மும்பை: மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வெடித்தது. இதே போல், ஜாவேரி பஜார் பகுதியில் 2வது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மூன்றாவது குண்டுவெடிப்பு தெற்கு மும்பையில் உள்ள ஓபரா ஹவுஸ் அருகே நடந்துள்ளது. அனைத்து குண்டுவெடிப்பும் மக்கள் நெரிசல் அதிகமுள்ள இடங்களிலும், பரபரப்பான நேரத்திலும் நடந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்புகளில், 20 பேர் பலியானதாகவும், 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் 4 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1993ம் ஆண்டு, இதே ஜாவேரி பஜாரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது. நகரில் தொடர்குண்டுவெடிப்புகள் நடத்ததப்பட இருப்பதாக போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு மர்ம அழைப்பு வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு தேசிய புலனாய்வு துறையினர் விரைந்துள்ளனர்.
ஜாவேரி பஜார் பகுதியில் இருந்த மீட்டர் பெட்டி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது. இதே போல், தாதர் பகுதியில் கபுதார் கானா என்ற இடத்தில் கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்தது. வெடிகுண்டு சம்பவத்தையடுத்து, நாடுமுழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தாக்குதல்: மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல் என உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், ஜாவேரி பஜார் பகுதியில் வெடிக்காத குண்டு ஒன்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகள் குறித்து ஆய்வு நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மும்பை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து டில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE