில், சுமூக தீர்வு காணும் நோக்கில், அரசுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X