பகவான் சத்ய சாய் பாபா ஸித்தியடைந்தார் இன்று மாலை முதல் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு

Updated : ஏப் 24, 2011 | Added : ஏப் 24, 2011 | கருத்துகள் (170) | |
Advertisement
புட்டபர்த்தி: அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு ஸித்தியடைந்தார் . இவருக்கு வயது 85 . பாபாவின் உடலை இன்று மாலை 6 மணியிலிருந்து குல்வந்த் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். வரும் புதன்கிழமை இறுதிச் சடங்கு நடைபெறும். கடந்த
Bhagwan, Sathya, Sai, Baba, passes away, பகவான், சத்ய, சாய், பாபா,சித்தியடைந்தார் , காலமானார்.

புட்டபர்த்தி: அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு ஸித்தியடைந்தார் . இவருக்கு வயது 85 . பாபாவின் உடலை இன்று மாலை 6 மணியிலிருந்து குல்வந்த் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். வரும் புதன்கிழமை இறுதிச் சடங்கு நடைபெறும்.

கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவகழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இவரது உடல் நிலை குறித்து சாய் மருத்துவமனை இயக்குனரும், டாக்டருமான சபையா நாள்தோறும் பாபாவின் உடல் நிலை அறித்து அறிவிக்கை வெளியிட்டு வந்தார். அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர்.


பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித பலனும் இல்லாமல் இருப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது. இதனை சாய் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். இவரது மறைவு துயரச்செய்தி கேட்டு உலகம் முழுவதும் உள்ள பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.


ஆந்திரா அரசு 4 நாள் துக்கம் அனுஷ்டிப்பு : வரும் புதன்கிழமை பிரசாந்திநிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்படும். பாபா உடல் அடக்கம் செய்யபப்டும்போது அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடக்கும். சாய்பாபா மறைவுக்கு ஆந்திரா அரசு மாநிலம் முழுவதும் 4 நாள் துக்கம் அனுஷ்டிக்கிறது அனந்தபூர் மாவட்டம் முழுவதும் இந்நாளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. என மாநில அரசு வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

சாய்பாபாவின் சரித்திரம்: சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். பக்தர்கள் சாய்பாபாவை கடவுளின் அவதாரமாகவே பார்க்கின்றனர்.

ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவுற்றதாகவும், இது ஒரு அதிசய நிகழ்வு என்றும் ஈஸ்வரம்மா தெரிவித்தார்.


சாய்பாபா குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் திறமயாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி தனது சகோதரருடன் சாய்பாபா இருக்கும் போது, தேள் ஒன்று இவரை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் இவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பாபாவின உடலை பரிசோதித்தனர். 1940, மே 23ல் வீட்டில் இருந்தவர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து கல்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, ""என்ன இது மாய மந்திரம்'' என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா, ""நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. சீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். சீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர். இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.


சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப்பட்டு 1950ல் நிறைவடைந்தது.1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்துவமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர்களாக தொடர்ந்தனர்.


சாய்பாபா அதிசயம்: பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்யபடுத்தினார். இவரது ஆன்மிக குரு ஷீரடி சாய்பாபா . இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்து வந்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்துள்ளார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.


இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்களான வாஜ்பாய், சங்கர்தயாள் சர்மா, நரசிம்மராவ், வெங்கடராமன், பி.டி. ஜாட்டி, எஸ்.பிரித்திவிராஜ் சவான், சந்திரசேகர், அர்ஜுன் சிங், ராஜேஷ்பைலட், சங்கரானந்த், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இவரது பக்தர்கள். ரவிசங்கர், நானி பல்கிவாலா, டி.என்.சேஷன், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்துறை அறிஞர்களும் இவரது பக்தர்களாக உள்ளனர்.


1993 ஜூன் 6ல் சாய்பாபாவை கொல்ல நடந்த முயற்சி சர்வதேச செய்தியானது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் சாய்பாபாவின் பொதுத் தொண்டுகள் அவரது மதிப்பை மக்கள் மனதில் மேலும் உயர்த்தியுள்ளன.


சமூகத்தொண்டு: ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடைகின்றனர். இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது.


சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்.


"அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.


பொன் மொழிகள்

* அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள். உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.


* படிப்பில் மட்டுமின்றி, நமது நாடு, மொழி, மதம் மீதும் பற்றும் மரியாதையும் கொள்வது அவசியம். இதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்கும்.


* சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும்.


* தயாராக இருக்கும் மொட்டுகள்தான் மலரும். மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.


* உண்மை, தர்மம், கருணை, மன்னிக்கும் மனப்பான்மை, இவற்றை பெற வேண்டுமானால் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.


* மனதை - தூய்மையாக - முழுமையாக வைத்துக்கொள். வெற்றி பெறுவாய்.


பாபாவின் சேவைகள்...

* பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோமீட்டர் தொலைவில் முதியோருக்காக விருத்தாஸ்ரமம் என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு தேவையான வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.


* பாபா குறித்த நூல்கள், சிடிக்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள் உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும் வசூலிக்கப்படுகின்றன.


* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.


* ஒயிட்பீல்டு ஆசிரமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்யசாய் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.


* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.தலைவர்கள் இரங்கல்: சத்ய சாய்பாபா மறைவிற்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, தமிழக முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மத்திய , மாநில அமைச்சர்கள் , அ.தி.மு.க.., பொதுசெயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசைய்யா, ஆந்திர அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில்; சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க உதவியவர் சாய்பாபா. இதன் மூலம் தமிழக மக்களின் இதயத்தில் சாய்பாபா இடம் பிடித்து விட்டார் என்று கூறியுள்ளார். ‌ஜெ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சாய்பாபாவின் இழப்பு மனித குலத்திற்கு பேரிழப்பாகும் என கூறியுள்ளார். தமிழக துணை முதல்வர் மு.க., ஸ்டாலின் பாபாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு விமானம் மூலம் புட்டபர்த்தி புறப்பட்டு சென்றார்.ஆந்திரமுதல்வர் கிரண்குமார்ரெட்டி, கவர்னர் நரசிம்மன், மகாராஷட்டிர முன்னாள் முதல்வர் அசோக்சவான், தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, பிரஜா ராஜ்யம் கட்சி தலைவர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்த புறப்பட்டு சென்றனர்.“ வழிகாட்டுதலாக இருந்த சாய்பாபா ” அத்வானி ; தெய்வீகத்தன்மையும், போற்றுதலுக்குரியவருமான சாய்பாபா லட்சக்கணக்கான மக்களின்மனதில் வாழ்ந்தவர் என பிரதமர் மன்மோகன்சிங் புகழாராம் சூட்டியுள்ளார். பாபா மறைவு நாடே கவலையில் ஆழ்ந்துள்ளது என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பாபாவின் இழப்பு குறித்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் ; சாய்பாபாவை நான் பல முறை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளேன். அவரது அறிவுரைகள் எனக்கு பல நேரங்களில் வழிகாட்டுதலாக இருந்தது. இந்தியா முன்னேற்றம் கண்டிட உழைத்த தலைவர்களில் இவரும் ஒருவர். இவரது மறைவு நாட்டுக்கு பெரும் இழப்பு இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (170)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anuman - sacarborough,கனடா
26-ஏப்-201109:57:04 IST Report Abuse
anuman எல்லா மக்களையும் நேசி, எவரையும் காயப்படுத்தாதே,எல்லோருக்கும் உதவி செய்,முதலில் உனது தாய்,தந்தையர்தான் முதல் கடவுள் என்றெல்லாம் சொல்லி எந்தவித சுய நலமும் இல்லாமல் எல்லா மகளுக்கும் உதவிகள் செய்து கொண்டு தனது வாழ்கையை மக்களுகாக செலவு செய்த கடவுள் இன்று என்னை போல உள்ள குடிமகளை எல்லாம் விட்டு விட்டு முக்தி அடைந்து விட்டார். இவரை போல ஒரு பிறவி இந்த உலகத்தில் எங்குமே கிடைக்க மாட்டார். புட்டபர்த்தியின் தெய்வம் முக்தி அடைந்தது. என்றும் எல்லோருடனும் வாழ்ந்து கொண்டு இருக்கும் அன்பு தெய்வம்தான் சாய்பாபா.
Rate this:
Cancel
Mahadevan Subramanian - Chennai,இந்தியா
25-ஏப்-201118:20:14 IST Report Abuse
Mahadevan Subramanian The mortal remains of Bhagavan Sri Sathya Saibaba may not be with us. But his soul and his grace will always remain with us. Help ever, hurt never is one of his golden quotes. Let us follow this as our guideline for our lives. Bhagavan will live for ever in the hearts of millions
Rate this:
Cancel
Jaya Kannan - Madurai,இந்தியா
25-ஏப்-201115:59:58 IST Report Abuse
Jaya Kannan இந்த புனித ஆத்மா மீண்டும் இவுலகில் அவதரிக்க வேண்டிகொள்கிறேன் ... கே.ஜெயகண்ணன், சாத்தூர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X