உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் : அ.பன்னீர் செல்வம், சூணாம்பேடு, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:

தி.மு.க., தலைவர், ஸ்டாலின் சமீபத்தில் நடந்த, அக்கட்சியின் கூட்டத்தில் பேசியவற்றைப் பாருங்கள்... 'தமிழகத்தில் நடப்பது, கட்சியின் ஆட்சி அல்ல; கும்பலின் ஆட்சி. தமிழகத்தில் தொழில் துவங்க, பெரிய நிறுவனங்கள் ஏதும் வரவில்லை. பா.ஜ.,வின் பாதத்தில் பூனைக்குட்டி போல், அ.தி.மு.க., படுத்துக் கிடக்கிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தமிழகம் மீட்கப்படும்' என, அவர் கூறியுள்ளார். இப்போது ஸ்டாலின் பேசுவது எல்லாம், கடந்த கால, தி.மு.க., ஆட்சியின் அவலத்தைத் தான் நினைவூட்டுகின்றன. தி.மு.க., ஆட்சியின்போது, அனைத்து துறைகளிலும் அராஜகம் தலைவிரித்தாடியது. தனக்கு எதிராக உண்மைகளை வெளியிடும் பத்திரிகை மீது தாக்குதல், சினிமா துறையினருக்கு மிரட்டல் என, எண்ணற்ற களேபரங்கள் நடந்தன.
ஆளுங்கட்சியினரின் கையாளாக, போலீசார் நடந்து கொண்டனர். அன்றைக்கு காவல் துறையினர் மீது, மக்களுக்கு நன்மதிப்பு இல்லை. எதிர்க்கட்சியினராக இருக்கும் நிலையில் கூட, பிரியாணி கடை, பியூட்டி பார்லர், பஜ்ஜி கடை மீது, தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தினரே... அதிகாரத்தில் இல்லாதபோதே, இவ்வளவு ஆட்டம் போடும், தி.மு.க.,வினரிடம், ஆட்சி அதிகாரம் கிடைத்தால், தமிழகம் தாங்குமா? தி.மு.க., மாவட்டச் செயலர்கள், குறுநில மன்னர் போல
அத்துமீறி நடந்து கொண்டனரே... அது தான், கும்பலின் ஆட்சி. தமிழகத்தில் பெரிய நிறுவனங்களுக்கு, துவங்கவும், விரிவாக்கவும் தடை போடுவது, எதிர்க்கட்சியாக இருக்கும், தி.மு.க., தானே! இலங்கையில் நடந்த இன படுகொலையின் போதும், '2 ஜி' விவகாரத்தில் சிக்கியபோதும், அப்போதைய, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் காலடியில், பூனை போல், தி.மு.க., படுத்துக் கிடந்ததை, ஸ்டாலினுக்கு நினைவுபடுத்த வேண்டும்.

தமிழக மக்கள், இவை எல்லாவற்றையும் மறந்து, குடும்ப ஆட்சிக்கு முடிசூட்டி விடுவர் என, ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். என்றைக்கு, தன் கட்சியினரை நம்பாமல், பல கோடி ரூபாய் கொடுத்து, அரசியல் ஆலோசனைக்காக, பிரசாந்த் கிஷோரின் குழுவை நியமித்தாரோ,அன்றைக்கே, தி.மு.க.,வின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்டது. தி.மு.க., ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால், என்ன நடக்கும் என்பது, மக்களுக்கு தெரியும்; அவர்கள், மறதி மன்னர்கள் அல்ல என்பதை, காலம் நிரூபிக்கும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE