Reason for loss Corruption, family interogation, high price | ஆட்சியை பறித்தது ஊழல், குடும்ப தலையீடு, விலைவாசி உயர்வு...!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆட்சியை பறித்தது ஊழல், குடும்ப தலையீடு, விலைவாசி உயர்வு...!

Updated : மே 15, 2011 | Added : மே 13, 2011 | கருத்துகள் (106)

அளவுக்கு அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகளும், ஒரு துறையைக் கூட விட்டு வைக்காமல், அனைத்து துறைகளிலும் கருணாநிதியின் குடும்பத்தினர் மூக்கை நுழைத்து, ஏகபோக ஆதிக்கம் செலுத்தியதும் தான், தி.மு.க.,வை படுதோல்வி அடையச் செய்து, ஆட்சியை பறிகொடுக்க வைத்துவிட்டது.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம், இலவச ஆம்புலன்ஸ் திட்டம், இலவச கலர், "டிவி', இலவச, "காஸ்' அடுப்பு, இலவச கான்கிரீட் வீடு திட்டம், பல்வேறு அரசுத் துறைகளில் ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, தலைநகர் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் மேம்பாலங்கள், சாலைப் பணிகள், குடிநீர் திட்டங்கள் என, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியதால், சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி கிடைக்கும் என்று, தி.மு.க., தலைமை நம்பியது.மேலும், கடந்த தேர்தலில் இலவசத் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததை மனதில் கொண்டு, இந்த தேர்தலில் இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் உட்பட பல்வேறு இலவசத் திட்டங்களை, தி.மு.க., அறிவித்தது. ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்களும், தேர்தலையொட்டி அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களும், மீண்டும் வெற்றியைக் கொடுக்கும் என, தி.மு.க., தலைமை உறுதியாக நம்பியது.

தி.மு.க., 119 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், 63, பா.ம.க., 30, விடுதலைச் சிறுத்தைகள், 10, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 7, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தலா ஒரு இடங்களிலும் போட்டியிட்டன.அ.தி.மு.க., அணியில், அ.தி.மு.க., 160 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகளான தே.மு.தி.க., 41, மார்க்சிஸ்ட் 12, இந்திய கம்யூனிஸ்ட் 10, மனிதநேய மக்கள் கட்சி மூன்று இடங்கள் மற்றும் உதிரி கட்சிகள் 8 இடங்களிலும் போட்டியிட்டன.தேர்தல் பிரசாரத்தில், ஐந்து ஆண்டுகளில் செய்த நலத்திட்டங்களை எடுத்துக் கூறி தி.மு.க.,வினர் பிரசாரம் செய்தனர். அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள், ஸ்பெக்ட்ரம் ஊழல், தி.மு.க., ஆட்சியில் நடந்த பல்வேறு ஊழல்கள், பல்வேறு துறைகளில் முதல்வரின் குடும்பத்தினர் தலையிட்டு ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வருவதால் ஏற்படும் பாதிப்புகள், மின்வெட்டு பிரச்னையால் தொழிற்துறை பாதிப்பு உள்ளிட்டவற்றை முன் வைத்தனர்.

ஓட்டுப்பதிவு நடந்து ஒரு மாதத்திற்குப் பின், நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று, ஓட்டு எண்ணிக்கை நிலவரங்களை, தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், எடுத்த எடுப்பிலேயே, அ.தி.மு.க., கூட்டணி, 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்தது. மக்கள், இழுபறியான ஒரு நிலையை ஏற்படுத்தாமல் தெள்ளத் தெளிவாக ஓட்டு போட்டதால், தனிப்பெரும்பான்மையுடன், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றது; தி.மு.க., படுதோல்வி அடைந்தது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு, தி.மு.க., அரசின் பல்வேறு துறைகளில் ஊழல் குற்றச்சாட்டு, இந்த துறையை விட்டு வைத்தனர் என்று கூற முடியாத அளவிற்கு, அனைத்து துறைகளிலும் கருணாநிதி குடும்பத்தினர் மூக்கை நுழைத்து, ஏகபோக ஆதிக்கம் செலுத்தியதன் விளைவால், ஆட்சியைப் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.அரசுத் துறை, சினிமாத் துறை, கேபிள் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதல்வர் குடும்பத்தினர், ஐந்து ஆண்டுகளாக கோலோச்சி வந்தனர். இதனால், ஒவ்வொரு துறையிலும் பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். மேலும், அரசியலிலும் குடும்ப ஆதிக்கம் மேலோங்கியது. இவர்களின் அத்துமீறல்களால், ஒவ்வொரு வகையிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த கோபத்தை, தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர்.

"ரோடு போட்டோம்; மேம்பாலம் கட்டினோம்; வேலை வழங்கினோம்' என்ற தி.மு.க.,வின் வாதத்தையெல்லாம், மக்கள் ஏற்கவில்லை என்பது, தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டியது ஒரு அரசின் கடமை என்ற அளவில் தான், தி.மு.க., பிரசாரத்தை மக்கள் பார்த்தனர்.ஆனால், மின்சாரப் பற்றாக்குறையால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு, விவசாயம் பாதிப்பு, ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தால் விவசாயத்திற்கு ஆள் கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்பு, விஷம் போல் ஏறிய விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதும், தி.மு.க.,வின் தோல்விக்கு காரணம்!

-நமது சிறப்பு நிருபர்-

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X