லண்டன் : உலகின் ஒன்பது நாடுகளில் சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில், அந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையே இல்லாமல் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. இதனால், அவற்றில் தற்போது இருக்கும் மதங்கள் விரைவில் காணாமல் போய்விடும் என்று அந்த ஆய்வு கூறுகிறது. ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செசன்ய குடியரசு, பின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஒன்பது நாடுகளில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்நாடுகளில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, அங்குள்ள மக்களின் மத விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி, இந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கை இல்லாமலேயே வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் அங்கு மதங்களே இல்லாமல் போய்விடும் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் டல்லஸ் நகரில் நடந்த ஓர் கூட்டத்தில் இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டது. அதன்படி, மிகக் குறைந்தபட்சமாக நெதர்லாந்தில் 40 சதவீதம் பேரும், அதிகபட்சமாக செசன்ய குடியரசில் 60 சதவீதம் பேரும் மதநம்பிக்கை அற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த நிபுணர்கள் சிலர்,"இது ஒரு சாதாரண கணக்கு தான். அதாவது, நாம் மேற்கொள்ளும் ஒரு காரியத்தால் ஏதாவது பயன் விளைந்தால் அக்காரியத்தை நாம் தொடர்ந்து செய்வோம். உதாரணமாக, ஸ்பானிய மொழி பேசுவதால் விளையும் பயன், பெரு நாட்டில் தற்போது வழக்கழிந்து வரும் கொச்சுவான் மொழியைப் பேசுவதால் விளையும் பயனை விட மிக அதிகம். இதே கணக்கை மதநம்பிக்கையிலும் நீங்கள் வைத்துப் பார்க்கலாம்' என்று தெரிவித்தனர்.