| குற்றப்பத்திரிகையில் உள்ளவர்களை நீக்க முயற்சிப்பதை தடுக்க கோரிக்கை:கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குற்றப்பத்திரிகையில் உள்ளவர்களை நீக்க முயற்சிப்பதை தடுக்க கோரிக்கை:கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி

Updated : பிப் 11, 2011 | Added : பிப் 11, 2011 | கருத்துகள் (1)

திருச்சி:"பாதிரியார் மீதான கற்பழிப்பு வழக்கில், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், சில குற்றவாளிகளின் பெயர்களை நீக்க நடக்கும் முயற்சியை தடுக்கவேண்டும்' என, கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்துள்ள தஞ்சாவூரான் சாவடியைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி (32). இவர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வராக இருந்த பாதிரியார் ராஜரத்தினம் மீது, 2010 அக்., 12ம் தேதி, திருச்சி, கோட்டை மகளிர் போலீசில் கற்பழிப்பு மற்றும் கொலைமிரட்டல் புகார் செய்தார்.

புகாரை அடுத்து, பாதிரியார் ராஜரத்தினம், யேசு சபை தலைவர் தேவதாஸ், பாதிரியார்கள் ஜோ சேவியர், சேவியர் வேதம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கல்லூரி முதல்வர் பதவியிலிருந்து விலகிய பாதிரியார் ராஜரத்தினம், மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.

இவ்வழக்கை விசாரித்த கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, ஜன., 29ம் தேதி, திருச்சி ஜே.எம்., நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் ஆப்ரகாம் லிங்கனிடம், 100க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.அந்த குற்றப்பத்திரிகையின் நகல் கேட்டு, கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி, பிப்.,3ம் தேதி, ஜே.எம்., நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு நகல் வழங்கப்படவில்லை. மாறாக அன்று மாலை குற்றப்பத்திரிகையை, ஜே.எம்., 1 மாஜிஸ்திரேட் ஆப்ரகாம் லிங்கன், கோட்டை மகளிர் போலீசாருக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அறிந்த கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி, பிப்.,7ம் தேதி, தன் வக்கீல் இருதயசாமியுடன், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் புகார் மனு அளித்தார். அதில், "போலீஸ் உயரதிகாரிகளும், ஜே.எம்., 1 மாஜிஸ்திரேட்டும் சேர்ந்து, குற்றப்பத்திரிகையில் உள்ள சில குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கின்றனர்' என்று கூறியிருந்தார்.கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி நேற்று மதியம் ஒரு மணியளவில் திடீரென திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து, போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாளிடம் புகார் மனு அளித்தார்.

அதில், "குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றவாளிகளின் பெயர்களை நீக்க கோட்டை போலீசார் மேற்கொண்டுள்ள முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.பின்னர் கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி நிருபர்களிடம் கூறியதாவது:குற்றப்பத்திரிகையில் உள்ள இரண்டு பெயர்களை நீக்கவும், ஆவணங்களை அழிக்கவும் கோட்டை போலீசார் முயற்சித்து வருகின்றனர். அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கமிஷனரிடம் மனு கொடுத்தேன். குற்றவாளிகளுக்கு அரசியல் பலம், பணபலம், போலீஸ் உயரதிகாரிகள், நீதித்துறையில் உள்ளவர்கள் என பலரும் ஆதரவாக இருப்பதால், வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்று விரைவில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 7ம் தேதி, போலீஸ் கமிஷனரும், மாஜிஸ்திரேட்டும் இணைந்து தான், குற்றப்பத்திரிகையில் உள்ளவர்களை காப்பாற்ற முயற்சிக்கின்றனர் என்று கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். ஆனால், அவர் குற்றஞ்சாட்டிய, போலீஸ் கமிஷனரிடமே, ப்ளாரன்ஸ் மேரி நேற்று முன்தினம் மனு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X