"நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி, மீட்டர் வட்டி, கந்து வட்டி என, கோவையில் பார்த்தீனிய செடிகளைப் போன்று செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது வட்டித்தொழில். இவ்வகை பைனான்சியர்களால் நேரிடப்போகும் ஆபத்து குறித்த விழிப்புணர்வு அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட வேண்டும்; இல்லாவிடில், கழுத்துக்கு கத்தி வந்துவிடும்' என, எச்சரித்துள்ளது போலீஸ்.
மேற்கண்ட வட்டித் தொழில் செய்யும் பைனான்சியர்களில் பெரும்பாலானோர் சேலம், நாமக்கல், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். கோவை லாட்ஜ்களில் அறை எடுத்து தங்கி லட்சம் முதல் கோடி ரூபாய் வரை முதலீடு செய்து வட்டித்தொழிலில் ஈடுபட்டிருக்கும் இவர்களுக்கு, கூலிப்படை தொடர்பும் உண்டு. கடன் வாங்கிய நபர்கள் திருப்பிச் செலுத்த தவறினால் வீட்டுக்குச் சென்று மிரட்டி வாகனம், பொருட்களை அபகரித்துச் சென்றுவிடுகின்றனர் கூலிப்படையினர். பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளிப்பதில்லை. காரணம், பைனான்சியர்கள் கடன் வழங்கும்போது வாங்கி வைத்துள்ள வெற்று காசோலைகள். கடனாளி போலீசில் புகார் அளித்தால், வெற்றுக் காசோலைகளில் பல மடங்கு தொகையை நிரப்பி வங்கியில் செலுத்தி விடுகின்றனர். "கணக்கில் பணமில்லை' என வங்கியில் இருந்து எழுத்து மூலமான பதில் வந்ததும் செக்மோசடி வழக்கில் கடனாளியை சிக்க வைக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அலைக்கழித்து விடுவர். இதனால், பைனான்சியர்களுடன் மோத யாரும் முயற்சிப்பதில்லை. இதையே தங்களது பலமாக கொண்டு பைனான்சியர்கள் கொள்ளை வட்டி வசூலிக்கின்றனர்.
நாள் வட்டி: இந்த முறையிலான வட்டி சிறு வியாபாரிகள் மத்தியில் பிரபலம். காலையில் பைனான்சியரிடம் 1,000 ரூபாய் கடன் கோரும் வியாபாரிக்கு 900 மட்டும் வழங்கப்படும் (ஆயிரம் ரூபாய்க்கு ஒரு நாள் வட்டி ரூ.100. இந்த தொகையை முன் கூட்டியே பைனான்சியர் பிடித்தம் செய்து கொண்டு கடன் தருவார்). கடன் பெற்ற நபர் காய்கறி, பழங்களை மார்க்கெட்டில் மொத்த விலைக்கு வாங்கி தள்ளுவண்டியில் மாலை வரை வியாபாரம் செய்வதன் மூலம் முதலீட்டுடன் சேர்த்து 1,500 ரூபாய் வரை ஈட்டுவார். அதில் 1,000 ரூபாயை பைனான்சியருக்கான கடன் தொகையாக அடைத்துவிட்டு 500 ரூபாயை லாபமாக கருதுவார். இவ்வகை வட்டித்தொழில் பெரும்பாலும் கடை வீதி, காய்கறி, பழ மார்க்கெட் பகுதிகளில் அதிகம் நடக்கிறது.
வார வட்டி: கோவை நகர் மற்றும் கிராம பகுதிகளில் "மைக்ரோ பைனான்ஸ்' என்ற பெயரில் வார வட்டிக்கு கடன் வழங்கும் பைனான்ஸ் ஏஜன்ட்கள் அதிகரித்துள்ளனர். இவர்கள் கைவினைஞர்கள், மகளிர் குழுவினர், டெய்லர்கள், பெட்டிக் கடைக் காரர், துணி வியாபாரம் செய்வோர் என சிறிய அளவிலான தொழில் செய்வோருக்கு இரண்டாயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் தருகின்றனர். கடன் தொகையில் 15 சதவீதத்தை முன் கூட்டியே பிடித்தம் செய்து கொள்ளும் ஏஜன்ட்கள், மீத தொகையை மட்டுமே வழங்குவர். கடன் பெற்றவர், 10 வாரங்களில் நிலுவையின்றி வாரம் ஒரு முறை தொகையை செலுத்திவிட வேண்டும். இவ்வாறு கடன் வழங்கும் ஏஜன்ட்கள், தொடர்ச்சியாக பல ஆண்டுகள் தங்களுடன் தொடர்பு வைத்திருக்கும் நபர்களுக்கு மிகவும் அதிகப்படியான கடன் தொகையை வழங்கி விடுகின்றனர். முன்னர் வாங்கிய கடனை அடைக்கும் முன்பே, மீண்டும் கடன் கொடுத்து அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கிவிடுகின்றனர். கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும் போது, தற்கொலைகளும் நிகழ்ந்துவிடுகின்றன.
மாத வட்டி: இவ்வகை கடன், வர்த்தகர் மற்றும் தொழில் அதிபர்களுக்கு நாமக்கல், திருச்செங்கோடு, தேனி, கம்பம் பகுதி பைனான்சியர்களால் வழங்கப்படுகிறது. கடன் கோரும் நபரின் வீடு, நிலம், தொழில் நிறுவனம் தொடர்பான சொத்துப் பத்திரங்களை பிணை ஆவணமாக பெறும் பைனான்சியர்கள் கோடிக்கணக்கில் கடன் வழங்குகின்றனர். ஒப்பந்த ஆவணத்தில் கூறியபடி மாதம் தவறாமல் வட்டி செலுத்துவதுடன், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மொத்த கடன் தொகையையும் அடைத்துவிட வேண்டும். தவறும் பட்சத்தில் சொத்துக்களை இழக்க வேண்டிவரும்.
மீட்டர் வட்டி: நடுத்தர பொருளாதார வசதி கொண்ட ஒர்க்ஷாப் உரிமையாளர்கள், வியாபாரிகள், சிறிய அளவில் ஓட்டல், பேக்கரி நடத்துவோரில் பலரும் மீட்டர் வட்டிக்காரர்களிடம் சிக்கியுள்ளனர். லட்சம் ரூபாய் கடன் கோரும் நபருக்கு 85,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் (ஆனால், லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கணக்கு). கடன் பெற்றவர் வாரம் 10 ஆயிரம் ரூபாய் வீதம் 10 வாரம் செலுத்த வேண்டும். தவறினால், வட்டிக்கு வட்டி போட்டு வசூலிக்கின்றனர். மாதக்கணக்கில் தவணையை திரும்பச் செலுத்தாவிடில் வாங்கிய கடன்தொகை பல மடங்கு பெருகி விடும். இதேபோன்று, கந்து வட்டி பைனான்ஸ் முறையும் கோவையில் தலை விரித்தாடுகிறது. வித விதமான வட்டி வசூலிக்கும் பைனான்சியர்களில் பெரும்பாலானோர் நிறுவன பதிவு சட்டத்தின் கீழ், தங்களது தொழிலை பதிவு செய்யாதவர்கள். இதனால், வட்டிக்கு பணம் பெற்று பாதிக்கப்பட்டோரும், பைனான்ஸ் கும்பலிடம் பிணையாக வைத்த சொத்துக்களை இழந்தோரும் போலீசில் புகார் அளித்தாலும், சட்ட ரீதியான நிவாரணம் கிடைப்பதில்லை. இதுவே, வட்டித்தொழில் செய்வோருக்கு பெரும் பலமாகிவிட்டது.
இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவை நகரில் கடந்த 2010, ஜனவரி முதல் டிசம்பர் வரை மொத்தம் 2,283 புகார் மனுக்கள் போலீஸ் கமிஷனரிடம் நேரடியாக அளிக்கப்பட்டன. அதில், 584 மனுக்கள் மோசடி மற்றும் பைனான்ஸ் பிரச்னைகள் தொடர்பானவை. கந்துவட்டியால் பாதிக்கப்பட்டதாக 17 பேர் புகார் அளித்திருந்தனர். அனைத்து மனுக்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவையில் கல்வி, தொழில், வர்த்தக வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வந்து பிழைப்பு நடத்துகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், தொழில் முதலீட்டுக்காக பைனான்சியர்களின் உதவியை நாடுகின்றனர். அவசரச் சூழ்நிலையில் கடன் பெறுவோர் ஒவ்வொருவரும் எப்படியும் திரும்பச் செலுத்திவிடலாம் என்றே நம்பிக்கை கொள்கின்றனர். தொழில் நசிவு ஏற்படும் போது கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் ஊரை விட்டே ஓடிவிடுகின்றனர் அல்லது வாழ்க்கை வெறுத்து தற்கொலை செய்து கொள்ள துணிகின்றனர். கோவையில் ஆண்டுதோறும் நடக்கும் தற்கொலை சம்பவங்களில் 10 சதவீதம் பணப்பிரச்னைகளால் நிகழ்கின்றன. தகுதிக்கு மீறி அதிக வட்டிக்கு கடன் பெறுவது ஆபத்தானது என்ற விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே தப்பிக்க முடியும்.
கோவை நகரில் இதற்குமுன் குறிப்பிட்ட லாட்ஜ்களில் வெளியூர் பைனான்ஸ் கும்பல் முகாமிட்டு, அதிக வட்டிக்கு கடன் கொடுத்து வந்தது. இதை பயன்படுத்தி மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்களும், தொழிலதிபர்களுக்கு கடன் தருவதாக கூறி பணம் பறித்து வந்தனர். தொடர்ச்சியாக லாட்ஜ்களை சோதனையிட்டதன் விளைவாக தற்போது வட்டித் தொழில் செய்யும் வெளிமாவட்டத்தினர் தலைமறைவாகிவிட்டனர். தொழிலதிபர்கள், வியாபாரிகள் தொழில் அபிவிருத்திக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ அல்லது ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிதி நிறுவனங்களிலோ கடன் பெறலாம். மற்றபடி, பதிவு செய்யப்படாத பைனான்ஸ் கும்பலிடம் கடன் பெற்றால் கழுத்துக்கு கத்தி வந்துவிடும் என்பது மட்டும் உறுதி. இவ்வாறு, போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
- நமது நிருபர் -