எல்லாருக்கும் ஏற்புடையதா சமச்சீர் கல்வி? கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக, என்பது குறள். கற்பவற்றை கசடற கற்க வேண்டும். அதாவது, தவறே இல்லாத, மாசில்லாத கல்வியை குறைபாடின்றி கற்க வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து. ஆனால் கல்வி முறையை நவீனப்படுத்துவதாகக் கூறி, பாடத்திட்டத்தை குறைக்கும் வகையில், கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. பத்தாம் வகுப்புக்கு கீழ் தற்போது நடைமுறையில் இருந்து வரும், மாநில பாடத்திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல் கல்விமுறைகளை ஒருங்கிணைத்து, ஒரே வகை கல்விமுறையாக கடந்த ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்புகளில் இந்த சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. நடப்பாண்டில் பிற வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தி அறிவிக்கப்பட்டது. அதன்படி மெட்ரிக் பாடத்திட்டத்தின் தரம் குறைக்கப்பட்டது; மாநில பாடத்திட்டத்தின் தரம் சற்றே உயர்த்தப்பட்டது.
அறிவை வளப்படுத்த தரத்தைக் குறைப்பதா? கிராமப்புற மாணவர்களின் அறிவை வளப்படுத்துகிறோம் என்ற அடிப்படையில், செய்யப்பட்ட இந்த மாற்றத்திற்கு மெட்ரிக் உட்பட பிற கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வித்திட்டத்தில் உள்ள குறைகளை விளக்கி கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. பத்திரிகைகளிலும் தொடர் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. ஆனால் அப்போதைய அரசோ இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், தான் எடுத்த முடிவே சரியானது என்ற கருத்தில் சமச்சீர் கல்வியை அமல் செய்தது. அதுவும் படிப்படியாக கொண்டு வராமல் ஒரே ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல் செய்வதாக அதிரடியாக அறிவித்தது. மாணவர் அறிவை விசாலமாக்க நினைக்கும் பெற்றோரும் சமச்சீர் கல்வித் திட்டத்தை வரவேற்கவில்லை. அறிவுதாகம் கொண்ட மாணவர்கள் என்ன பாவம் செய்தனர்? அவர்களின் ஆர்வத்தை அரசு ஏன் குறைக்க வேண்டும்? கல்வித் தரத்தை உயர்த்த வேண்டுமெனில் பாடம் கற்கும், கற்பிக்கும் சூழ்நிலையை, பாடத்திட்டத்தை, மனனம் செய்யும் முறையில் இருந்து செயல்முறை சார்ந்ததாகவோ, தொழில் அடிப்படையிலானதாகவோ மாற்றலாம். அதைவிடுத்து ஒரு திட்டத்தின் தரத்தை குறைப்பது தேவையற்றது.
பின் தங்கும் அபாயம்: இப்படிச் செய்வதால் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை செயல்படுத்தி கல்வியில் முன்னேறும் பக்கத்து மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் பின்தள்ளப்படும் என்பதை அரசு ஏனோ அணுவளவும் சிந்திக்கவில்லை. கம்ப்யூட்டர், அறிவியல் தொழில்நுட்பம் என உலக நாடுகளுடன் போட்டியிட வேண்டிய சூழலில், ஒரு பாடத்திட்டத்தின் தரத்தை குறைப்பதை ஏற்க முடியுமா? இதனைப் புரிந்து கொண்ட புதிய அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்துள்ளது. பல நூறு கோடி ரூபாய் வீணானாலும், வருங்கால தலைமுறை வருந்தப்போவதை தடுத்துள்ளது. கல்வித்தரம் பாழாகிவிடுமோ எனக் கருதிய நெஞ்சங்களில் பால் வார்க்கப்பட்டுள்ளது. அறிவு என்பது வளர்ச்சியுடையதாக இருக்க வேண்டும். வளர்ச்சியை நோக்கியே கற்பித்தலும், அதற்கு அடித்தளமான பாடத்திட்டமும் இருக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்து. அவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளன வாசகர்களின் பார்வைக்கு:
கிராமப்புற மாணவர்களின் தரத்தை உயர்த்த வழி என்ன?சிவகங்கை ஆக்ஸ்வர்டு பள்ளித்தாளாளர் சியாமளா, முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்கள்: சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்தது சரியே. திட்டம் நல்லதாக இருந்தாலும் செயலாக்கத்தில் குறைகள் உள்ளன. சமச்சீர் கல்வியால் மெட்ரிக்மாணவர்களின் தரம் பாதிக்கப்படும். சமச்சீர் கல்வியால், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வேண்டுமானால் பயன் இருக்கலாம்; ஆனால் பெற்றோர் ஒத்துழைப்புடனும், சுயமுயற்சியுடனும் பயிலும் மாணவர்களுக்கு, குறிப்பாக மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியருக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். மெட்ரிக் பள்ளிகளில் அனைத்தும் தரம் உயர்ந்தவை என்று கணிக்கமுடியாது; அதேபோல், அரசுப் பள்ளிகளிலும் பல தரமுயர்ந்த பள்ளிகள் உள்ளன. இதில் ஆசிரியர்கள் பங்கு மட்டுமே வெற்றியைத் தேடித்தரும்.
பிரதான குறைகள்: சமச்சீர் கல்வியில் படங்கள் உள்ளன; பாடங்கள் குறைவாகவும், மேலோட்டமாகவும் உள்ளன. பாடப்புத்தகத்திற்கு பின்னால் உள்ள பயிற்சிகள் போதாது மாணவனின் பகுத்தறிந்து ஆராயும் திறமையை வளர்க்கும் வகையில் பயிற்சிகள் தேவை புத்தகத்தில் உள்ள செயல்முயைப்பயிற்சியை அரசுப்பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் செயல்படுத்த இயலுமா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.கிராமப்புற மாணவர்கள்
தரம் உயருமா?: சமச்சீர் கல்வியால் கிராமப்புற மாணவர்களின் தரத்தை உயர்த்த மிக முக்கியத் தேவை சிறந்த அடிப்படைக்கல்வி. மழலையர் மற்றும் ஆரம்பக்கல்வி; (3 வயது முதல் பத்து வயதிலான கல்வி). ஆறாம் வகுப்பிலும் அதற்கு மேலும் கணினியைக் கையாள மாணவர் கற்றுக்கொண்டால், தன்விருப்பம்போல பாடத்தை சுயமுயற்சியாலும், ஆசிரியரின் வழிகாட்டுதல் மூலமும் திறம்படக் கற்றுக்கொள்ளலாம். இந்த ஆரம்பக்கல்வியே உயர் மற்றும் மேல் நிலையில் ஆர்வமுள்ள மாணவனை உயர்கல்வியும் சராசரி மாணவனை தொழிற்கல்வியும் பயின்று வாழ்க்கையில் வெற்றிபெற உதவுகிறது. இன்றைய சூழ்நிலையில் பாடத்திட்டம் நன்றாகவே உள்ளது. தொடர்ந்து அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்பட்ட தரமான புத்தகங்கள் அச்சிடப்பட வேண்டும். ஒன்பதாம் வகுப்புக்கு மேல் அந்தந்த பாடத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற ஆசிரியர் மட்டுமே பாடங்களை நடத்தி, செயல்முறைப்பயிற்சிகளையும் திறமையாகக் கையாள வேண்டும். அதைத் தலைமையாசிரியர் கண்காணிக்கவேண்டும்.
பெற்றோர் நிலை: சமச்சீர் கல்வியை பெற்றோர்தான் பிரதானமாக எதிர்க்கின்றனர். அவர்களுக்கே தன் குழந்தையின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். எந்தக் கல்வித்திட்டமும் முழு வெற்றியடைய தேர்வு முறையும் சரியாக வகுக்கப்பட வேண்டும். ஏனெனில் கற்கும் திறன், கற்றவற்றை தக்கவைக்கும் திறன் தேர்வில் வெளிக்கொணரும் திறன் போன்றவை மாணவர்களின் தனித்திறனைச் சார்ந்துள்ளது.அதே போன்று ஆசிரியரின் கற்பிக்கும் திறன் மற்றும் அர்ப்பணிப்பு வேறுபாடுவதால் இந்தத்திட்டத்தின் முழுமையான செயலாக்கம் ஆசிரியர்களின் திறனைச் சார்ந்திருக்கிறது.
சீர்திருத்தம் என்றால் தரம்உயர்த்துவதே தவிர சமப்படுத்துவதல்ல : மதுரை அக்ஷரா பள்ளி முதல்வர் கவுசல்யா ஸ்ரீநிவாசன்: சமச்சீர் கல்வித்திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பது என்பது, வரவேற்கத்தக்க நடவடிக்கை. சமச்சீர் கல்வி என்ற பெயரே தவறாக புரிந்து கொள்ள பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அவசர கோலமாக அரசு கொண்டு வந்தது. இந்த பாடத்திட்டத்தால் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயான வேறுபாடு எப்படி குறையும்? ஒரே பாடத்திட்டம் என்பது இந்த வேறுபாட்டை எப்படி குறைக்கும்? மாறாக பல பள்ளிகள் சர்வதேச பாடத்திட்டம் அல்லது சிபிஎஸ்இ., பாடத்திட்டத்திற்கு மாறத் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் சமநிலை என்பது எப்படி சாத்தியமாகும்?
எதில் சீர்திருத்தம் தேவை: கல்வி வர்த்தகமயமாவதிலிருந்து தவிர்க்கவே சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தால் எப்படி இந்த மாற்றம் ஏற்படும்? தேர்வு முறையிலோ, கல்வி முறையிலோ சீர்திருத்தம் கொண்டு வர அரசு முயலவில்லை. ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்று கோத்தாரி கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த கமிஷனின் அறிக்கை இதுவரை செயல்படுத்தப்படவில்லை. எந்த நிலையிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்று எவரும் கூறவில்லை; ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இத்தகைய ஒரு நிலை எடுக்கப்பட்டது. அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைக்கும் நடைமுறைகளைக் களைந்து, கல்வித்துறையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை தேசிய பாடக்குறிக்கோள் வடிவமைப்பு உருவாக்கியது.கல்வித்துறையில் சீர்திருத்துவதென்பது, அதன் தரத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, சமப்படுத்துவதாக இருக்கக்கூடாது. ஒரே மாதிரியான பாடத்திட்டம், சமமான கல்வியைத் தராது. கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அவசரப்பட்டு கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் மிகவும் மோசமான முன் உதாரணமாகும். இதனால் மெட்ரிக் பள்ளிகள் வெகுவாக பாதிக்கப்படும்.
சமச்சீர் கல்வி திட்டத்தை தமிழக அரசு நிறுத்த காரணம் என்ன?சென்னை செயின்ட் ஜான்ஸ் குழும பள்ளிகளின் முதல்வர் கிஷோர்குமார்: தற்போதுள்ள சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் அனைத்தும் தரமானவை என்று கூற முடியாது. குறிப்பாக, அறிவியல் பாடத்திட்டங்கள் தரமாக இல்லை. பாடத்திட்டங்களில் உள்ள பல்வேறு குறைகளை சரி செய்து, தரமான பாடத்திட்டத்தை தமிழக அரசு வெளியிடும்.சமச்சீர் கல்வி திட்டம் என்பது, வெறும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் என்ற அளவில் தான் தற்போது இருக்கிறது. சமச்சீர் கல்வி திட்டம் என்பது, பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாக உருவாக்கியிருக்க வேண்டும். குறிப்பாக, தற்போதுள்ள நவீன அறிவியல் துறை வளர்ச்சிகள் குறித்து மாணவர்களிடம் கற்பிக்கும் வகையில், விரிவான பாடத்திட்டங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அறிவியல் பாடத்திட்டங்கள் தரமானதாக இல்லை.சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தி வைப்பு என்றதும், சிலர் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டம் தான் சிறந்தது என்றும், சிலர் சமச்சீர் கல்வி தான் சிறந்தது என்றும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். கல்வி என்பது, கிராமத்தில் உள்ள மாணவர் முதல், நகரங்களில் உள்ள மாணவர்கள் வரை அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அடிப்படையில், பள்ளி கல்வியில் தரமான கல்வியை பெற்றால் தான், உயர் கல்வி மற்றும் பல்வேறு துறைகளில், உயர் பதவிகளுக்கு செல்லும் போது, திறம்பட செயல்பட முடியும்.கல்வியை, பொருளாதார அடிப்படையில் பார்க்க கூடாது. மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு திறமை இருக்கும். அதனடிப்படையில், அவர்கள் கல்வியை பெறுகின்ற நிலை இருக்க வேண்டும். தற்போதுள்ள நான்கு வகையான பாடத்திட்டங்கள் இருப்பது தவறு ஒன்றும் கிடையாது. அதே நேரத்தில், அனைத்து கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து, பொதுவான பாடத்திட்டத்தை உருவாக்கும் போது, அதை தரமானதாகவும், பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாகவும் உருவாக்கினால், எந்தவித பிரச்னையும் இல்லை.அந்த வகையில் பார்த்தால், சமச்சீர் கல்வி திட்டத்தில், பாடப் புத்தகங்கள் மட்டும் தான் ஒரே சீராக இருக்கின்றன. இதர கூறுகள் அதில் இடம் பெறவில்லை. மாணவர்களின் கற்றல் திறனை அளவீடு செய்யும் திட்டங்கள், ஆசிரியர் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையிலான திட்டங்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டங்கள் ஆகியவை, சமச்சீர் கல்வியில் இடம் பெறவில்லை. முக்கியமாக, சமச்சீர் கல்வி குறித்து கருத்து கேட்டபோது, ஆசிரியர்களிடம் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும்.ஆனால், வகுப்பிற்கே போகாத பள்ளி தாளாளர்கள், முதல்வர்கள் உள்ளிட்ட மற்றவர்களிடம் தான், சமச்சீர் கல்விக் குழு கருத்துக்களை கேட்டது. யாரிடம், கருத்துக்களை கேட்க வேண்டுமோ, அவர்களிடம் முழுமையான அளவில் கருத்துக்களை கேட்கவில்லை. திட்டத்தை, படிப்படியாக, ஒவ்வொரு வகுப்பாக கொண்டு சென்றிருக்க வேண்டும். அவசரம், அவசரமாக பாடத்திட்டத்தை உருவாக்கி, ஒரே நேரத்தில் அமல்படுத்த முயன்றது தவறு.நேரடியாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தினால், அவர்களுக்கு என்ன புரியும்? ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அமல்படுத்தினால், அவர்கள் பத்தாம் வகுப்பிற்கு செல்லும் போது, திட்டத்தை புரிந்து கொண்டு படிக்க முடியும். அதுபோன்ற ஒரு வாய்ப்பை, முந்தைய அரசு தரவில்லை. இதுபோன்ற பல்வேறு குறைபாடுகள் காரணமாக தான், சமச்சீர் கல்வி திட்டத்தை முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார். இதை வரவேற்கிறோம்.சமச்சீர் கல்வி திட்டத்தில் உள்ள குறைகள் முழுவதையும் சரி செய்து, விடுபட்ட பல்வேறு கூறுகளை உள்ளடக்கி, வலுவான ஒரு பாடத்திட்டத்தை தமிழக முதல்வர் ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை அடங்கிய குழுவை ஏற்படுத்தி, அவர்கள் கருத்தை பெற்று, சமச்சீர் கல்வி திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இக்குழுவில், அரசியல்வாதிகள் யாரையும் நியமிக்கக் கூடாது. முற்றிலும், கல்வித்துறை சார்ந்தவர்களையும், குறிப்பாக ஆசிரியர்களை அதிகளவில் நியமிக்க வேண்டும்.தரமான பாடத்திட்டத்தை உருவாக்கினாலும், ஆசிரியர்களை தரமானவர்களாக மாற்ற வேண்டியது மிகவும் அவசியம். ஐ.டி., துறையை சேர்ந்தவர்களுக்கு, 60 ஆயிரம், 70 ஆயிரம் ரூபாய் என்று சம்பளம் தரப்படுகிறது. ஆனால், ஆசிரியர்களுக்கு அந்தளவுக்கு சம்பளம் தருவதில்லை. நல்ல சம்பளம் கொடுத்தால், தரமான ஆசிரியர்கள் கிடைப்பர்.இவ்வாறு கி÷ஷார்குமார் கூறினார்.
சமச்சீர் கல்வி என்பதே சரியில்லை : திண்டுக்கல் எஸ்.எம்.பி., மாணிக்கநாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் எஸ்.பி.டி.கனகசபை கூறியதாவது:சமச்சீர் கல்வி என்ற வார்த்தையே முதலில் சரியில்லை என்றுதான் கூற வேண்டும். வளர்ந்த நாடுகளில் கல்வி கற்றோர் எண்ணிக்கை அதிகம் இருப்பர். அந்த நாடுகளே வளர்ந்த நாடாக இருக்கும். ஆனால் இங்கு அது குறைவு. எனவே கல்வியை நாம் தரம் உயர்த்த வேண்டும். அரசின் எதிர்கால சிந்தனையாக அது இருக்க வேண்டும். இருப்பதே போதும் எனக் கருதக் கூடாது. இப்போதே நாம் அதற்கேற்ப செயல்பட்டால்தான் வரும் 30 ஆண்டுகளில் நாடு வளம்பெறும்.
வருங்காலத் தலைமுறையைப் பாதிக்கும்: தமிழகம் தற்போது நல்ல முறையில் இயங்க காரணம் நமது கல்வி முறையின் சிறப்பே. அதை மாற்றி சமச்சீர் முறையை அமல்படுத்தி கெடுப்பது என்ன நியாயம்? சமச்சீர் கல்வி முறை என்பது தவறான சிந்தனை. வருங்கால தலைமுறைக்கு இது உகந்ததல்ல என்பதால்தான் தற்போதைய அரசு அதை நிறுத்தி வைத்ததென்பது, சிறந்த முடிவு. சொல்லப் போனால் இப்போதுள்ள கல்வி முறையே இந்த தலைமுறைக்கு போதுமானதல்ல. இக்கால குழந்தைகள் அத்தனை அறிவு நிரம்பியவர்களாக உள்ளனர். 20 ஆண்டு வரைதான் அறிவு வளரும். பிறகு படிப்படியாக குறையும் தன்மை உண்டு. அதற்குள் அவர்களுக்கு தரமான கல்வியை தருவது நல்லது. அடுத்த தலைமுறையினர் நல்ல முறையில் இருக்க அடிப்படை கல்வியை தரமாக தருவது அவசியம்.அமெரிக்காவில் அரசு பள்ளிகளில் கூட கல்வி, விளையாட்டு, நூலகம், நீச்சல்குளம், கம்ப்யூட்டர் மையம் என தரமிக்கதாக உள்ளன. மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகள் இருந்தாலும், மக்கள் அரசு பள்ளியில் படிப்பதற்கே முன்னுரிமை தருகின்றனர். அங்கு பொருளாதார வீழ்ச்சி அடைந்தபோது, பாடத்திட்டத்தில் தற்காலத்திற்கேற்ப பொருளாதார பாடம் அமையவில்லை. பழைய திட்டமாக உள்ளது. எனவே பொருளாதார நெருக்கடியான நிலை ஏற்பட்டபோது சமாளிக்க இயலவில்லை. பாடத்திட்டத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று பள்ளிகளில் பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து உடனே அரசும் பாடத்திட்டத்தை தரம் உயர்த்தியது. அங்குள்ள பாடத்திட்டங்கள் செயல்முறை சார்ந்ததாக உள்ளது. குழந்தைகளின் சுதந்திரம், தனித்தன்மையை வளர்ப்பதாக உள்ளது. பாடங்களுடன் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால் இங்கு அப்படியில்லை.
கிராமப்புற கல்வி ஏன் பின்தங்கி உள்ளது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பள்ளிக் கல்வித்துறை இயக்குனராக பரமசிவம் இருந்தபோது, பள்ளிகளை காலை 8.30 மணிக்கு துவங்க வேண்டும் என விரும்பினார். அதற்கு ஆசிரியர்களிடையே எத்தனை எதிர்ப்பு கிளம்பியது. கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனக் கூறி மறுத்துவிட்டனர். இப்படி எதைக் கூறினாலும் கிராமப்புற மாணவர்களை கூறி தடுக்கின்றனர். கிராமப்புற பள்ளிகளில் ஆசிரியர்களே ஒழுங்காக வருவதில்லை, கற்பிப்பதில்லை. கல்வித்துறை அதிகாரிகள் வரும்போது மட்டும் ஆசிரியர்கள் ஒழுங்காக இருக்கின்றனர். சமச்சீர் கல்வியில் புத்தகம் உட்பட செலவினங்கள் குறைவு என்று குற்றம் சாட்டுகின்றனர். இப்போதே அரசு ஒரு மாணவருக்கு செலவிடும் தொகையை கணக்கிட்டால் ரூ. 25 ஆயிரம் வரை ஆகிறது. அதை ஒப்பிட்டால் மெட்ரிக் பள்ளிகளில் குறைவுதான். ஆனால் மாணவர்களுக்கு தரமான ஆய்வுக்கூடம் உள்ளிட்ட வசதிகளை தருகிறோம். கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்றால் அவ்வாறு தவறு செய்யும் பள்ளிகளை கண்காணித்து அங்கீகாரத்தை அல்லவா ரத்து செய்ய வேண்டும்? அதை விடுத்து ஒழுங்காக, முறையாக நடக்கும் மெட்ரிக் பள்ளிகளையம் குறைகூறக் கூடாது.
மெட்ரிக் பள்ளிகளை பெற்றோர் விரும்புவதேன்: தரமான கல்வி என்பதால்தான் கிராமப்புற பெற்றோரே மெட்ரிக் பள்ளிகளை நாடி வருகின்றனர். சென்னை போன்ற நகரங்களில் பல ஆண்டுகளாக அரசு பள்ளிகள் புதிதாக துவக்கப்படவில்லை. மாநகராட்சி பள்ளிகள் சிறப்பாக இயங்கி வந்தாலும், மக்கள் தொகைக்கு ஏற்ப இல்லை. எனவே பல தனியார் பள்ளிகள் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் முளைத்துள்ளன. இவை போட்டி போட்டு கட்டணம் வசூலிக்கின்றன. இதைக் கட்டுப்படுத்த அரசே பள்ளிகளை திறக்கலாமே?
மொழித் திறன்: இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் மும்மொழித் திட்டம் அமலில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் 2 மொழித் திட்டம் உள்ளது. எனக்கு இந்தி தெரியாத நிலையில், டில்லியில் ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு அவதிப்பட்டேன். நம் சுயநலத்தால் ஒரு தலைமுறையே கெடுக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வித் திட்டத்திலும் உருது, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி மாணவருக்கும் உகந்ததாக உள்ளது. ஆனால் இந்தி கிடையாது. தமிழக மாணவர்கள் பிற மாநிலங்களுக்குச் சென்று படிக்கவோ, வேலை தேடவோ தேவையில்லையா? சமச்சீர் கல்வி முறையில், மாநில பாடத்திட்டதை கொஞ்சம் கூடுதலாக உயர்த்தி உள்ளனர். அதை கூட நடத்த ஆசிரியர்கள் திணறுகின்றனர். மாநில பாடத்திட்டம் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள், தங்களுடைய தரத்தை உயர்த்திக் கொள்ளாத வரை சமச்சீர் கல்வி என்பது ஏமாற்றுவேலையாகவே இருக்கும். அதுபோன்ற ஆசிரியர்களே, சமச்சீர் கல்விமுறைக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களுக்கு நாட்டைப் பற்றியோ அடுத்த தலைமுறை குறித்தோ கவலையில்லை.
வெளிநாட்டவரும் விரும்பும் இந்தியர் அறிவு: இன்று இந்தியர்களின் அறிவுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கு அடிப்படையான விஷயம் நம்மிடம் ஆங்கில அறிவு வலுவாக இருப்பதுதான். எனவே சீனாவும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆங்கில மொழியில் அக்கறை காட்டத் துவங்கியுள்ளது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் பள்ளி, கல்லூரியில் இருந்து வெளியேறும் சீன மாணவர்கள், அறிவு சார்ந்த தொழிலில் ஈடுபட்டு, உலகநாடுகளுக்குச் செல்லும்போது நம்மை முந்திவிடுவர். இத்தயை நிலையில் சமச்சீர் கல்வி கொண்டு வந்தால், முதலில் பாதிக்கப்படுவது நம்முடைய தமிழகமாகத்தான் இருக்கும். இந்தியாவில் அமெரிக்க தூதரகம் டில்லி மற்றும் சென்னையில் மட்டுமே இருந்தது. சமீபத்தில் ஐதராபாத்தில் துவக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அங்கு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பரவலாக நடைமுறைப்படுத்தி இருப்பதால், கல்வித் தரம் உயர்ந்து, கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றுவிட்டனர். எனவே அங்குள்ளவர்கள் பெருமளவில் அறிவு சார்ந்த பணிக்காக அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளதால், அவர்களுக்கு உதவும் வகையில் ஐதராபாத்தில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பொறியியல் படிப்புக்கு முன்புபோல தமிழ்நாட்டிற்கு ஆந்திராவிலிருந்து மாணவர்கள் வருவதில்லை. இந்நிலையில் சமச்சீர் கல்வி வந்திருந்தால் நாம் இன்னும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்போம். மெட்ரிக் கல்விமுறையில் அறிவியல்பாடமானது இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் என நான்கு பாடமாக இருந்தது. நான்கு ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். சமச்சீர் கல்வியில் அவற்றை ஒனற்õக இணைத்து ஒரே பாடமாக்கப்பட்டு, ஒரே ஆசிரியரே நடத்தும்படியாக அமைத்திருந்தனர். மேலும் சமச்சீர் கல்வி முறையில், கம்ப்யூட்டர் குறித்த ஏட்டளவில் பாடம் உள்ளதே தவிர, மாணவர்கள் கண்ணில் கம்ப்யூட்டரைக்க காட்டுவதில்லை. ஆனால் அவற்றை மெட்ரிக் பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி செயல் விளக்க முறையிலும் கற்றுத் தரப்படுகிறது. அரசு பள்ளிகள் பலவற்றிற்கும் கம்ப்யூட்டர் தரப்பட்டுள்ளது. ஆனால் அவை முறையாக பராமரிக்கப்பட்டு, ஒழுங்காக செயல்படுகின்றனவா? இல்லையே. பல பள்ளிகளில் மைதானமே கிடையாது. ஆனால் உடற்பயிற்சி ஆசிரியர்கள் உள்ளனர். இங்குள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்கிரிமென்ட், பதவி உயர்வு மட்டுமே எதிர்பார்க்கின்றனர். மாணவர் நலன் முக்கியமாக தெரிவதில்லை.
எது புதிய மாற்றம்: எனவே கல்வியில் புதிய மாற்றம் என்பது பாடத்திட்டத்தின் தரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும். முதல் வகுப்பில் இருந்து உயர்வகுப்புகளுக்கு மாற்றத்தை கொண்டு வரவேண்டும். உதாரணமாக பிறந்த கன்றுக்குட்டியை தினமும் தூக்கிப் பழகும் ஒருவர், கன்று வளர்ந்து மாடானாலும் தூக்கிவிடுகிறார். அதற்கு தினமும் செய்யும் பயிற்சியே காரணம். அதுபோல கல்வியிலும் சிறிது சிறிதாக மாற்றம் செய்ய வேண்டுமே தவிர, திடீரென மாறுதலைக் கொண்டு வரமுடியாது. கிராமப்புற கல்விக் கூடங்களில் சூழ்நிலை, வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும். வேண்டுமானால் அதிக ஆர்வமில்லாத ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல் கல்விமுறைகளை விடுத்து, மாநில பாடத்திட்டம் மற்றும் மெட்ரிக் பாடத்திட்டம் என இருமுறைகளை தரம் உயர்த்தி செயல்படுத்தலாம்.சமச்சீர் கல்வியில் தரம் குறைவு என்று பார்த்தால், பாடங்களிடையே கருத்து இயைபு, தொடர்ச்சி இல்லை. வினாத்தாள் முறை, பயிற்சிகள் போதிய அளவில் இல்லை. முழுவதும் சரியில்லை என்றே கூற வேண்டும். இதுதொடர்பாக மாணவர்கள், பெற்றோரிடம் கூறியுள்ளோம். அவர்களும் எங்கள் கருத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். சமச்சீர் கல்வியை புதிய அரசு ரத்து செய்ய, தனியார் பள்ளிகளே காரணம் என குற்றம்சாட்டுவது தவறு. இதுதொடர்பாக தனியார் மெட்ரிக் பள்ளிகளை அரசு அழைத்து பேசவில்லையே. அரசுடன் இது குறித்து பேச நாங்கள் தயாராகும் முன்பே, ரத்து அறிவிப்பு செய்யப்பட்டது. எனவே இது சரியான வாதமல்ல.