திருவெண்ணெய்நல்லூர் : திருநறுங்குன்றம் மலையில் ஜைன முனிவர்கள் குகைக்குள் உறங்கிய கற் படுக்கைகள்(சமண படுக்கைகள்) பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள திருநறுங்குன்றம் மலையில் ஜைனர்களின் புண்ணிய ஷேத்திரமான பார்சுவநாதர் என்கிற அப்பாண்டை நாதர் கோவில் உள்ளது. இக்கோவில் கி.பி. 9ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.
மூலவர் அப்பாண்டை நாதர் (நிர்வாண கோலத்தில்) உருவச்சிலை புடைப்பு சிற்பமாக மலையில் செதுக்கப்பட்டுள்ளது. ஜைன கடவுள்கள் 24 பேரில் 23 வது கடவுளாக பார்சுவநாதர் வணங்கப்பட்டு வருகிறார். முதல் கடவுளான விருஷபநாத் முதல் மகாவீரர் வரை சமண சமயத்தை போதித்தவர்களாவர். பண்டைக்காலத்தில் இக்கோவிலின் மேற்குப்பகுதியில் உள்ள குகையில் ஜைன முனிவர்கள் நிர்வாண கோலத்தில் தவம் இயற்றியுள்ளனர். இந்த குகைக்குள் 12 கற் படுக்கைகள் (சமணபடுக்கைகள்) செதுக்கப்பட்டுள்ளன. இதில் சில படுக்கைகள் உடைந்தும், சிதிலமடைந்தும் காணப்படுகிறது.
இங்கு கோவில் உருவாவதற்கு முன்பு ஜைன முனிவர்கள் குகைக்குள் தவம் இயற்றியதால் இவையே கோவிலாக திகழ்ந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. மூலவர் பார்சுவநாதர் சிற்பத்தின் கலைப்பாணி கி.பி 9 ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுவதால் இங்குள்ள கற்படுக்கைகள் கி.பி. 7ம் நூற்றாண்டிலோ அல்லது 8ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டை கடந்தும் சிறப்புமிக்கதாய் விளங்கிக்கொண்டுள்ள திருநறுக்குன்றம் அப்பாண்டை நாதர் கோவிலில் உள்ள கற்படுக்கைகள் (சமண படுக்கைகள்) தற்போது பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. குகையின் உட்பகுதியில் சில சுவர்கள் இடியும் நிலையில் உள்ளது. இவற்றை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு கோவிலின் வரலாற்றினை பின்வரும் சந்ததியினர் தெரிந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படும். அப்பாண்டைநாதர் கோவில் குகையில் உள்ள சமணப்படுக்கைகளை பாதுகாத்திட தொல்லியல்துறை அதிகாரிகளும், சமண சமய பெரியவர்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE