ராசிபுரம்: "மஞ்சள் பயிரிடும் விவசாயிகள், நவீன தொழில் நுட்பங்களை
பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம்' என, வெண்ணந்தூர் தோட்டக்கலை உதவி
இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட
அறிக்கை:ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில்,
மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மஞ்சளில் அதிக லாபத்தை பெற நவீன
தொழில் நுட்பங்களான சொட்டுநீர் பாசனத்தை அமைத்து, நீர்வழி உரமிட்டு முறையாக
கடைபிடிக்க வேண்டும்.அதன் மூலம், மஞ்சளில் கூடுதல் மகசூல் பெறலாம்.
மேலும், களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. பயிர் வளர்ச்சி ஒரே சீராக
இருப்பதுடன், குறைந்த அளவு தண்ணீர் கொண்டு அதிக அளவு பரப்பில் மஞ்சள்
சாகுபடி செய்யலாம். தொடர்ந்து, மண் வளம், நீர்வளம், தட்பவெட்ப நிலை ஆகிய
உத்திகளை ஆராய்ந்து, அதற்கேற்ப மஞ்சள் ரகத்தினை தேர்வு செய்து பயிரிட
வேண்டும்.
ஹெக்டேருக்கு, 1,500 முதல், 2,000 வரை விதையளவு இருக்க வேண்டும்.
மஞ்சள் நடவு செய்யும் முன், கார்பன்டைசியம் இரண்டு கிராம்,
மானோகுரோட்டோபாஸ் இரண்டு மில்லி, ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து
தயாரிக்கப்பட்ட மருந்து கரைசலில், 15 நிமிடம் வைத்த பின் நடவு செய்ய
வேண்டும்.அதற்கு முன் வயலை மூன்று முதல் நான்கு தடவை வரை நன்கு உழவு செய்ய
வேண்டும். கடைசி உழவில் ஹெக்டேருக்கு தொழு எரு, 25 டன், வேப்பம்
புண்ணாக்கு, 200 கிலோ, யூரியா, 55 கிலோ, 335 சூப்பரும், 30 கிலோ பொட்டாஷ்,
30 கிலோ ஃபொரஸ்கல் பேட், 10 கிலோ அசோஸ்பைரில்லம், 10 கிலோ பாஸ்போ
பாக்டீரியா என்ற அளவில் இட வேண்டும்.வரிசைக்கு வரிசை, 45 செ.மீ., செடிக்கு
செடி, 15 செ.மீ., என்ற அளவில் பார் அமைத்து நடவு செய்ய வேணடும்.
மேற்குறிப்பிட்ட நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, மஞ்சள் பயிரிட்டுள்ள
விவசாயிகள் அதிக லாபத்தினை பெறலாம். மேலும் விபரங்களுக்கு, உதவி இயக்குனர்
அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.