இஸ்லாமாபாத் :பாகிஸ்தான் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் ஷாபாஸ் பட்டி, சுட்டுக் கொல்லப்பட்டார். இரண்டு மாதங்களில் நடந்துள்ள இரண்டாவது பெரிய அரசியல் படுகொலை இது.பாகிஸ்தான் அரசில், சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஷாபாஸ் பட்டி. பிரதமர் கிலானி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒரே கிறிஸ்தவரான இவர், சமீப காலமாக தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கூறி வந்தார். பாகிஸ்தான் அரசின் மத துவேச சட்டத்திற்கு எதிராகவும் அடிக்கடி குரல் கொடுத்தார். இறை தூதர் முகமது நபியை இழிவுபடுத்தியதற்காக, கடந்த ஆண்டில், பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண்ணான ஆசியா பீவிக்கு ஆதரவாகவும் பேசி வந்தார். இந்நிலையில், காலை 11.20 மணிக்கு இஸ்லாமாபாத்தில் செக்டார்-1பி-யில் உள்ள தன் வீட்டிலிருந்து ஷாபாஸ் பட்டி காரில் புறப்பட்டார். அவருடன் டிரைவரும், மற்றொரு அடையாளம் தெரியாத பெண்ணும் காரில் அமர்ந்திருந்தனர். பாதுகாவலர்கள் யாரும் இல்லை. ஷாபாஸ் பட்டியின் கார் வீட்டை விட்டு வெளியே வந்த போது, துப்பாக்கியுடன் வந்த ஒருவன் காரை நிறுத்தினான். டிரைவரையும், காரில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணையும் கீழே இறங்கும்படி கூறிய அவன், அவர்கள் இறங்கியதும், அமைச்சரை நோக்கி சரமாரியாக சுட்டான். 20 வினாடிகள் வரை சுட்டு விட்டு, தப்பினான். பலத்த காயம் அடைந்த அமைச்சர் ஷாபாஸ் பட்டியை, உடனடியாக அருகிலிருந்த ஷிபா சர்வதேச மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; அங்கு அவர் இறந்தார்.அமைச்சரின் காரை துப்பாக்கியுடன் வந்த நான்கு பேர் பல கோணங்களில் இருந்து தாக்கியதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த ஜனவரி 4ம் தேதி, பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண கவர்னர் சல்மான் தசீன், அவரது தீவிரவாத பாதுகாவலரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அதன் பின், இரண்டு மாதத்திற்குள் இரண்டாவது பெரிய அரசியல் படுகொலை நடந்துள்ளது. அமைச்சரை துப்பாக்கியால் சுட்டவர்கள் உருது மொழியில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களையும் வீசிச் சென்றுள்ளனர். அதில், மத துவேச சட்டத்திற்கு எதிராக ஷாபாஸ் அடிக்கடி பேசி வந்ததால், கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.கொல்லப்பட்ட அமைச்சர் ஷாபாஸ் பட்டி, தனது உயிருக்கு ஆபத்து உள்ள விவரம் குறித்து, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக், அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் கிலானி ஆகியோரிடம் ஏற்கனவே புகார் தெரிவித்துள்ளார். இருந்தும் அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அமைச்சர் ஷாபாஸ் பட்டி படுகொலைக்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.