| முதுபெரும் எழுத்தாளர் ர.சு.நல்லபெருமாள் காலமானார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதுபெரும் எழுத்தாளர் ர.சு.நல்லபெருமாள் காலமானார்

Updated : ஏப் 21, 2011 | Added : ஏப் 21, 2011 | கருத்துகள் (3)

திருநெல்வேலி : நெல்லையை சேர்ந்த முதுபெரும் எழுத்தாளர் ர.சு.நல்லபெருமாள் காலமானார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வசித்தவர் ர.சு.நல்லபெருமாள்(81). வக்கீலாக தொழில் செய்து வந்த அவர் சிறுவயதில் இருந்தே தமிழ் இலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பை மேற்கொண்டுள்ளார். அவரது "கல்லுக்குள் ஈரம்' நாவலைப் படித்துத் தான் நான் போராளி ஆனேன் என்று விடுதலைப்புலித் தலைவர் பிரபாகரன் கூறியிருக்கிறார். அந்த நூலுக்கு 1966ல் கல்கி பொன்விழா ஆண்டில் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. அவரது "நம்பிக்கைகள்' நாவலுக்கு 1983 ல் கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது கிடைத்தது. 1991ல் "உணர்வுகள் உறங்குவதில்லை' என்ற நூலை எம்.ஏ.சிதம்பரம் அறக்கட்டளையினர் சிறந்த நூலாகத் தேர்வு செய்து பரிசுவழங்கினர். அவரது சிறுகதை ஒன்று தமிழக அரசின் பத்தாம் வகுப்பு துணைப் பாடநூலில் இடம்பெற்றது. ர.சு.நல்ல பெருமாள், கடந்த 20ம்தேதி இரவில் பாளையங்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் தெருவில் உள்ள தமது வீட்டில் மரணமடைந்தார். அவருக்கு பாப்பா என்ற மனைவியும் சிவஞானம், அலமேலு மங்கை என்று இரு மகள்களும் பாலசுப்பிரமணியம் வெங்கடேஸ்வரன் என்ற இரண்டு மகன்களும் பேரன் பேத்திகளும் உள்ளனர். 1965 ஆண்டு தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் சார்பாக வரலாற்று நூல் வெளியிடப் பட்டது.
மேலும் போராட்டங்கள், மாயமான்கள், மயக்கங்கள், மருக்கொழுந்து, மங்கை, திருடர்கள், நம்பிக்கைகள், தூங்கும் எரிமலைகள், எண்ணங்கள் மாற்றலாம் சங்கராபரணம், பாரதம் வளர்ந்த கதை, இந்தியச் சிந்தனை மரபு உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார். அவரது இறுதிசடங்குகள் இன்று 22ம் தேதி பகலில் பாளையங்கோட்டையில் நடக்கிறது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X