"எஸ்-பாண்ட்' ஒப்பந்தம் குறித்த முழு விவரமும் அரசுக்கு தெரியாது: கபில் சிபல்

Updated : பிப் 13, 2011 | Added : பிப் 11, 2011 | கருத்துகள் (30)
Share
Advertisement

புதுடில்லி : "எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர்கள் ஒதுக்கீடு தொடர்பாக ஆண்ட்ரிக்ஸ் - திவாஸ் நிறுவனம் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்த முழு விவரமும் மத்திய அமைச்சரவைக்கு தெரியாது என, மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்த புகாராக இரண்டு லட்சம் கோடி ரூபாய் ஊழலா என்ற கேள்வி இப்போது பெரிய அளவில் பேசப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம், விரைவில் ஏவ இருக்கும், ஜி-சாட் 6 மற்றும் ஜி-சாட் 6ஏ செயற்கைக்கோள்களில் எஸ்-பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் இடம் பெற உள்ளன. இது தொலைத்தொடர்பு சேவையில், "4ஜி' ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டிற்கான அதிக சக்தி வாய்ந்த அலைவரிசையை கொண்டவை. வர்த்தக பயன்பாட்டிற்கான நடவடிக்கைகளை துவக்குவதற்காக உருவாக்கப்பட்டது ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம். இந்நிறுவனம், இரண்டு செயற்கைக்கோள்களில் தலா 10 எஸ்-பாண்ட் டிரான்ஸ்பாண்டர்களை திவாஸ் மீடியா நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ய, 2005ல் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம் தான், மத்திய அரசுக்கு பெரும் குடைச்சலை கொடுத்துள்ளது. மத்திய தணிக்கை அதிகாரி நடத்திய ஆய்வில், இந்த ஒப்பந்தம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அது பிரச்னையாகி மீடியாக்களில் வந்து பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.


செயற்கைக்கோள்களே ஏவப்படாத நிலையில், இந்த ஒப்பந்தத்தால் அரசுக்கு, இரண்டு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாயின. இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பின. ஆண்ட்ரிக்ஸ் - திவாஸ் மல்டிமீடியா நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்களை மறு ஆய்வு செய்ய, இரண்டு உறுப்பினர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை, மத்திய அரசு நேற்று முன்தினம் நியமித்தது. திட்டக் கமிஷனின் உறுப்பினர் பி.கே.சதுர்வேதி தலைமையிலான குழுவில், விண்வெளி துறையில் வல்லுனரும், விண்வெளி கமிஷனின் உறுப்பினருமான ரோத்தம் நரசிம்மாவும் இடம் பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து, திவாஸ் மல்டிமீடியாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்வர்.


எதிர்ப்பு: இதற்கிடையில், இந்த உயர்மட்ட குழுவை அமைத்ததற்கு பாரதிய ஜனதாவும், இடதுசாரி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சதுர்வேதி, ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்தில் கேபினட் செயலராக இருந்தவர். மற்றொருவரான ரோத்தம் நரசிம்மா, விண்வெளித் துறையை சேர்ந்தவர். இருவருமே ஒப்பந்தத்தில் தொடர்புடையவர்கள் என்பதால், இந்த விவகாரத்தை முடக்கும் நோக்கில் குழு அமைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில், "இந்த ஒப்பந்தம் நியாயமற்றது, ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லும் போது, எதற்காக ஆராய குழு அமைக்கப்படுகிறது. இது பற்றி சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். அதற்கு, சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளது.


இந்நிலையில், தனியார் "டிவி'க்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது: இஸ்ரோவின், ஆண்ட்ரிக் - திவாஸ் நிறுவனத்திற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்த முழு விவரமும் மத்திய அமைச்சரவைக்கு தெரியாது. இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதை நீக்கி விடுவது தான் சிறந்தது. இந்த ஒப்பந்தத்தை கேபினட் தான் அனுமதித்ததா என்பது பற்றி நான் அறிந்து இருக்கவில்லை. தனிப்பட்ட ஒப்பந்தங்கள் எல்லாம் கேபினட் கூட்டத்திற்கு விவாதிக்கப்பட வராது. இரண்டு செயற்கைக்கோள்கள் தொடர்பாக தான் அமைச்சரவை அனுமதித்து இருக்கும். இந்த ஒப்பந்தம் முழுக்க முழுக்க துறை சம்பந்தப்பட்டது. இது தொடர்பாக ஆய்வு செய்ய உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகே விவரம் தெரியும். இவ்வாறு கபில் சிபல் கூறினார். ஒப்பந்தத்தின் அடிப்படை விஷயம் என்பது குறித்து கேபினட்டுக்கு தகவல் அளிப்பதில் இஸ்ரோ அதிகாரிகள் வேண்டுமென்றே தவறாக வழி நடத்துகின்றனரா என்று கபில் சிபலிடம் கேள்வி கேட்ட போது, அதற்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.


கமிஷன் கூட்டம்: ஆண்ட்ரிக்ஸ் - திவாஸ் ஒப்பந்தம் பற்றி விவாதிப்பதற்காக இன்று விண்வெளி கமிஷனின் கூட்டம் இன்று டில்லியில் நடக்கிறது. விண்வெளி துறையின் செயலரான ராதாகிருஷ்ணனின் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர். ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு இக்கூட்டத்தில் முடிவு கொடுக்கப்பட்டு, கொள்கை முடிவு எடுப்பதற்காக கேபினட்டுக்கு பரிந்துரை செய்யப்படும்.


வரவேற்பு: ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய உயர் கமிட்டி அமைத்து இருப்பதற்கு திவாஸ் மல்டிமீடியா நிறுவனம் வரவேற்றுள்ளது. இதற்கு முழு ஒத்துழைப்போம். எந்த முடிவாக இருந்தாலும், தீர விசாரணைக்கு பின் எடுக்கப்படும் முடிவை நாங்கள் முழு மனதுடன் ஏற்கிறோம்' என, நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


ஆய்வு செய்பவர்கள் பின்னணி: ஆண்ட்ரிக்ஸ் - திவாஸ் இடையே ஒப்பந்தம் குறித்து மறு ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் பின்னணி இது தான்: பி.கே.சதுர்வேதி (குழுவின் தலைவர்): 1966ல், தேர்வான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பேட்சை சேர்ந்தவர். அரசு துறையில் பல உயர் பொறுப்புகளை வகித்துள்ள இவர், பல்வேறு அமைச்சகங்களில் செயலராக பணியாற்றியுள்ளார். கடந்த 2007ல், திட்டக்கமிஷன் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன் இவர் 13வது நிதி கமிஷனின் உறுப்பினராக இருந்துள்ளார். திட்ட கமிஷனின் உறுப்பினராக இருக்கும் போது, பல்வேறு விஷயங்களில் குறிப்பாக பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, அரசு - தனியார் பங்களிப்பில் திட்டங்களை செயல்படுத்துவது போன்ற விஷயங்களில் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கினார். கடந்த 2004 முதல் 2007ம் ஆண்டு வரை இவர் கேபினட் செயலராக இருந்துள்ளார். மேலும் அணு சக்தி கமிஷனின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.


ரோத்தம் நரசிம்மா: குழுவின் மற்றொரு உறுப்பினராக ரோத்தம் நரசிம்மா விண்வெளித் துறை யில் நல்ல அனுபவம் பெற்றவர். அணு சக்தி கமிஷனில் முக்கிய பணியாற்றியுள்ளார். இஸ்ரோவின் இரண்டாவது தலைவராக இருந்த சதீஷ் தவானின் மாணவர் இவர். இந்திய விஞ்ஞான மையத்தின் விண்வெளித் துறை இன்ஜினியரிங் துறையின் தலைவராக பணியாற்றியுள்ளார். இஸ்ரோவின் கவுரவமிக்க பேராசிரியராக இருந்துள்ளார். விண்வெளித் துறையில் இவர் ஆற்றிய சேவைக்காக பத்மபூஷண் விருது மற்றும் எஸ்.எஸ்.பட்நாகர் விருதுகளை பெற்றுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.k.natarajan - chennai,இந்தியா
12-பிப்-201123:07:23 IST Report Abuse
g.k.natarajan அரசாங்கத்திற்கு ஒன்றுமே தெரியாது என்றால் ,அமைச்சர், எதற்கு!ஊழியர்களே எல்லாம் செய்யலாமே ! திரு ராதாகிருஷ்ணன் ஜூலை 2010 , ஒப்பந்தத்தை ரத்து செய்ய எழுதிய கடிதத்திற்கு இதுவரை மதிய அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை! மீடியாவில் வெளிவந்தவுடந்தான் ,விரைவாக வேலை நடக்கிறது!இல்லையெனில் மூடி மறைக்கப்பட்டு விடுமோ! இப்பொழுது சட்ட சிக்கலில் மாட்டிகொண்டு கமிட்டி அமைகிறார்கள்! சிபில் அவர்கள் வாயை திறக்காமல் எல்லாம் தனக்குத்தான் தெரியும் என்று பேசி மாட்டிகொள்ளாமல் இருந்தால் நல்லது! நடராஜன். நடராஜன்.
Rate this:
Cancel
Silluvandu Sillu - chennai ,இந்தியா
12-பிப்-201115:40:17 IST Report Abuse
Silluvandu Sillu அப்ப நீங்க எல்லாம் ஒன்னும் தெரியாத யோகியஸ்தர்கள்னு சொல்ல வர ....
Rate this:
Cancel
bobsel - Tirupur,இந்தியா
12-பிப்-201115:03:07 IST Report Abuse
bobsel டேய் கபில் சிபல்...!! உனக்கெல்லாம் தேசப்பற்றே கிடையாதா.? நீ லண்டன்ல வாழ்ந்தப்ப அங்க உள்ள அமைச்சர்கலஎல்லாம் பாத்திருப்பீயல்ல...இங்க வந்ததும் எப்படிடா இப்படி கொஞ்சம் கூட யோசிக்காம திருட்டு வேலைய காட்டுறீங்க..?? நாட்டுக்கே சனியன் புடித்த மாதிரி இருக்குடா..ச்சே..... நான் உண்மையிலேயே வெட்கபடரேண்டா..."இந்தியனாக" பிறந்ததுக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X