சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராஜாவின் கூட்டாளி சாதிக் தற்கொலை : ஸ்பெக்ட்ரம் விசாரணையில் திருப்பம்

Updated : மார் 17, 2011 | Added : மார் 16, 2011 | கருத்துகள் (102)
Advertisement

சென்னை : ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்கைது செய்யப்பட்ட ராஜாவிற்குநெருக்கமாக இருந்த கூட்டாளி சாதிக் பாட்சா, நேற்று தன் வீட்டில்மர்மமான முறையில் மரணம்அடைந்தார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.


சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள வெள்ளாள தேனாம்பேட்டை, எல்லையம்மன் காலனி, 5வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் சாதிக் பாட்சா(37). பெரம்பலூர் மாவட்டம், நத்தம் குடிக்காடைச் சேர்ந்த இவர், சென்னையில் "கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார்.கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தில், ராஜாவின் மனைவிபரமேஸ்வரி, ராஜாவின் சகோதரர்உள்ளிட்டோர் பங்குதாரர்களாக இருந்த காரணத்தால், ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்த சி.பி.ஐ., கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 8ம் தேதி, சென்னையில் உள்ள சாதிக்பாட்சாவின் வீடு, தி.நகர். தியாகராயா சாலையில் உள்ள அலுவலகம்உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி, அங்கிருந்து முக்கியஆவணங்களை அள்ளிச் சென்றது.தொடர்ந்து, சாதிக் பாட்சாவிடம் விசாரணையும் நடத்தியது.


இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்உத்தரவின்படி, வரும், 31ம் தேதி, இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டியுள்ளதால், வியாழக்கிழமை, இன்று (மார்ச் 17) விசாரணைக்கு ஆஜராகும்படி சாதிக் பாட்சாவிற்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியிருந்தது. சி.பி.ஐ., விசாரணைக்கு ஆஜராவதற்காக, சாதிக் பாட்சா நேற்று பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி செல்வதாக இருந்தது.பகல் 11 மணிவரை ரெகனா பானு(28), ஒன்றரை வயதான இரண்டாவது மகன் ஆதின் ஆகியோரிடம் பேசி விட்டு, குளிப்பதற்காக, வீட்டின் முதல் தளத்தில் உள்ள படுக்கையறைக்கு சென்றார்.அப்போது வீட்டில், மனைவி, இரண்டாவது மகன் தவிர, சாதிக்கின் மாமியார் மற்றும் டிரைவர் இருந்தனர். காலை, 11:15 மணிக்கு, சென்னை, ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும், முதல் மகன் ஆஷிலை (3) அழைத்து வருவதற்காக ரெகனா பானு, காரில் புறப்பட்டுச் சென்றார்.இவர், 12: 30 மணிக்கு வீட்டுக்கு திரும்பினார். 12:30 ஆன போதும் கணவர் குளித்துவிட்டு வராததால், சந்தேகமடைந்த ரெகனா பானு, முதல் தளத்திற்குச் சென்றார். கதவை தட்டிப் பார்த்தார்; திறக்கவில்லை.


மீண்டும், பகல் 12:45 மணிக்குமீண்டும் தட்டிப் பார்த்தும் திறக்கவில்லை. சந்தேகமடைந்த ரெகனா பானு, ஜன்னல் வழியாக பார்த்த போது, படுக்கையறையில் சாதிக் பாட்சா, தொட்டில் கட்டும் கயிறால் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.உடனடியாக டிரைவரை அழைத்த ரெகனா, அவருடன் சேர்ந்து கதவை உடைத்து, பிற்பகல் ஒரு மணிக்கு சாதிக்கின் உடலை கீழே இறக்கினர். குற்றுயிராய் துடித்துக் கொண்டிருந்த அவரை, காரில் ஏற்றி, 1:30 மணிக்கு சென்னை, ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு, பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக, 1:40 மணிக்கு தெரிவித்தனர். தொடர்ந்து பகல், 2:10 மணிக்கு, சாதிக்பாட்சாவின் கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் போலீசுக்கு, சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.சாதிக்கின் உடல், 2:50க்கு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இதற்கிடையில், சாதிக்கின் மனைவி மாமியார், மைத்துனர்,குழந்தைகள், 2:30 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றுவிட்டனர். அவர்கள் எங்கிருக்கின்றனர் என்பது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மாலை, 5:10 மணிக்கு திடீரென தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில், சாதிக் பாட்சாவின் மனைவி ரெகனா, மாமியார் உள்ளிட்டவர்கள் கொண்டுவரப்பட்டனர்.


சாதிக்கின் உடல் இன்று ஒப்படைப்பு : சாதிக் பாட்சா தற்கொலை விவகாரத்தால், அப்பல்லோ மருத்துவமனை, தேனாம்பேட்டை போலீஸ் நிலையம், சாதிக்பாட்சாவின் வீடு ஆகிய பகுதிகள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டன. சாதிக் பாட்சாவின் மனைவியிடம் அறிக்கை பெற்று, வீட்டிற்குச் சென்று தடயங்களை ஆய்வு செய்யும் போதே மாலை, 6 மணிக்கு மேல் ஆகிவிட்ட காரணத்தால், பிரேத பரிசோதனைநடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, இன்று காலை, 9 மணிக்கு சாதிக் பாட்சாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.


சி.பி.ஐ., ரெய்டே காரணம் : கணவர் சாதிக் தற்கொலைக்கு சிபிஐ ரெய்டே காரணம் என அவரது மனைவி ரேகனா கூறியதாக தெரிகிறது.ரேகனாவிடம் பெறப்பட்ட அறிக்கையில்,"ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ., ரெய்டு நடந்து, அது மீடியாக்களில் வெளிவந்ததில் இருந்து கணவர், மிகுந்த வேதனையில் இருந்தார். இதைத் தொடர்ந்து, இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளார். பிற்பகல், 1 மணிக்கு, படுக்கையறையில் தூக்கில் தொங்கிய அவரை, டிரைவருடன் சேர்ந்து மீட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்' என்று, தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


சாதிக் பாட்சா தற்கொலையில் மர்ம முடிச்சு?ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், தி.மு.க., முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கும் என, சி.பி.ஐ., கருதிவரும் நிலையில், அந்த விவகாரம் பற்றி முழுமையாக அறிந்திருந்த, சாதிக் பாட்சா, தற்கொலை செய்து கொண்டுள்ளது, பெரம்பலூர் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.சாதிக் பாட்சா, முன்னாள் அமைச்சர் ராஜா குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து, பல தொழில்களும் செய்து வந்தார். சி.பி.ஐ., விசாரணைக்கு பின்னர் கூட, தற்கொலை செய்து கொள்ளாத சாதிக் பாட்சா, திடீரென தற்கொலை செய்து கொண்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.


சாதிக் பாட்சாவின் மரணம் குறித்து, பெரம்பலூரில் அவருடன் நன்கு பழகிய சிலர் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாதிக் பாட்சாவின் பெயர் அடிபடத்துவங்கியதுமே, "அரசியல்வாதிகள் தொடர்பு வேண்டாம். அனைத்தையும் விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலை மட்டும் பார்த்தால் போதும்' என, அட்வைஸ் செய்தோம்.ஆனால், "தெரியாமல், அரசியல்வாதிகளுடன் பழகிவிட்டேன்; அதிலிருந்து மீளமுடியாது' என, சாதிக் பாட்சா வருத்தப்பட்டார். அதேசமயம், அவரது மனைவி ரேகனாவும், "உங்களுக்கு தெரிந்ததை சொல்லி அப்ரூவராக மாறிவிடுங்கள். அதன்பின், நாம் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தலாம். இல்லாவிட்டால் அவமானங்களால் நானும், குழந்தைகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வோம்' எனக் கூறினார்.கடந்த இரண்டு மாதங்களாகவே சாதிக் விரக்தியடைந்த நிலையிலேயே காணப்பட்டார். யாரிடமும் சரியாக பேசுவது கிடையாது. ஆனால், நாங்கள் பழகியவரை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல என்பதை மட்டும், உறுதியாக சொல்ல முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


சாதிக் பாட்சாவுக்கு ரேகனா என்ற மனைவியும், சோதனைக்குழாய் மூலம் பிறந்த, நான்கு வயதுடைய ஆதில், ஆசில் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.இவருடைய மாமனார் முஸ்தபா, 1975ம் ஆண்டுக்கு முன், பெரம்பலூர் தி.மு.க., நகரச் செயலராக இருந்தார்; அவர் இப்போது உயிரோடு இல்லை.இம்மாத இறுதியில் குற்றப்பத்திரிகை: அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், இம்மாத இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ., திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாதிக் பாஷா மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது இந்த வழக்கின் விசாரணையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.


டிக்... டிக்... நடந்தது என்ன?
காலை 11 மணி: சாதிக் பாட்சா குளிக்கச் சென்றார்.
11:15: சாதிக்கின் மனைவி @ரகனா பானு, பள்ளியில் படிக்கும் மகனை அழைத்து வர காரில் சென்றார்.
பிற்பகல் 12:30: ரேகனா மீண்டும் வீட்டிற்கு வந்தார்.
12:45 - 1 மணி: ரேகனா படுக்கையறையின் கதவை தட்டி திறக்காததால், அறைக்
கதவை டிரைவருடன் சேர்ந்து உடைத்து உள்ளே சென்று, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சாதிக் பாட்சாவின் உடலை இறக்கினர்.
1:30 மணி: ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவ
மனைக்கு சாதிக் பாட்சா காரில் கொண்டு செல்லப்பட்டார். உடன் மனைவி @ரகனா இருந்தார்.
1:40 மணி: சாதிக் பாட்சா இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
2:10 மணி: சாதிக் பாட்சாவின் கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் போலீசுக்கு, சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2:30 மணி: சாதிக்கின் மனைவி மற்றும் மாமியார், மைத்துனர், குழந்தைகள் இருவர் ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டனர்.
2:50 மணி: அப்போலோ மருத்துவமனைல் இருந்து பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சாதிக் பாட்சாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
மாலை 5:10 மணி: திடீரென தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில், சாதிக்
பாட்சாவின் மனைவி @ரகனா, மாமியார் உள்ளிட்டவர்கள் கொண்டு
வரப்பட்டு, விசாரணை நடந்தது.
5:30 மணி: விசாரணை முடிந்து, அனைவரும் எல்லையம்மன் காலனிக்கு
அழைத்துச் செல்லப்பட்டனர்.
5:40 மணி: வீட்டை திறந்து, சாதிக் பாட்சாவின் மனைவி, மாமியார் மற்றும்
உறவினர்கள், போலீசார், தடயவியல் துறையினர் உள்ளே சென்றனர்.
6:45 மணி: சாதிக் பாட்சாவின் உடல் இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இரவு 7:00 மணி: தடயவியல் துறையினர் கைரேகைகள் உள்ளிட்டவற்றை பதிவு செய்து புறப்பட்டனர்.
7:30 மணி: சாதிக்பாட்சாவின் மனைவி, மாமியார் உள்ளிட்ட உறவினர்கள் காரில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.
8 மணி: வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பு போடப்பட்டது.


சாதிக்கின் உடலை யாரும் பார்க்கவில்லை : சாதிக் பாட்சா தற்கொலை சம்பவம் தொடர்பான சந்தேகங்கள் பல இருந்தாலும், அவர், இறந்த செய்தியை அறிந்தபின், பகல் 2:30 மணி வரை வீட்டில் இருந்த மனைவி மற்றும் உறவினர்கள் மாலை 5:10 மணிவரை எங்கு சென்றனர் என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது. கணவனின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதும் உறவினர்கள் யாரும் உடன் இல்லை.மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பிணவறையில் வைக்கப்பட்ட போதும் அங்கும் யாரும் இல்லை. பகல் 1:40 மணியில் இருந்து இதுவரை, சாதிக்கின் உடலை அவரது உறவினர்கள் யாரும் பார்க்கவில்லை. இந்நிலையில், திடீரென 5:10 மணிக்கு தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இடையில் அவர்கள், எங்கிருந்தனர்? அவர்கள் மறைத்து வைக்கப்பட்டார்களா? மிரட்டப் பட்டார்களா? இவை அனைத்தும், புரியாத புதிராக உள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சாதிக்கின் உடல் பொதியப்பட்டது ஏன்?தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சாவின் உடல், அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின், போலீசாருக்கு தகவல் தெரிந்து அங்கு வந்தனர். சாதிக்கின் உடல் பிரேதபரிசோதனைக்கு பின்பு தான், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டது. பிற்பகல் 2:40க்கு உடல் மருத்துவமனையில் இருந்து, வெளியில் கொண்டுவரப்பட்டது. அப்போது, பத்திரிகையாளர்கள் சாதிக்கின் உடலை போட்டோ எடுக்க முண்டியடித்தனர்.போலீசார் தடுத்ததால், இருதரப்பிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, வார்த்தைகள் தடித்தன. வெளியில் கொண்டுவரப்பட்ட போது, சாதிக்கின் உடல் முழுமையாக வெள்ளை துணியால், பிரேத பரிசோதனைக்கு பின், பொதியப்படுவது போல் தயார் செய்யப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். முகமும் மூடப்பட்டிருந்ததால், திறந்து காட்டும்படி, போட்டோ கிராபர்கள் கூறினர்.இதையடுத்து, முகம் மட்டும் காட்டப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனைக்கு முன், உடலை துணியைக் கொண்டு பொதிந்தது ஏன் என்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. சாதிக்கின் உடலில் வேறு ஏதேனும் காயங்கள் இருந்து மறைப்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டதா, கொண்டு செல்லப்பட்டது சாதிக்கின் உடல்தானா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.


யார் இந்த சாதிக் பாட்சா?தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்துக்கு, கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், தன் சகோதரர்களுடன் பிழைப்பு தேடி வந்த சாதிக் பாட்சா, கிடைத்த வேலைகளை செய்து வந்தார். பின், சைக்கிளில் ஊர், ஊராக சென்று, தவணை முறையில் துணி வியாபாரம் செய்தார்.அந்த வியாபாரத்தில் கண்ட வளர்ச்சியின் மூலம், எலக்ட்ரானிக் பொருட்களை தவணை முறையில் விற்பனை செய்யும் தொழிலுக்கு மாறினார். வீட்டு புரோக்கராக மாறினார். 1995ல், முன்னாள் அமைச்சரும், தாட்கோ சேர்மனுமாக இருந்த அ.தி.மு.க., பிரமுகர் வரகூர் அருணாச்சலத்தின் நட்பு கிடைத்தது.ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில், வக்கீலாக இருந்த தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, அடிக்கடி வரகூர் அருணாச்சலத்தை சந்தித்து வந்தார். அப்போது தான், ராஜாவுக்கு அறிமுகமானார் சாதிக். பின், நட்பு வளர்ந்தது.கடந்த, 1999ல், ராஜா எம்.பி., ஆனவுடன், சாதிக், தன் பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய, மாநிலம் முழுவதும் அலுவலகங்களை துவக்கியுள்ளார். சிறிய அளவில் நிலங்களை வாங்கி விற்பனை செய்து கொண்டிருந்தார்.கடந்த, 2004ல், ராஜா, மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது சாதிக், "கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ்' என்ற நிறுவனத்தை துவக்கினார். முதலில் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் துவக்கப்பட்ட இந்நிறுவனத்தில், எம்.டி.,யாக சாதிக்கும், ராஜாவின் குடும்பத்தில் சிலர் இயக்குனர்களாயினர்."கிரீன்ஹவுஸ்' நிறுவனம் துவங்கிய ஒரே ஆண்டில், கோடிக்கணக்கான ரூபாய் லாபம் பார்த்ததாக கணக்கு காட்டியுள்ளது.கடந்த, 2007-08ம் ஆண்டுகளில், "கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ்' நிறுவனம் அபார வளர்ச்சியை பெற்றது. இந்த காலகட்டத்தில் தான், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் நடந்தது. சாதிக்கின் சொத்து மதிப்பு, 500 கோடிக்கும் மேல் உயர்ந்தது.இவ்விஷயம், சமீபத்தில் நடந்த சி.பி.ஐ., சோதனையில் தெரியவந்துள்ளது.


இம்மாத இறுதியில் குற்றப்பத்திரிகை : அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், இம்மாத இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ., திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாதிக் பாஷா மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது இந்த வழக்கின் விசாரணையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.


இதேபோன்ற தற்கொலை!: கடந்த, 2001ல், ஸ்டாலின் மேயராக இருந்தபோது, அவரது நெருங்கிய நண்பராக இருந்தவர் அண்ணாநகர் ரமேஷ். கான்ட்ராக்டிற்கு பணம் பெற்ற விவகாரத்தில், தெய்வசிகாமணி என்பவர் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரில், ஸ்டாலின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.இந்த வழக்கில் முக்கிய நபராக சேர்க்கப்பட்டிருந்த அண்ணாநகர் ரமேஷ், 2001ம் ஆண்டு, ஜூலை 17ம் தேதி, தன் வீட்டில் மனைவி, மூன்று குழந்தைகளுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இத்துடன், அந்த வழக்கு நீர்த்துப் போனது.


சாதிக் பாட்சா வழக்கு: சி.பி.ஐ.,க்கு மாற்றம் : தமிழக அரசு பரிந்துரை : இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வு துறையினரால்(சி.பி.ஐ.,) சாதிக் பாட்சா விசாரிக்கப்பட்டு வந்தார். நேற்று அவரது வீட்டில் சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், அவர் சி.பி.ஐ.,யினரால் விசாரிக்கப்பட்ட பின்னனியைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்கை மேல் விசாரணைக்காக சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்வதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TWOR - Chennai,இந்தோனேசியா
17-மார்-201122:48:44 IST Report Abuse
TWOR கிரீன் ப்ரோமொடேர்ஸ் மட்டுமல்ல இன்னுமும் நிறைய ரியல் எஸ்டேட் நிறுவனர்கள் மாட்டுவார்கள். தமிழ்நாடு பொலிடிசியன்ஸ் ரோடு முழுக்க லேன்ட் வங்கி போட்டுள்ளனர். (மற்றவர்களின் பெயர்களில்) ஆனால் ஒன்று மட்டும் நிக்ட்யம் அடுத்தவன் சொத்து நிலைக்காது
Rate this:
Share this comment
Cancel
Jar Jar - hamburg,ஜெர்மனி
17-மார்-201121:37:36 IST Report Abuse
Jar Jar போற போக்கை பார்த்தல் சாதிக் பாட்சா மரணத்தின் பின்னணியில் BJP/RSS/VHP ஆகியோரின் சதி என்று இந்த ஏமாற்று காரர்கள் கூறுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Dummy - Chennai,இந்தியா
17-மார்-201121:16:14 IST Report Abuse
Dummy இறந்தது சாதிக் பாட்சாதான் என்று எப்படி உறுதியாய் சொல்ல முடியும் ? முகம் திறக்க சொல்லி நிருபர்கள் எடுத்த போட்டோ எங்கே ? யுத்தம் செய் படத்தை பார்த்து, வேறு ஒரு பிணத்தை வைத்து வேலையை முடித்து பாட்சா இந்நேரம் வெளிநாடு சென்றிருந்தால் ? - மக்கள் நல்ல கேள்வி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X