ஆமதாபாத்: குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் ரயிலை எரித்து, 59 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக, 31 பேரை சிறப்பு கோர்ட் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. இந்த வழக்கிலிருந்து முக்கிய குற்றவாளி என்று இதுவரை கூறப்பட்ட மவுலானா உம்ராஜி உட்பட 63 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உள்ள தண்டனை குறித்து வரும் 25ம் தேதி தீர்ப்பு தரப்படும்.
கடந்த 2002ம் ஆண்டு, அயோத்தியில் கரசேவை முடித்து விட்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் திரும்பிய 59 கரசேவகர்கள் கோத்ரா ரயில் நிலையத்தில் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர்.நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த விவகாரம். முதலில் இந்த வழக்கை திட்டமிடாத தாக்குதலாக போலீசார் எப்.ஐ.ஆர்.,பதிவு செய்தனர். 2005ம் ஆண்டு ரயில்வே அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட கமிஷன் "இது ஒரு விபத்து' என, அறிக்கை தாக்கல் செய்தது. பின்னர் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, இதை முஸ்லிம் அமைப்பு ஒன்று திட்டமிட்டு செய்ததாக கூறியது. இது தொடர்பாக 134 பேர் கைது செய்யப்பட்டனர். இறுதியில் 94 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் குஜராத்தில் மிகப்பெரிய வன்முறை ஏற்பட்டது. ஆயிரத்து 200 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். இந்த கலவரத்தில் 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு கருதி சபர்மதி சிறைக்குள்ளேயே 2009ம் ஆண்டு சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. முதலில் அனைத்து குற்றவாளிகள் மீதும் பொடா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், ஐகோர்ட் இதை ரத்து செய்து விட்டது.
ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக மவுலானா உமர்ஜி, கோத்ரா நகராட்சி தலைவர் முகமது அப்துல் ரகிம் உள்ளிட்டோர் மீது குஜராத் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்தது. இவர்கள் தற்போது குற்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட் நீதிபதி பி.ஆர்.படேல், 31 பேரை குற்றவாளியாகவும், 63 பேரை வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும் அறிவித்தார். எனினும் 31 பேருக்கு என்ன தண்டனை என்பது வரும் 25ம்தேதி அறிவிக்கப்பட உள்ளது. அரசு தரப்பு வக்கீல் ஜெ.எம்.பன்சால் குறிப்பிடுகையில், "ரசாக் குர்கர் என்பவருக்கு சொந்தமான அமன் விருந்தினர் இல்லத்தில் தான் ரயில் எரிப்பு சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதையும், ரயில் எரிப்பதற்கு உண்டான எரிபொருள் இங்கு தான் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பதையும் கோர்ட் உறுதி செய்துள்ளது. ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட சதி என்பதை கோர்ட் ஒப்புக்கொண்டுள்ளது' என்றார்.
குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல் ஐ.எம்.முன்ஷி குறிப்பிடுகையில், " இந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை என்பதை அறிந்து கொண்டு அதை எதிர்த்து அப்பீல் செய்வோம்' என்றார். இந்த தீர்ப்பு வெளியாவதையொட்டி ரயில் எரிவது போன்ற படங்களோ, கலவர படங்களோ பத்திரிகைகள் வெளியிடக்கூடாது, என போலீசார் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். தீர்ப்பையொட்டி, குஜராத்தின் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பா.ஜ., வரவேற்பு: சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.,)ரயில் எரிப்பு சம்பவம் மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் குறித்த ஒன்பது வழக்குகளை விசாரித்தது. இதில் முதல் வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து எஸ்.ஐ.டி.,தலைவர் ஆர்.கே.ராகவன் குறிப்பிடுகையில், "இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. ரயில் எரிப்பு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டது கவலையளிக்கும் விஷயம். எனினும் சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பு திருப்தி அளிக்கிறது. மவுல்வி உமர்ஜி உள்ளிட்டோர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தீர்ப்பின் நகல் கிடைத்ததும் இவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா? வேண்டாமா என்பதை முடிவு செய்வோம்' என்றார்.
இந்த தீர்ப்பை பாரதிய ஜனதா வரவேற்றுள்ளது. இது குறித்து இக்கட்சியின் தகவல் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிடுகையில், "இந்த தீர்ப்பின் மூலம் நீதித்துறையின் மீதுள்ள நம்பக தன்மை மேம்பட்டுள்ளது. லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்த போது, ஓய்வு பெற்ற நீதிபதி யு.சி.பானர்ஜி தலைமையிலான கமிட்டி, ரயிலின் உள்ளே ஏற்பட்ட தீயினால் கரசேகவர்கள் இறந்ததாக கூறியது. ஓய்வு பெற்ற நீதிபதியே இந்த சம்பவத்தை விபத்து என்று கூறி அறிக்கை தாக்கல் செய்தது வெட்கக்கேடானது. எனினும் தற்போதைய தீர்ப்பு, சதி திட்டம் நடந்துள்ளதை நிருபித்துள்ளது' என்றார். "தீர்ப்பின் விவரத்தை முழுமையாக படிக்காமல் கருத்து கூறமுடியாது'என, காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார். எனினும், "ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடந்த வன்முறை ஜனநாயகத்துக்கு எதிரான சதி செயல்' என, அவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை குறை கூறினார்.
கோத்ரா சம்பவத்தின் முக்கிய திருப்பங்கள்
2002 பிப்., 27: ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்தில், 1,500 பேர் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு.
பிப்., 28 - மார்ச் 31: கரசேவகர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, குஜராத் முழுவதும் கலவரம் மூண்டது. 1,200 பேர் பலியாயினர்.
மார்ச் 3: ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது, "பொடா' சட்டம் பாய்ந்தது.
மார்ச் 6: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மற்றும் தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பாக விசாரணை கமிஷன், குஜராத் அரசால் நியமனம்.
மார்ச் 25: மத்திய அரசின் கோரிக்கையை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டோர் மீது தொடுக்கப்பட்ட, "பொடா' சட்டம் நீக்கம்.
மே 27: முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட, 54 பேர் மீது, பொடா சட்டத்தில் வழக்கு தொடர அனுமதி மறுப்பு.
நவ., 21: கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பான நீதி விசாரணையை சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்தது.
2004 செப்., 4: ரயில்வே அமைச்சராக இருந்த லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான அமைச்சரவை, இவ்வழக்கு விசாரணை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி பானர்ஜி தலைமையில் குழு அமைத்தது.
செப்., 21: மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்றவுடன், குற்றவாளிகள் மீதான, "பொடா' சட்டத்தை நீக்குவது பற்றி மறுஆய்வுக் குழு அமைப்பு.
2005 ஜன., 17: பானர்ஜி தலைமையிலான குழு, சம்பவம் தொடர்பான முதல் கட்ட அறிக்கையை சமர்ப்பித்தது.
மே 16: "பொடா' சட்டம் நீக்குவது பற்றி அமைக்கப்பட்ட மறுஆய்வுக்குழு, குற்றவாளிகள் மீது, "பொடா' சட்டம் தேவையில்லை என அறிக்கை.
2006 அக்., 13: பானர்ஜி தலைமையிலான குழு செல்லாது என, குஜராத் ஐகோர்ட் அறிவிப்பு.
2008 மார்ச் 26: ரயில் எரிப்பு மற்றும் கலவரம் தொடர்பான வழக்கை விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்.ஐ.டி.,), சுப்ரீம் கோர்ட் அமைத்தது.
செப்., 18: நானாவதி கமிஷன் அறிக்கையை சமர்ப்பித்தது. ரயில் எரிக்கப்பட்ட சம்பவம், ஒரு கும்பலால் திட்டமிடப்பட்ட சதித்திட்டம். இக்கும்பல், ரயில் பெட்டிக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளது என அறிக்கையில் தகவல்.
2009 பிப்., 12: "பொடா' சட்டம் இவ்வழக்கில் தேவையில்லை என. பொடா மறுஆய்வுக் குழுவின் வாதத்தை குஜராத் ஐகோர்ட் ஏற்பு.
பிப்., 20: குற்றவாளிகள் மீது, "பொடா' சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்ற ஐகோர்ட் முடிவை எதிர்த்து, கோத்ரா ரயில் எரிப்பில் பலியானவர்களின் உறவினர்கள், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
மே 1: இவ்வழக்கில் சிறப்பு விசாரணை குழுவின்(எஸ்.ஐ.டி.,) விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை, சுப்ரீம் கோர்ட் நீக்கம். எஸ்.ஐ.டி.,யின் தலைமை பொறுப்பை முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர் ஆர்.கே.ராகவன் ஏற்ற பின், சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்தது.
2010 மே 6: குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு உள்ளிட்ட, 9 கலவர வழக்குகளில் சிறப்பு நீதிமன்றம், தீர்ப்பு வெளியிட சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவு.
2011 ஜன., 18: தீர்ப்பு வெளியிட விதித்த தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கம்.
பிப்., 22: சிறப்பு நீதிமன்றம், 31 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் இருந்து, 63 பேரை விடுவித்தது. குற்றவாளிக்களுக்கான தண்டனை பிப்., 25ம் தேதி வழங்கப்படும் என, சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE