சங்க கால பாண்டிய மன்னர் பெருவழுதி நாணயம் கண்டுபிடிப்பு| | Dinamalar

சங்க கால பாண்டிய மன்னர் பெருவழுதி நாணயம் கண்டுபிடிப்பு

Updated : ஜூன் 23, 2010 | Added : ஜூன் 23, 2010 | கருத்துகள் (61)
Share
-இரா.கிருஷ்ணமூர்த்தி தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் 1894 ஆம் ஆண்டு சங்க கால நூலான புறநானூற்றைப் பதிப்பித்தார். அந்நூலில் சங்க கால சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெயர்களும், அவர்களின் கீழ் ஆட்சி செய்த குறுநில மன்னர்களின் பெயர்களும் இருப்பதை வரலாற்று ஆசிரியர்கள் கண்டு வியந்தனர். சிலர், இப்பெயர்கள் கற்பனையான பெயர்கள் என்றும், இப்பெயர்களை உறுதி செய்ய வேறு

-இரா.கிருஷ்ணமூர்த்தி

தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் 1894 ஆம் ஆண்டு சங்க கால நூலான புறநானூற்றைப் பதிப்பித்தார். அந்நூலில் சங்க கால சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெயர்களும், அவர்களின் கீழ் ஆட்சி செய்த குறுநில மன்னர்களின் பெயர்களும் இருப்பதை வரலாற்று ஆசிரியர்கள் கண்டு வியந்தனர். சிலர், இப்பெயர்கள் கற்பனையான பெயர்கள் என்றும், இப்பெயர்களை உறுதி செய்ய வேறு ஆதாரங்கள் இல்லை என்றும் கூறி வந்தனர். ஆனால் சென்ற நூற்றாண்டில் சில குகைத் தளக் கல்வெட்டுகளில் சங்க கால மன்னர்களின் பெயர்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழ்நாட்டிலுள்ள சில குகைத் தளக் கல்வெட்டுக்களைப் படித்த தொல்லெழுத்து அறிஞர் திரு.கே.வி.சுப்ரமணிய அய்யர் அவர்கள், அக்கல்வெட்டுகள் பிராமி எழுத்து முறையில் வெட்டப்பட்டுள்ளதென்றும், அத்தொடர்களில் சில தமிழ் சொற்கள் இருப்பதாகவும் 1924 ஆம் ஆண்டு அவர் எழுதிய கட்டுரையில், முதன் முதலில் குறிப்பிட்டார். 1965 ஆம் ஆண்டு திரு.ஐராவதம் மகாதேவன் அவர்கள் மாங்குளம் குகைத் தளத்தில் வெட்டப்பட்ட தமிழ் - பிராமி கல்வெட்டில் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் மற்றும் வழுத்தி பெயர்கள் இருப்பதாகவும், அதே ஆண்டில் புகளூருக்கு அருகில் உள்ள குகைத் தளத்தில் சங்க கால சேர மன்னர் இரும்பொறை வம்சத்தைச்  சேர்ந்த சேரல் இரும்பொறை, பெரும்கடுங்கோ மற்றும் இளம்கடுங்கோ ஆகியோரின் பெயர்கள் இருப்பதாகவும் அறிவித்தார்.


ஒரு நாட்டின் வரலாற்றை எழுத இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, நாணயங்கள் பெரிதும் உதவுகின்றன. சங்க காலச் செப்பேடுகள் இதுவரை கிடைக்கவில்லை. தொன்மையான தமிழக நாணயங்கள் குறித்து நூறு ஆண்டுகளுக்கு மேலாக பலர் ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதியுள்ளனர். தொன்மையான பாண்டியர் நாணயங்களைப்  பொறுத்தவரையில், 1888 ஆம் ஆண்டு "பாதிரியார் லோவன்தால்'  வெளியிட்ட, "திருநெல்வேலி நாணயங்கள்' என்ற நூல் குறிப்பிடத்தக்கது. இந்நூலில் தொன்மையான, பாண்டியரின் செப்பு, சதுர நாணயங்களின் வரைபடங்களை முதன் முதலாக வெளியிட்டார். 1933 ஆம் ஆண்டு சர்.டி.தேசிகாச்சாரி வெளியிட்ட, "தென் இந்திய நாணயங்கள்' என்ற நூலும் குறிப்பிடத்தக்கது.  இந்நூலில் பாண்டியரின் நீள் சதுர நாணயங்கள் பன்னிரண்டு குறித்து அவர் விளக்கம் தந்துள்ளார். அவை அனைத்தும் செம்பால் ஆனவை. அந்த நாணயங்களை அவர் சங்க கால நாணயங்கள் என்று குறிப்பிடாமல்,  பாண்டியரின் தொன்மையான நாணயங்கள் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். தொன்மையான பாண்டியர் நாணயங்கள் குறித்து நன்கு ஆய்வு செய்து நூல் வெளியிட்டவர் திரு.புதெல்பு என்ற ஆங்கிலேயர் ஆவார்.
அவரது, "பாண்டியரது நாணயங்கள்' என்ற நூல், 1966 ஆம் ஆண்டு காசியில் உள்ள நாணயவியல் சங்கத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் ஓர் அருமையான படைப்பு. அவர், சுமார் முப்பத்தைந்து செப்புக் சதுர நாணயங்கள் குறித்துப் படங்களுடன் விளக்கியுள்ளார். இவை அனைத்தும் தொன்மையான பாண்டியர் நாணயங்களே ஆகும். எழுத்துப் பொறிப்புள்ள நாணயம் கிடைக்காததால், அதுவரை தென் தமிழ்நாட்டில் கிடைத்த தொன்மையான, சதுர, நீள் சதுர நாணயங்களைச் சங்க கால நாணயங்களென்று வரலாற்று அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சங்க காலத்தில் பண்ட மாற்று முறையே இருந்தது, அதனால், நாணயத்தின் தேவை இல்லாமலிருந்தது என்று அவர்கள் எழுதினர்.


சிலர், சங்க கால மன்னர்களான சேர, சோழ, பாண்டியர்கள், குறுநில மன்னர்கள் என்றும், அதனால் அவர்கள் நாணயங்கள் வெளியிடவில்லை என்றும் எழுதினர். மேலும், அக்காலக்கட்டத்தில் மௌரியப் பேரரசு மிக வலிமையாக இருந்ததால்,  அவர்கள் வெளியிட்ட வெள்ளி முத்திரை நாணயங்களைத் தமிழக வணிகர்கள் பயன்படுத்தினர் என்றும் எழுதினர். இந்த நூறு ஆண்டு குழப்பத்திற்கு 1984 ஆம் ஆண்டு தான் முடிவு ஏற்பட்டது. வருடந்தோறும் கோடை விடுமுறையை கழிக்க நான் கொடைக்கானல் செல்வது வழக்கம். 1984 ஆம் ஆண்டு மே மாதம் கொடைக்கானல் சென்றிருந்தேன். மாலை வேளையில் என் மனைவியுடன் கடைவீதிக்குச் சென்றபோது, பஸ் நிலையத்தின்  அருகில் பழைய பொருட்கள் விற்பனை செயும் சிறிய கடையைக் கண்டேன். அக்கடையில் ஓலைச் சுவடிகள் இருப்பதைக் கண்டு, அச்சுவடிகளை பார்க்க ஆசைப்பட்டு கடையினுள் சென்றேன். தொன்மையான வட்டெழுத்து குறித்து நான் ஆய்வு செய்ததால், வட்டெழுத்தால் எழுதப்பட்ட ஓலைச்சவடி கிடைக்குமோ என்ற ஆர்வம் என்னை அக்கடைக்குள் இழுத்துச் சென்றது. கடையினுள் ஒரு மேஜையின் மேல் ஒரு தட்டில் பல பழைய நாணயங்களை குவித்து வைத்திருப்பதைக் கண்டேன்.  ஆர்வ மிகுதியால் அந்த நாணயங்களை கிளறிப் பார்த்தபோது, ஒரு நீள் சதுர செப்பு நாணயத்தைப் பார்த்தேன். அந்த நாணயம் மிகப் பழைமையான நாணயம் என்பதை அதைப் பார்த்தவுடன் உணர்ந்தேன். அந்த நாணயத்தின் முன்புறத்தில் நின்ற நிலையிலுள்ள யானைச் சின்னமும் அதன் மேல் பல இலச்சனைகளும் இருப்பதைக் கண்டேன்.
அக்கடைக்காரரிடம் இந்த நாணயத்தை எங்கு வாங்கினீர்கள் என்று கேட்டபோது, அவர் மதுரையில் பழைய பொருட்கள் விற்பனை செயும் திரு.தங்கையா நாடார் அவர்களின் முகவரியைக் கொடுத்தார். அவரை சந்தித்தபோது அவர் மதுரை முனிசாலையில் வசிக்கும் திரு.முகமது இஸ்மாயிலின் முகவரியைக் கொடுத்தார். சில நாட்களில் அவரைச் சென்று பார்த்தேன்.


திரு.இஸ்மாயில், மதுரை வைகையாற்றில் புது வெள்ளம் வடிந்து ஆற்று மணலில் வெளிப்படும் பழைய நாணயங்களை பல வருடங்களாக சேகரித்து வைத்திருந்தார்.  அவரிடமிருந்து சுமார் பத்து நாணயங்களை விலைக்கு வங்கினேன். அவை அனைத்தும் செப்பு நாணயங்கள். நீண்ட காலம் மணலிலும், நீரிலும் கிடந்ததால்அவை ஒரு வகையான ரசாயன மாற்றம் ஏற்பட்டு, பளபளப்பான பூச்சுடன் காணப்பட்டன. இந்த பூச்சிற்கு ஆங்கிலத்தில், "பாட்டினா' என்று பெயர்.  நான் இந்த நாணயங்களை சேகரிக்கத் துவங்குவதற்கு முன், தமிழ் எழுத்துச் சீர்மை குறித்து பெரியார் அவர்களின்  கருத்துக்களால் ஈர்க்கப்பட்டேன். தமிழ் எழுத்தில் சீர்மை செய்தால் என்ன என்ற எண்ணம் மனதில் ஆழப் பதிந்தது. இந்த ஆர்வத்தின் காரணமாக தமிழின் தொன்மையான எழுத்துக்களான  தமிழ் - பிராமி எழுத்துக்களையும், அதனை அடுத்த வளர்ச்சியான வட்டெழுத்துக்களையும் நன்கு கற்றிருந்தேன். திரு.இஸ்மாயில் அவர்களிடம் வாங்கிய நாணயங்களில் ஒன்று மாறுபட்டிருந்தது. அதில் தமிழ் - பிராமி எழுத்துக்கள் இருப்பதை உணர்ந்தேன். நாணயத்தின் முன்புறத்தில், நின்று கொண்டிருக்கும் ஒரு குதிரைச் சின்னமும், அதன் மேல் பெருவழுதி என்ற பெயரும், அதேபோல் நாணயத்தின் வலப்பக்கத்தில் மீண்டும் ஒருமுறை பெருவழுதி பெயரும் இருப்பதைக் கண்டேன்.


வழுதி, சங்க காலப் பாண்டியரின் பட்டப் பெயர்களுள் ஒன்று. பெருவழுதி அவருள் சிறந்தவரைக் குறிப்பது. வழுதி பெயருடைய நால்வரைப் பற்றி சங்க இலக்கியங்கள் விரித்துப் பேசுகின்றன. அவர்களில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி சிறந்த மன்னனாகக் கருதப்படுகிறான். பல்யாகசாலை என்ற அடைமொழி பல யாகங்களை அமைத்துத் தந்தவன் அல்லது அமைக்க உதவியவன் என்ற பொருளைத் தருகிறது.
பெருவழுதி பெயர் கொண்ட நாணயம், சங்க கால மன்னர் பெருவழுதி வெளியிட்ட நாணயம் என்பது உறுதியானது. இந்த நாணயத்தின் பின்புறத்தில் கோட்டு வடிவில் மீன் சின்னம் இருப்பதைக் கண்டேன். ஆக, பின்புறம் கோட்டு வடிவுள்ள மீன் சின்ன நாணயங்கள் அனைத்தும் சங்க கால பாண்டியர் வெளியிட்ட நாணயங்கள் என்று உறுதிப்படுத்தினேன். இந்த நாணயத்தைக் குறித்து 1985 ஆம் ஆண்டு காசிப் பல்கலைக் கழகத்தில் நடந்த அகில இந்திய நாணயவியல் மாநாட்டில் கட்டுரை ஒன்று படித்தேன். பல வரலாற்று பேராசிரியர்கள் கேள்விகளைக் கேட்டு விளக்கம் பெற்றனர்.
நான் படித்த கட்டுரையை 1985 ஆம் ஆண்டு அவர்கள் வருடந்தோறும் வெளியிடும் ஆண்டு மலரில் வெளியிட்டனர். திரு. இஸ்மாயில் அவர்களிடம் வாங்கிய நாணயம் சங்க கால வரலாற்றுக்கு ஒளியூட்டும் என்று நான் கனவிலும் கருதியதில்லை. தமிழ்த்தாயின் அருளால்தான் இந்த நாணயம் எனக்குக் கிடைத்ததாக என் நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்துள்ளேன்.


பெருவழுதி பெயர் நாணயம்

செப்பு நாணயம்: நீளம்: 1.7 செ.மீ., அகலம்: 1.7 செ.மீ., எடை: 4.100 கிராம். இந்த நாணயத்தின் முன்புறம் இடப்புறம் நோக்கி ஒரு குதிரை நின்று கொண்டிருக்கின்றது. அக்குதிரையின் முகத்திற்குக் கீழாக இரண்டு தொட்டிகள் உள்ளன. அத்தொட்டிகளில் இரண்டு ஆமைகள் உள்ளன. குதிரை முகத்தின் அருகிலிருந்து பெருவழுதி என்ற சொல் தொடங்குகிறது. அச்சொல் தொன்மையான தமிழ் - பிராமி எழுத்து வடிவத்தில் இருமுறை பொறிக்கப்பட்டு உள்ளது. குதிரையின் முன்னங்கால்களின் கீழ் ஒரு சின்னத்தைக் காண்கிறோம். தொன்மையான வெள்ளி முத்திரை நாணயங்களில் காணப்படும் அச்சின்னம் மூன்று கையுடைய ஒரு சின்னமாகும். இதனை ஆங்கிலத்தில்  "Triskle' என்று அழைப்பார்கள்.
பின்புறம்: கோட்டு வடிவுடைய மீன் சின்னம்.


இந்நாணயத்தின் காலம்: பெருவழுதி நாணயத்தில் காணப்படும் ழு-கர எழுத்து, மதுரை மாவட்ட மாங்குளம் குகைத் தளத்தில் வெட்டப்பட்டுள்ள தமிழ் - பிராமி எழுத்து வகையை ஒத்துள்ளது. இந்த நாணயத்தில், "பட்டிபேருலு' வகை "வ' வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தில் காணப்படும் சில எழுத்துக்கள் இலங்கையில் காணப்படும் சில குகைத் தளக் கல்வெட்டு எழுத்துக்களை ஒத்திருக்கின்றன. அவற்றின் காலம் கி.மு., 3 முதல் கி.மு., 2 வரையிலான காலமாகக் கணக்கிடப்பட்டு உள்ளது.
 இந்த அடிப்படையில் எண்ணிப் பார்த்தால் கருத்து வேறுபாட்டிற்குரிய இந்த நாணயத்தின் காலத்தை கி.மு., 3 ஆம் நூற்றாண்டாகக் கருதலாம் என்று கூறத் தோன்றுகிறது.


தொல்லெழுத்து அறிஞர்களின் கருத்து


இந்த நாணயத்தின் காலம் குறித்து தமிழ் - பிராமி எழுத்தறிஞரான திரு.ஐராவதம் மகாதேவன் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.


""அந்நாணயத்தில் காணப்படும் சொற்றொடரில் பெருவழுதி - பெருவழுதிஸ என்ற இரு பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மூன்று கையுடைய சின்னத்தை பிராமி எழுத்தான "ஸ' என்று தான் கொள்ள வேண்டும். தமிழ் மொழியில் "பெருவழுதி' என்று எழுதப்பட்டு உள்ளது. அதற்கடுத்தாற்போல் பிராகிருத மொழியில் "பெருவழுதிஸ' என்று பொறிக்கப்பட்டு உள்ளது. அந்நாணயத்தின் காலம் கி.பி., 2 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.'' மத்திய அரசின் முதன்மைத் தொல்லெழுத்து அலுவலராக இருந்த காலம் சென்ற தொல்லெழுத்தறிஞர் திரு.கே.ஜி.கிருஷ்ணன் இந்த நாணயம் குறித்து மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.


""அந்த நாணயம் இரு மொழி நாணயமன்று. பிராகிருத வழக்குப்படி முதல் சொற்றொடர் "பெருவழுதிஸ' என்றால் அடுத்த சொற்றொடர் தமிழ் வழக்குப்படி "பெருவழுதிக்கு' என்று இருக்க வேண்டும். ஆனால் பெருவழுதி என்ற சொல்லுக்குப் பின் எதுவுமில்லை என்பதை கவனிக்கவும். ஒரே பெயரை இரண்டு முறை ஏன் பொறிக்க வேண்டுமென்பது ஆய்விற்குரியது. பெருவழுதி என்ற பெயர் முதலில் "பட்டிபேருலு' எழுத்து வகையைப் பயன்படுத்திப் பொறிக்கப்பட்டுள்ளது.  இரண்டாவது "பெருவழுதி' என்ற சொற்றொடர் தமிழ் முறையைப் பயன்படுத்தி பொறிக்கப்பட்டு உள்ளது. விவாதத்திற்குரிய இந்த நாணயம், தமிழகத்தின் வட பகுதியில் புழக்கத்திற்காக வெளியிடப்பட்டு இருக்கலாம். ஆனால் உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. ஒரு வேளை "பட்டிபேருலு' எழுத்து முறை வழக்கிலிருந்த பகுதிகளிலும் பெருவழுதியின் ஆட்சி இருந்திருக்கலாம். அசோகரின் எழுத்து முறை தக்காணத்தில் பரவுவதற்கு முன்பே இந்த நாணயம் வெளியிடப்பட்டு இருக்கலாம்.''


திரு.ஐராவதம் மகாதவன் எழுப்பிய சந்தேகத்திற்கு 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் விடை கிடைத்தது. இலங்கையில் கிடைத்த பிற்கால ரோமானிய செப்புநாணயங்களைப் பற்றி ஆய்வு செய்ய, கொழும்பு நகரத்திலுள்ள இலங்கை தலைமை அருங்காட்சியகத்திற்குச் சென்றிருந்தேன். பல நாட்கள் சென்று அவர்களின் தொகுப்புக்களை பார்வையிட்டேன். அங்கு நாணயவியல் காப்பாளராக இருந்த திரு.செனரத் விக்ரமசிங்கே அவர்கள் என் நண்பர்.  நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, பிரிக்கப்படாத ஒரு காகிதப் பொட்டலத்தை எடுத்து வந்து என்முன் ஒருநாள் வைத்தார். பொட்டலத்தின் மேல் தூசியும், அழுக்கும் படிந்திருந்தன. பொட்டலத்தை பிரித்த போது என் வாழ்வில் அதுவரை அடையாத பெருமகிழ்ச்சியடைந்தேன்.  அப்பொட்டலத்தில் எழுபது சங்க கால செப்பு நாணயங்கள் இருப்பதைக் கண்டேன். பல உடைந்திருந்தன. திரு.ஹெட்டி ஆராச்சி என்ற நாணயவியல் அறிஞர் அந்த நாணயங்களை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். இந்த தொகுப்பில் உள்ள ஒரு நாணயம் தான் "பெருவழுதி - பெருவழுதிஸ' குழப்பத்தைத் தீர்த்து வைக்க உதவியது. அந்த நாணயத்தின் படமும், வரைபடமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


மதுரையில் கிடைத்த பெருவழுதி நாணயத்தில், குதிரைச் சின்னத்தின் முன்னங்கால்களின் கீழ்"Triskle' என்ற மூன்று கையுடைய சின்னம் இருப்பதாக நான் எழுதியிருந்தேன். அச்சின்னம் மூன்று கையுள்ள சின்னமல்ல அது பிராமி எழுத்து "ஸ' என்று படிக்க வேண்டுமென்று திரு.ஐராவதம் மகாதேவன் எழுதினார். மூன்று கையுள்ள கைச் சின்னம் தொன்மையான வெள்ளி முத்திரை நாணயங்களில் காணப்படும் சின்னம்.  அந்த நாணயங்களின் காலம் கி.மு., ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து துவங்குகிறது. வெள்ளி முத்திரை நாணயங்களில் பல வகையான சின்னங்களை பார்க்க முடியும். அந்த வகையில் "டவுரின்' சின்னமும் ஒன்று. இலங்கை அருங்காட்சியகத்தில் கண்ட பெருவழுதி நாணயம் ஒன்றில் குதிரையின் அடி வயிற்றுக்கு கீழ் "டவுரின்' சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதை கண்டேன்.  ஆக, பெருவழுதி நாணயங்களின் குதிரைச் சின்னம் முன்னங்கால்களின்  கீழ், எழுத்துப் பொறிக்கப்படவில்லை, சின்னங்களைத்தான் பொறித்தனர் என்பது உறுதியாயிற்று. திரு.ஐராவதம் மகாதேவன் கருத்து தவறானது என்பது இக்கண்டுபிடிப்பு உறுதிப்படுத்தியது. என்னுடைய கருத்தும், திரு.கே.ஜி.கிருஷ்ணனின் கருத்தும் சரியானவை என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது.


இந்த நாணயத்தின் காலம் கி.மு., மூன்றாம் நூற்றாண்டு அல்லது இரண்டாம் நூற்றாண்டு என்று கொள்வதில் எந்தத் தவறுமில்லை. பெருவழுதி நாணயம் தமிழகத் தொன்மை வரலாற்றின் மகுடமாக உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X