திண்டுக்கல் : தமிழகத்திலுள்ள 29 தலைமை அரசு ஆஸ்பத்திரிகளில், காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் இவற்றின் தரத்தை உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான தனியார் ஆஸ்பத்திரிகளில் அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளவர்கள் சிகிச்சை பெற வசதியாக இவர்களுக்கு அடையாள அட்டையையும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 29 தலைமை அரசு ஆஸ்பத்திரிகளிலும் அரசு காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டு உள்ளது. காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற விரும்புபவர்கள், அரசு ஆஸ்பத்திரிகளிலும் தங்கி சிகிச்சை பெறலாம்.
இதற்காக ஸ்டார் ஹெல்த் நிறுவனம் வழங்கும் தொகையில் 60 சதவீதம் அரசுக்கும்,25 சதவீதம் அரசு ஆஸ்பத்திரி வளர்ச்சிக்கும்,15 சதவீத தொகை சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்படும். சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தங்கள் பணி நேரத்தை தவிர்த்து ஓய்வு நேரத்தில் தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ள 29 அரசு தலைமை ஆஸ்பத்திரிகளிலும் குளிர்பதன அறை,ஆபரேஷன் தியேட்டர் உட்பட அனைத்து வசதிகளையும் தனியார் ஆஸ்பத்திரிக்கு இணையாக செய்து முடிக்க மருத்துவ இணை இயக்குனர்கள், கண்காணிப் பாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.