சென்னை: நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும் எனவும் கடந்தாண்டை விட நடப்பாண்டு நிதி பற்றாக்குறை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது என்றும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்று (பிப்.,23) இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விநாயகர் கோயிலில் வழிபட்டார். நிதி அமைச்சராக, 11வது முறையாக, இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். நிதியமைச்சரை பட்ஜெட் தாக்கல் செய்ய சபாநாயகர் தனபால் அழைத்தபோது, எதிர்க்கட்சி வரிசையில் உள்ள திமுக.,வின் துரைமுருகன் பேச முற்பட்டார். இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர். பின்னர் பன்னீர்செல்வம் பேசியதாவது:

இந்த அரசு, மே மாதம் ஆட்சி காலத்தை நிறைவு செய்ய உள்ளது. ஆளுமைத் திறன் குறியீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கொரோனா தடுப்பு, மீட்பு பணிகளுக்காக ரூ.13,352.85 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் கூட முதலீட்டை ஈர்க்க தமிழக அரசு பணியாற்றியது. தமிழகத்தில் கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளது. கொரோனா காலத்தில் சுகாதாரம், காவல், வருவாய், ஊரக வளர்ச்சித்துறையினர் அயராது உழைத்தனர். இதனால், கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தியதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. 98.05 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மத்திய அரசின் உத்தரவுப்படி கொரோனா தடுப்பூசிகள் 3.85 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் குறுகிய கால பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும். கடந்தாண்டை விட நடப்பாண்டு நிதி பற்றாக்குறை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது. தமிழகத்திற்கு வழங்கப்படும் பேரிடர் நிவாரண நிதி போதுமானதாக இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE