'போதும், போதும், நான் போகிறேன்!' ; ரூ.3,500 கோடி முதலீடு நிறுவனத்தை வாட்டி வதைக்கும் கேரள அரசு

Updated : ஜூலை 04, 2021 | Added : ஜூலை 04, 2021 | கருத்துகள் (41) | |
Advertisement
கேரள மாநில அரசின் தொல்லை தாங்காமல், 'தொழிலை விட்டு வெளியேறுகிறேன்' என்று சொன்ன, 'கிடெக்ஸ்' குழும நிறுவனங்களை தக்கவைத்துக் கொள்ள, கேரள தொழில்துறை அமைச்சர் கெஞ்சுகிறார். கேரள மாநிலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு உள்ளது.பல உதாரணங்கள்கம்யூனிஸ்ட்கள் என்றாலே, தொழில்துறையினரை பெரிதாக வளர விட

கேரள மாநில அரசின் தொல்லை தாங்காமல், 'தொழிலை விட்டு வெளியேறுகிறேன்' என்று சொன்ன, 'கிடெக்ஸ்' குழும நிறுவனங்களை தக்கவைத்துக் கொள்ள, கேரள தொழில்துறை அமைச்சர் கெஞ்சுகிறார். கேரள மாநிலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு உள்ளது.latest tamil news

பல உதாரணங்கள்


கம்யூனிஸ்ட்கள் என்றாலே, தொழில்துறையினரை பெரிதாக வளர விட மாட்டார்கள் என்பதற்கு ஏற்கனவே பல உதாரணங்கள் உண்டு. சமீபத்திய உதாரணம் தான், கிடெக்ஸ் குழுமம்.இது, இந்தியாவின் மிகப்பெரிய ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. கேரளாவில் 3,500 கோடி ரூபாயில், பல்வேறு தொழில் பூங்காக்களை நிறுவும் திட்டத்தில் இயங்கி வந்தது.

கேரள அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள், இந்நிறுவன செயல்பாடுகள் அனைத்திலும் மூக்கை நுழைத்தனர். கிடெக்ஸ் நிறுவன தலைவரான சாபு எம்.ஜேக்கப், சமூக வலைத்தளத்தில் தன் கோபத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படையாக கொட்டினார்.
அவரது பதிவு:ஒவ்வொரு நாளும், அரசு அதிகாரிகள் எங்கள் அலுவலகத்துக்கு வந்து, நாங்கள் ஏதோ பெரிய மோசடி செய்து விட்டதாக கருதி, விசாரணை மேற்கொள்கின்றனர். அவர்களுடைய தொடர் தொல்லையால், வெறுத்துப் போய்விட்டேன்.


latest tamil newsஅரசு எங்களை ஏதோ பெருமுதலாளிகளை போலவும், சுரண்டல்காரர்கள் போலவும், நிலத்தை அபகரிக்க வந்தவர்கள் போலவும் நடத்துகிறது; இனிமேல் தாங்க முடியாது. இவ்வாறு சாபுஎம்.ஜேக்கப் தெரிவித்து இருந்தார்.எச்சரிக்கை


கூடவே, 2020ல் முதலீட்டாளர் மாநாட்டில் போட்ட 3,500 கோடி ரூபாய் புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தத்தை 'வாபஸ்' வாங்கியதோடு, 'தற்போதுள்ள நிலை தொடருமானால், என் நிறுவனங்களை வேறு மாநிலங்களுக்கு மாற்றிக் கொள்வேன். இந்த மோசமான சூழ்நிலை தொடருமானால், இந்த மாநிலமே தொழில்துறையே இல்லாத சுடுகாடாக மாறிவிடும். 'அண்டை மாநிலங்கள் தொழில் துறையினரை பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கும் நிலையில், கேரள அரசு அவர்கள் மீது பாய்ந்து கொண்டு இருக்கிறது. தற்போதுள்ள சூழல், தொழிலதிபர்களை தற்கொலையை நோக்கித் தள்ளப்போவது நிச்சயம்' என்றும் எச்சரித்தார்.

கொச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு மாவட்டங்களில், மிகப்பெரிய ஆயத்த ஆடை பூங்காக்களை நிறுவும் திட்டத்தில் இருந்தார் சாபு. இதன் வாயிலாக 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும், கிடெக்ஸ் நிறுவனத்தில், தற்போது 15 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.சமாதான முயற்சி


கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு, ஒரு தொழிலதிபரிடம் இருந்து, இத்தகைய தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. உடனடியாக, மாநில தொழில்துறை அமைச்சர் பி.ராஜிவ், சமாதான முயற்சியில் இறங்கியுள்ளார். 'கிடெக்ஸ் தலைவர் சாபு எம்.ஜேக்கப், எந்தவிதமான அவசர முடிவும் எடுத்துவிடக் கூடாது. அது, நம் மாநிலத்தின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி விடும். அந்நிறுவன பிரச்னைகளை பற்றி பேச, எங்கள் அரசு தயாராக உள்ளது. தொழிற்துறையைச் சேர்ந்த எவரும், அவரது நிறுவனத்தில் எந்த ரெய்டும் செய்யவில்லை.

'சமூக வலைத்தளங்களில் தன் பிரச்னைகளை சொல்வதைவிட, அந்நிறுவனத்தின் தலைவர், அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளார் ராஜிவ்.


latest tamil news

கம்யூனிஸ்டுக்கு சவால்


இதனிடையே, இன்னொரு விஷயமும் வெளியாகியுள்ளது. தொழில் துறை மீதுள்ள அவநம்பிக்கை மட்டும், கிடெக்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டதற்கு காரணமில்லை. சாபு எம்.ஜேக்கப், 2015ல் 'டுவென்டி - 20' என்றொரு அரசியல் கட்சியும் துவங்கியுள்ளார். அது, முதன் முதலாக, 2015 உள்ளாட்சி தேர்தலில், கிழக்கம்பலம் என்ற சின்ன கிராமத்தில் வெற்றி பெற்றது. அரசியல்ரீதியாக எதிரிகள் எவரும், தலையெடுத்து விடக்கூடாது என்று நினைப்பதில், கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் விதிவிலக்கா என்ன; அதனால், 'டுவென்டி - 20' கட்சியை உடைப்பதில் தீவிரம் காட்டப்பட்டது. ஆனால், அக்கட்சி படிப்படியாக வளர்ந்து வந்தது.

இந்த ஆண்டு நடைபெற்ற கேரள சட்டசபை தேர்தலில், 'டுவென்டி - 20' கட்சியைச் சேர்ந்தவர்கள் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் நின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலுவான சவாலாகவும் இருந்தனர். இதுவும், கிடெக்ஸ் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட தொந்தரவுக்கு, ஒரு காரணமாக கூறப்படுகிறது.


கிடெக்ஸை அழைக்கும் தமிழகம்!


கேரள மாநிலத்தில் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு பூங்காக்களில், முதலீடு செய்வதை கைவிட்ட கிடெக்ஸ் குழுமத்தை, தமிழகம் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக, கிடெக்ஸ் தலைவர் சாபு எம். ஜேக்கப் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசு, முறைப்படி தமக்கு அழைப்பு விடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகம் பல்வேறு சலுகைகளையும், கிடெக்ஸ் குழுமத்துக்கு வழங்க முன்வந்துள்ளது.

கிடெக்ஸ் செய்யும் முதலீட்டில் 40 சதவீதம் மானியம் வழங்கப்படும். சந்தை விலையில் பாதிக்குப் பாதி விலையில் நிலம் வழங்கப்படும். முத்திரைத்தாள் கட்டணத்தில் இருந்து விலக்கு, ஆறு ஆண்டுகளுக்கு, 5 சதவீத வட்டி தள்ளுபடி, மாசுக் கட்டுப்பாடு / சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில், 25 சதவீத மானியம் ஆகியவையும் வழங்கப்படும். மேலும், தொழிலாளர் களுக்கு வழங்கப்படும் 6 மாத பயிற்சியின் போது, ஒவ்வொரு பணியாளருக்கும் 4,௦௦௦ முதல் 6,௦௦௦ ரூபாய் வரை ஊக்கத்தொகை, தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகளில் 50 சதவீத மானியம்.

ஐந்தாண்டுகளுக்கு குறைவான மின்சாரக் கட்டணம், முதலீட்டுக்கு மாநில ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு ஆகியவையும் வழங்கப்படும். எல்லாவற்றுக்கும் மேல், கிடெக்ஸ் நிறுவனம், பணியாளர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தில் அடுத்த பத்தாண்டுகளுக்கு 20 சதவீதத்தை மாநில அரசே வழங்கும் என்றும், அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkeeran - Hosur,இந்தியா
11-ஜூலை-202114:25:17 IST Report Abuse
Nakkeeran வழக்கம்போல அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைவான விலையில் மின்சாரம் என்பதற்கு பதிலாக குறைவான மின்சாரம் என உளறி இருப்பார் போலும் .அவன் தெலுங்கானாவிற்கு ஓடிவிட்டான். தடையில்லா மின்சாரம் என கூற மனசு வரவில்லை
Rate this:
Cancel
mohankumar - Trichy,இந்தியா
08-ஜூலை-202118:16:47 IST Report Abuse
mohankumar இங்கே வந்தபின்னரும் மூட வைத்து விடுவார்கள் ஆட்சி மாறியதும் . ஸ்டெர்லிட் அலையை இவர்கள் தானே கொண்டு வந்தார்கள் பின்னர் இவர்களே மூட வைத்தார்கள் இல்லயாஆஆ .
Rate this:
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
07-ஜூலை-202110:25:11 IST Report Abuse
ganapati sb ஒழுங்காக வரி காட்டுகிறாரா என்பதை மட்டும் உறுதி செய்து விட்டு நமது நாட்டு பொருளாதார வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு நமது தொழில்துறை வைஸ்யர்களுக்கு நாம் ஊக்கம் தகுந்த கொடுக்க வேண்டும் அப்போதுதான் மக்கள் அவசியமின்றி அடுத்த மாநிலங்கள் அயல்நாடுகள் என செல்லாமல் உள்ளூரிலேயே கவுரவமாக உயர முடியும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X