Sex Before marriage : Malaysia experts opposes kushboo's comments | திருமணத்துக்கு முன் பெண்கள் "செக்ஸ் உறவு? மலேசிய அறிஞர் கண்டனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருமணத்துக்கு முன் பெண்கள் "செக்ஸ்' உறவு? மலேசிய அறிஞர் கண்டனம்

Updated : ஜூன் 24, 2010 | Added : ஜூன் 22, 2010 | கருத்துகள் (83)
Sex, marriage, Malaysia,  kushboo, comments ,திருமணம், பெண்கள், செக்ஸ், உறவு, மலேசிய அறிஞர்

திருச்சி: திருமணத்துக்கு முன் பெண்களின் உறவு குறித்து நடிகை குஷ்பு தெரிவித்தக் கருத்துக்கு, உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில், "திருமண முந்தைய உறவு' குறித்து ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க வந்துள்ள மலேசியன் இந்தியன் காங்கிரஸ் கட்சியின் சமூக வியூக அறவாரிய பிரிவுத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கோவையில் இன்று துவங்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வருகை புரிந்துள்ளனர். இதில், பலர் மலேசியாவில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து பஸ் மூலம் கோவை மாநாட்டுக்கு சென்றனர். நேற்று காலை 8.55 மணிக்கு ஏர் ஏசியா விமானம் மூலம், மலேசியா நாட்டின் பேராக் மாநில சட்டசபை சபாநாயகர் டத்தோ கணேசன், முதல்வரின் ஆலோகர் வீரசிங்கம், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மோகன், பெருமாள், அசோகன் உள்பட 51 பேர் திருச்சி விமான நிலையம் வந்தனர்.அவர்களை சட்டசபைத் துணை சபாநாயகர் துரைசாமி, திருச்சி கலெக்டர் (பொ) தட்சிணாமூர்த்தி, மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.


தொடர்ந்து, அவர்கள் திருச்சியிலுள்ள ஃபெமினா ஹோட்டலில் காலை உணவு அளிக்கப்பட்டு, அரசு சார்பில் ஏற்பாடு செய்த நான்கு சொகுசு பஸ்கள் மூலம் கோவை மாநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் ஒவ்வொரு பஸ்ஸிலும் தனி அலுவலர் ஒருவரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுதப்பட்டார்.அதேபோல், நேற்று மாலை 4.05 மணிக்கு மலேசியாவிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு பெண்கள் உள்பட 40 பங்கேற்பாளர்கள், ஆய்வுக்கட்டுரை சமர்பிக்க அறிஞர் ஒருவரும் வந்தனர்.அவர்களை சட்டசபைத் துணை சபாநாயகர் துரைசாமி தலைமையிலான குழுவினர் வரவேற்று, தேனீர் விருந்தளித்து, ஏற்பாடு செய்த சிறப்பு பஸ்களில் கோவை மாநாட்டுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.


உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில், "தமிழில் திருமணத்துக்கு முந்தைய பயிற்சி ஒரு மலேசிய அனுபவம்' எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்பிக்க வந்துள்ள, மலேசியன் இந்தியன் காங்கிரஸ் கட்சியின், சமூக வியூக அறவாரியப் பிரிவுத் தலைவர் குணபதி ஆறுமுகம் கூறியதாவது:உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற சிறப்புமிக்க மாநாட்டை ஏற்பாடு செய்த முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். எங்களுக்கு இங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி.திருமணத்துக்கு முந்தைய பயிற்சி குறித்து மலேசிய அரசு பாடத்திட்டத்தை உருவாக்கி தமிழில் பயிற்சியளிக்கிறது.


திருமணம் செய்துகொள்பவர்கள் முன்னதாக இந்த பயிற்சியை பெறுவர். மலேசிய மாணவர்களுக்கு குடும்ப உறவு முறை, திருமணத்துக்கு முந்தைய உறவு குறித்து அடிப்படை பயிற்சி, விவகாரத்து தொடர்பான பிரச்னை களைவது போன்றவற்றை தடுக்க அரசு பயிற்சியளிக்கிறது. திருமண வாழ்வில் கசப்பு ஏற்படுவதற்கான பல்வேறு சூழல், விவகாரத்து ஏன் நிகழ்கிறது?. மலேசிய நாட்டு பயிற்சி போன்று தமிழகத்திலும் உருவாக்க வேண்டும் போன்ற கருத்துக்களை வைத்து ஆய்வுக்கட்டுரை சமர்பிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


திருமணத்துக்கு முந்தைய பெண்களின் "செக்ஸ்' உறவு குறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்து பற்றி, குணபதி ஆறுமுகம் கூறுகையில், ""பெண்களின் திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவு பற்றி குஷ்பு கூறிய கருத்தை கடுமையாகக் கண்டிக்கிறோம். அதில், எங்களுக்கு உடன்பாடில்லை. திருமணத்துக்கு முன் பெண்கள் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது,'' என்றார்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X