சென்னை: கடந்த 2016 சட்டசபை தேர்தலை போல், இந்த தேர்தலிலும் 11 அமைச்சர்கள் தொகுதிகளில் 80 சதவீதத்திற்கு மேல் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. இதற்கு தங்கள் மீதோ அல்லது அரசு மீதான அதிருப்தியோ காரணம் இல்லை என தெரிவித்து உள்ள அமைச்சர்கள், வாக்காளர்களை சந்தித்து பேசி ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வர நிர்வாகிகளை நியமித்ததே ஓட்டு அதிகரிக்க காரணம் எனக்கூறினர்.
முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கேசி கருப்பணன், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கேபி அன்பழகன், செங்கோட்டையன், சரோஜா, வீரமணி, ஓஎஸ் மணியன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் தொகுதிகளில் 80 சதவீதம் மற்றும் அதற்கும் மேல் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் போட்டியிடும் பாலக்கோடு தொகுதியில் - 87.33 சதவீதம்
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் போட்டியிடும் கோபி செட்டிபாளையம் தொகுதியில் 82.5 சதவீதம்
முதல்வர் பழனிசாமி போட்டியிடும் இடைப்பாடியில் 85.6 சதவீதம்
அமைச்சர் சரோஜா போட்டியிடும் ராசிபுரம் தொகுதியில் 82.1 சதவீதம்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலை தொகுதியில் 85.4 சதவீதம்
உணவுத்துறை அமைச்சர் காமராஜ் போட்டியிடும் நன்னிலம் தொகுதியில் 82 சதவீதம்
அமைச்சர் கருப்பணன் போட்டியிடும் பவானி தொகுதியில் 83.7 சதவீதம்
அமைச்சர் வீரமணி போட்டியிடும் ஜோலார்ப்பேட்டையில் 80.9 சதவீதம்
போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் போட்டியிடும் கரூரில் 83.5 சதவீதம்
அமைச்சர் ஓஎஸ் மணியன் போட்டியிடும் வேதாரண்யம் தொகுதியில் 80.6 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கூறுகையில், தொகுதியில் அரசுக்கு எதிராக எந்த அதிருப்தியும் இல்லை. 10 பேர் கொண்ட குழுக்களை அமைத்துள்ளேன். ஒவ்வொரு குழுவும் 100 பேரை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வரும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஜெயலலிதாவும், பழனிசாமியும் எனது தொகுதிக்கு நிறைய பணிகளை செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்

போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கூறுகையில், கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் தலா 25 குடும்பத்தினரை பேசி ஓட்டுப்போட வலியுறுத்த அறிவுறுத்தப்பட்டனர். முதியவர்களும் ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வரப்பட்டனர். என தெரிவித்தார்.

சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறுகையில், தொகுதி மக்கள் இடையே காணப்பட்ட எழுச்சி காரணமாக, கிராமப்புற பகுதிகள் நிறைந்த விராலிமலையில், கடந்த தேர்தலை விட இந்த முறை அதிகளவு ஓட்டுக்கள் பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், திமுகவினர் கூறுகையில், கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாலக்கோடு மற்றும் விழுப்புரம் பகுதியில் அதிக ஓட்டுகள் திமுகவுக்கு கிடைத்ததால் பாமக.,வின் அன்புமணி மற்றும் வடிவேல் ராவணன் தோல்வி அடைந்தனர். அதேபோன்ற சூழ்நிலை மீண்டும் நடக்கும் என்றனர்.
சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் சுபாஷ் கூறுகையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அமைச்சர்கள் ஒவ்வொருவரும் பிராந்திய தளபதிகளாக மாறினர். திருமங்கலம் மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதியில் ஓட்டு சதவீதம் அதிகரிக்க ஜாதி, வளர்ச்சிப்பணி மற்றும் கட்சி நிர்வாகிகளின் பிரசாரம் ஆகியவை முக்கிய காரணிகளாக அமைந்தன.
அரசியல் நோக்கர் சத்தியமூர்த்தி கூறுகையில், அதிக ஓட்டுப்பதிவுவையும் அரசு மீது அதிருப்தியையும் தொடர்பு படுத்தி பேசுவது தற்போது செல்லுபடியாகாது. கடந்த சில ஆண்டுகளாக ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. தற்போது அதிக ஓட்டுப்பதிவு அமைச்சர்களுக்கு உதவுமேயானால், அதற்கு தொகுதியில் செய் நலப்பணிகள், மற்றும் ஜாதியும் தான் முக்கிய காரணமாக இருக்கும் என தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE