சேலம்:சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஒரு பெண் உட்பட 10 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பெங்களூருவிலிருந்து, ஹாலந்தா என்ற தனியார் சொகுசு பஸ், 35 பயணிகளுடன், கேரள மாநிலம் கொடாரக்கரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல், சேலத்திலிருந்து தர்மபுரி நோக்கி ஜெயஸ்ரீ என்ற தனியார் பஸ், 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. நேற்று இரவு 10.30 மணியளவில், சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த பண்ணப்பட்டி அருகே சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இரு பஸ்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.மோதிய வேகத்தில், இரு பஸ்களும் சுக்கு நூறாக நொறுங்கியது. விபத்தில், ஒரு பெண் உட்பட, 10 பேர் பலியாகினர்.
தகவலறிந்த, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூசணம், போலீஸ் எஸ்.பி., மயில்வாகனன் ஆகியோர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, ஓமலூர் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால், மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. விபத்தில், இறந்தவர்கள் குறித்த விபரம் உடனடியாக தெரியவில்லை. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE