செய்தி செய்தி

தமிழ்நாடு

பக்திக்கு ஒரு மொழி தமிழ் மட்டுமே : பொன்னம்பல அடிகள் பெருமிதம்

Added : ஜூன் 26, 2010 | கருத்துகள் (2)
Advertisement
பக்திக்கு ஒரு மொழி தமிழ் மட்டுமே : பொன்னம்பல அடிகள் பெருமிதம்

கோவை : ""ஜாதி, சமயற்ற இலக்கியங்களை கொண்டுள்ள மொழி தமிழ்,'' என்று செம்மொழி மாநாட்டில் நேற்று நடந்த கருத்தரங்கில், குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பேசினார்.

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூன்றாவது நாளான நேற்று, "செம்மொழி தகுதி' என்ற தலைப்பில், கருத்தரங்கு நடந்தது. பேராசிரியர் வ.செ.குழந்தைசாமி தலைமை வகித்தார். துவக்க உரையில், கவிஞர் மன்னர் மன்னன் பேசியதாவது: செவ்விய இலக்கியத்தை உடைய மொழியை, "செம்மொழி' எனப் போற்றுகின்றனர். செவ்விய இலக்கியம் உள்ள மொழியில், தொன்மை, வளமை, இலக்கிய செழிப்புகள் இருக்க வேண்டும். இத்தகைய தொன்மையும், வளமையும் உள்ள உலக மொழிகள் இரண்டு மட்டுமே. இவை, சீன, இந்திய மொழிகள் தான். இந்த மொழிகள், 6000ம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகவே கருதுகின்றனர். இந்திய மொழிகளில் தொன்மை வாய்ந்த மொழியாக தமிழ் உள்ளது. இலக்கிய வளம் வாய்ந்தததாகவும் தமிழ் உள்ளது. இதற்கு சான்றாக, தமிழ் மொழியில், 475 சங்க கால இலக்கியங்கள் உள்ளன. கி.மு.,200 முதல் கி.பி.,400 ஆண்டுகளுக்கு இடையில் தமிழ் கவிஞர்களால் இயற்றப்பட்ட பல இலக்கியங்கள் இதுவரை அழியாமல் புகழ் பெற்றதாக உள்ளது. 400 ஆண்டுகளில், 500 கவிஞர்கள் எழுதிய இலக்கிய தரம் இதுவரை அழியவில்லை. நிலைத்து நிற்கிறது. நான்கு வகை இலக்கியங்கள், பழமையானவையாக உள்ளன. இத்தகைய இலக்கணம், எந்த மொழிக்கும் கிடையாது. எந்த மொழியிலும் இலக்கியம் இவ்வளவு தொன்மை வாய்ந்ததாக இல்லை.

தமிழ் மொழி, மூன்று மொழிக்கு தான் தாய்மொழியாக இருப்பதாக அறிந்தனர். தமிழ் மொழி வரலாற்றில், தமிழ், மலையாளம், தெலுங்கு போன்றவற்றின் தாய்மொழியாக இருப்பதாக, பார்போன் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்திருந்தார். 1856ம் ஆண்டில், தமிழ், ஒன்பது மொழிகளுக்கு தாய்மொழியாக இருப்பதாக தெரிவித்தனர். 1900ம் ஆண்டில், இது 14 மொழிகளுக்கு தாய்மொழி என அறிந்தனர். 1960களில், 30 மொழிகளின் தாய்மொழியாக இருக்கும் என தெரிவித்தனர். சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழி, தனி குடும்பத்தை கொண்டிருப்பதாக பின்னர் வந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போதைய ஆய்வுகளில், கொரியா, ஜப்பானிய, ஜெர்மனிய மொழிகளை ஒத்திருப்பதால், "தமிழ் மொழியிலிருந்து, இம்மொழிகள் தோன்றியிருக்குமோ' என்ற ஐயத்துடன் ஆய்வுகள் துவங்கியுள்ளன. அவ்வாறு இருக்குமானால், உலக மொழிகளுக்கு எல்லாம், தாய்மொழியாக தமிழ் இருக்கும். இவ்வாறு கவிஞர் மன்னர் மன்னன் பேசினார்.

"பண்பாட்டு கொடையில்' என்ற தலைப்பில், வளனரசு பேசுகையில்,""தமிழ் சிறந்த விருந்தோம்பல் பேராண்மை கொண்டதாக உள்ளது. கடலில் கிடைக்கும் சங்கு, ஆயிரத்தில் ஒன்று வலம்புரி சங்காக இருக்கும். இதை காதில் வைத்து கேட்டல் மூலம் அறிய முடியும். வலம்புரி சங்கு நூறில் ஒன்று, ஓசை உடையதாக இருக்கும். இதை "சலம்சலம்' என அழைக்கின்றனர். உலகத்தில் ஒரே சங்கு, பஞ்சசன்யம் என அழைக்கின்றனர். இவ்வாறு, பல்வேறு வகைகளை வகைப்படுத்திய பெருமை ,தமிழ் மொழியில் உள்ளது. "கப்பலை' குறிக்கும் சொல்லாக, 25 பெயர்கள் தமிழில் உண்டு.
இவ்வாறு வளனரசு பேசினார்.

"இலக்கிய செழுமையில்' என்ற தலைப்பில், பேராசிரியர் அழகப்பன் பேசியதாவது: இலக்கிய அமைப்புக் கொண்ட தொன்மை மொழியாக தமிழ் மொழி உள்ளது. இந்திய அளவில் 13 மொழிகளில் ஒன்றாக இருந்த தமிழ் மொழியை, செம்மொழியாக அறிவிக்கச் செய்து, முதல் இடத்திற்கு கொண்டு வந்த பெருமை முதல்வருக்கு உண்டு.  செழுமை என்ற சொல்லுக்கு, நிறைவு, மாட்சி, செல்வச் செழிப்பு என்ற பொருள் உண்டு. இத்தகைய செழுமையான பண்பு, தமிழ் மொழிக்கு உண்டு. சங்க கால இலக்கியங்கள், 2,381 உள்ளன. இவற்றில், அகம் சார்ந்தவை 1,862; புறம் சார்ந்தவை 1,019. சங்கப்புலவர்கள் 409 பேர் இருந்தனர். நில வகைப்படுத்தல், தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. பாலை, நெய்தல், மருதம் உள்ளிட்ட நான்கு இலக்கிய கட்டமைப்புகள் தமிழ் இலக்கியத்தில் உண்டு.  தமிழை கோவிலாக கருதினால், அதில் அடித்தளமிடும் நான்கு இலக்கியங்கள். நுழைவு வாயிலாக 45 இலக்கியங்களை தொல் காப்பியம் கொண்டிருக்கும். மேல்நிலை மாடமாக பல்வேறு நூல்கள் உள்ளன. சங்க கால இலக்கியம், நீதி நூல்கள் போன்ற நூல்கள் இடம் பெற்றுள்ளன. நீதி நூல்களில் திருக்குறள் பெரும் திறம் வாய்ந்தது. சைவ சித்தாந்தம், தனிப்பாடல், இஸ்லாமிய இலக்கியங்கள் உள்ளிட்ட பல, தமிழுக்கு அணி சேர்க்கின்றன. இயல் இசை நாடகம், நாட்டுப்புறவியல் போன்றவை கோபுரத்தில் பொம்மைகளாக திகழ்கின்றன.  இவ்வாறு பேராசிரியர் அழகப்பன் பேசினார்.

"உலகப்பொதுமையில் செம்மொழி தகுதி' என்ற தலைப்பில், பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் பேசியதாவது: தமிழ் நூல்களில் பெரும்பாலானவை, "உலகம்' என்பதிலே துவங்குகிறது. உலகை நோக்கி, தமிழ் மொழி வளர்ச்சி பெற்று வருகிறது. உலக நில வகைகளை ஐந்து பிரிவாகவும், வாழ்க்கையை அகம்-புறம் என இரு பிரிவுகளாகவும் பிரித்துள்ளது தமிழ் மொழி. மேல்நாட்டு அறிஞர்கள் கூறாத கருத்துக்கள் கூட, தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு, இளம்பிறை மணிமாறன் பேசினார்.

இதையடுத்து, "இலக்கண செப்பத்தில் செம்மொழி தகுதி' என்ற தலைப்பில், பேராசிரியர் இலக்குவனார் மறைமலை பேசுகையில்,""உலக மொழிகளில் குறைந்த எழுத்துக்களை கொண்ட மொழியாக தமிழ் உள்ளது. 30 எழுத்துக்கள் மட்டுமே தமிழ் மொழியில் உள்ளன. இதை தொடர்ந்தே எழுத்துக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரு பாலரையும் குறிக்கும் பொதுவான சொல், தமிழ் மொழியில் மட்டுமே உண்டு. ஆண், பெண் இரண்டையும் "ஒருவர்' என குறிப்பிடும் பண்பு, தமிழ் மொழிக்கே உள்ள சிறப்பு,'' என்றார்.

"தொன்மை'யில் செம்மொழித்தகுதி என்ற தலைப்பில் பொன்னம்பல அடிகள் பேசியதாவது: ஒவ்வொரு மொழிக்கும் ஒரு மொழிச் சிறப்பு உண்டு. வணிகத்திற்கு ஆங்கிலமும், காதலுக்கு இத்தாலியும், தத்துவத்திற்கு ஜெர்மனியும் போல, பக்திக்கு ஒரு மொழி என்றால், அது தமிழ் மட்டுமே. முன் தோன்றிய தமிழ் இலக்கியங்களில், ஜாதி, சமயங்கள் இல்லை. ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது தொல்காப்பியம். இலக்கணம் 10 ஆயிரம் ஆண்டுக்கு முன் தோன்றியதாக இருக்க வேண்டும். இங்கு தோன்றிய நாகரீகங்கள், பல சர்வதேச அளவில் தோன்றிய நாகரீகங்களுடன் தொடர்புள்ளவையாக உள்ளன. வரலாற்று இலக்கியங்களில், வெவ்வேறு நகரங்களில் தொடர்புள்ளவையாக இவை உள்ளன. இவ்வாறு பொன்னம்பல அடிகள் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
குமரன் - சென்னை,இந்தியா
26-ஜூன்-201022:59:45 IST Report Abuse
குமரன் சிவனையல்லால் வேறெவரையும் பாடமாட்டேன் என்றும் இறைவனை அல்லாது எந்த மனிதரையும், அவர் அரசரே என்றாலும், பாடமாட்டேன் என்றும் வாழ்ந்த திருமரபு நமது முனிவர்களின், சிவனடியார்களின் மரபு. நமது திருமடங்களின் தலைமையில் அமர்ந்தவர்கள் தமது உரைக்கு முன்னரும் பின்னரும் "திருச்சிற்றம்பலம்" என்று முழங்குதல் மரபு. தவத்திரு பொன்னம்பல அடிகளார் "திருச்சிற்றம்பலம்" என்ற வார்த்தையை உச்சரிக்காமல் கலைஞர் புகழ் போற்றிய விதம் சிவனடியார்களின் மனம் புண்பட வைத்தது. அடிகளார் சிவனடியார் அல்லரோ கலைஞர் அடியார்தாமோ என்ற ஐயப்பாடு எழுந்தது. திருச்சிற்றம்பலம்.
Rate this:
Share this comment
Cancel
இபு பாரிஸ் - SARCELLES,பிரான்ஸ்
26-ஜூன்-201022:45:56 IST Report Abuse
இபு பாரிஸ் இவ்வளவு அறிவாளியான பொன்னம்பல அடிகள் வாழ்கையில் தாம்பத்தியம் என்பது எவ்வளவு முக்கியம் என தெரியாமல் போய்விட்டது பெரிய துரதிஷ்டம்.எந்த இலக்கியத்திலும் துறவறத்தை ஆதரிக்க வில்லை.துறவறத்தை எந்த மதம் இனம் ஆதரித்து இருந்தால் இனவிருத்தியே இல்லாமல் போய் இருக்கும்.துறவறம் சமுதாய துரோகம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X