விடுதலை புலி ஆதரவு இயக்கங்கள் மீண்டும் தலை தூக்கல்?| Is tamil tiger support organisations rising in tamilnadu? | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விடுதலை புலி ஆதரவு இயக்கங்கள் மீண்டும் தலை தூக்கல்?

Updated : ஜூன் 14, 2010 | Added : ஜூன் 13, 2010 | கருத்துகள் (57)
Share
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ள விடுதலைப் புலி ஆதரவு அமைப்புகளை போலீசார் கண்காணிக்காமல் விட்டதால், தற்போது பிரபாகரன் பெயரில் வெடிகுண்டு சம்பவம் நடந்துள்ளது. இதனால், புலிகள் ஆதரவு இயக்கங்கள் மீண்டும் தலை தூக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இரு மாவட்ட போலீசாரும் கலக்கத்தில் உள்ளனர். இலங்கையில் தனி நாடு கோரி போராடி வந்த விடுதலைப் புலிகளுக்கு,
tamil tiger,organisation,rising, tamilnadu,விடுதலை புலி ,இயக்கங்கள்,தலை தூக்கல், போலீசார்

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ள விடுதலைப் புலி ஆதரவு அமைப்புகளை போலீசார் கண்காணிக்காமல் விட்டதால், தற்போது பிரபாகரன் பெயரில் வெடிகுண்டு சம்பவம் நடந்துள்ளது. இதனால், புலிகள் ஆதரவு இயக்கங்கள் மீண்டும் தலை தூக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இரு மாவட்ட போலீசாரும் கலக்கத்தில் உள்ளனர்.


இலங்கையில் தனி நாடு கோரி போராடி வந்த விடுதலைப் புலிகளுக்கு, தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். சில அமைப்பினர் நிதி திரட்டியும் அனுப்பி வந்தனர். கடந்த 91ல் நிகழ்ந்த ராஜிவ் படுகொலைக்குப் பின், புலிகள் அமைப்பை, மத்திய அரசு தடை செய்தது.இருப்பினும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பழ நெடுமாறனின் தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்கம், தமிழர் படை, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம், தமிழிளைஞர் கூட்டமைப்பு, தமிழர் விடுதலை படை, தமிழர் விடுதலை இயக்கம், மக்கள் உரிமை கூட்டமைப்பு, உலக தமிழர் கூட்டமைப்பு, தமிழர் தேசிய இயக்கம், தமிழர் கழகம், தமிழர் மீட்சி படை உள்ளிட்ட சில அமைப்பினர், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இயங்கி வந்தனர்.கடந்தாண்டு இலங்கையில் போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், போரை நிறுத்த வலியுறுத்தியும், இலங்கை ராணுவத்திடம் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வலியுறுத்தியும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புலிகள் ஆதரவு அமைப்பினரும், அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தின.


இலங்கை தமிழர்களை காத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, கடலூரில் ஜோதி என்கிற தமிழ்வேந்தன் என்ற வாலிபர் கலெக்டர் அலுவலகம் முன், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதன் எதிரொலியாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அரசு பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன.அதேபோல், 2009 ஜனவரி 29ம் தேதியன்று, தீக்குளித்து இறந்த முத்துக்குமார் மரணத்தைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டத்தில் "ஆயுத எழுத்து' என்ற அமைப்பு சார்பில், இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது. அதில், "இன்று இலங்கைத் தமிழனுக்கு குண்டு, நாளை இந்திய தமிழனுக்கும் உண்டு' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.


இலங்கை போரை தடுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால், இம்மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்., கட்சியையும், அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க.,வை கடுமையாக சாடின.அத்துடன் கடந்த லோக்சபா தேர்தலின் போது, "இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைத்த இவ்விரு கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்' என, திண்ணை பிரசாரம் செய்ததோடு, பொதுமக்களுக்கு "சிடி'யும் வழங்கினர். இந்த செயல்களை எல்லாம், கியூ பிரிவு மற்றும் சி.ஐ.டி., போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், கடந்தாண்டு மே மாதம் புலித் தலைவர் பிரபாகரன், ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அதை, இம்மாவட்டங்களில் உள்ள புலி ஆதரவு அமைப்புகள் மறுத்தன. "பிரபாகரன் உயிரோடு உள்ளார். தேர்தலில் காங்., கூட்டணி தோல்வி அடைந்ததும் மீண்டும் பிரபாகரன், இயக்கத்தை வழி நடத்தி செல்வார்" என, பிரசாரம் செய்து வந்தன.புலிகள் ஆதரவு அமைப்புகளின் இப்பிரசாரத்தால் பிரதான கட்சிகள் கலக்கமடைந்தன.


 ஆனால், தேர்தல் முடிவுகள் எதிர்மறையாக இருக்கவே, புலிகள் ஆதரவு அமைப்பினரின் செயல்பாடு மந்தமடைந்தது. அமைப்புகள் முற்றிலுமாக முடங்கி விட்டதாகக் கருதி, அவர்களின் செயல்பாட்டை கண்காணிப்பதை காவல்துறையினர் கைவிட்டனர்.இதனால், கடந்த 8ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வந்ததை கண்டித்து நடந்த போராட்டங்களில் ஈடுபட்டவர்களை, பெயரளவிற்கு கைது செய்து உடனே விடுவித்தனர்.இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் சித்தணி அருகே நேற்று முன்தினம் அதிகாலை ரயில் தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப்பட்ட இடத்தில் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் பெயரில் கிடந்த துண்டு பிரசுரங்கள் "கியூ' பிரிவு போலீசார் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதன் காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடந்தாண்டு வரை தீவிரமாக செயல்பட்டு வந்த புலிகள் ஆதரவு அமைப்பினரை பிடித்து, தற்போதைய வெடிகுண்டு சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.புலிகள் ஆதரவு அமைப்புகள் மீண்டும் தலை தூக்கத் துவங்கி விட்டனவோ என்ற அச்சமும் போலீசார் மத்தியில் உருவாகியுள்ளது. அதைத் தடுக்க இப்போதே போலீசார் முனைப்போடு செயல்பட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.


 நமது சிறப்பு நிருபர்-


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X