ஆழ்வார்குறிச்சி : கடையம் வட்டாரத்தில் நெற்பயிரில் இலையழுகல் நோய் தடுப்பு முறைகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கடையம் வட்டாரத்தில் பிசான பருவத்தில் தற்போது பயிரிடப்பட்டுள்ள நெல் பயிரியில் இலையழுகல் நோய் பரவலாக காணப்படுகிறது. நெல் பயிரின் இலைகளின் அடிப்பாகமாகிய இலையுறைகளில் நீர் கோர்த்த புள்ளிகள் தோன்றும். இவை பெரிய புள்ளிகளாக மாறி இலையழுகி சிம்புகள் அழுகிவிடும். இதனால் சிம்புகள் கதிர்விடாமல் முழுமையாக அழுகிடும். மேலும் பனி, மேகமூட்டம், குளிர்ந்த காற்று, குறைந்த வெப்பநிலையுடன் கூடிய சீதோஷ்ண நிலை நிலவுவதால் இந்நோய் அதிகம் பரவி மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நோயை கட்டுப்படுத்த கார்பன்டாசிட் ஏக்கருக்கு 250 கிராம் அல்லது டைத்தேன் எம் 45 அல்லது இசட் 78 அல்லது கெச்சாகாண்டசோல் 250 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து விசை தெளிப்பான் மூலம் ஏக்கருக்கு 8 டேங்க், கைத்தெளிப்பான் என்றால் ஏக்கருக்கு 12 டேங்க் வீதம் தெளிக்கவும். தழைத்சத்து அதிகம் இடுவதை தவிர்க்கவும். மேலும் ஏக்கருக்கு 17 கிலோ பொட்டாஷ் உரம் இடவும். நீரை வடித்துவிட்டு மருந்து தெளிக்கவும். 3 நாட்கள் வரை தண்ணீர் அடைக்க வேண்டாம் என கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.